2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

நீண்ட கால அடிப்படையிலான பொருளாதாரத் திட்டத்தின் தேவை

ச. சந்திரசேகர்   / 2020 ஜூன் 20 , மு.ப. 08:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

பின்தங்கிய பிரதேசங்களுக்கு நிதிச் சேவைகளை வழங்குவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்

தனிநபர்கள், வியாபாரங்களுக்கான ஊக்குவிப்புத் திட்டங்களை, அரசாங்கம் துரிதப்படுத்தி வருவதைக் காண முடிகின்றது.

தேர்தல் ஒருபுறமிருக்க, நாட்டின் பொருளாதாரம் சவாலான நிலையை எதிர்கொண்டுள்ளமை காரணமாக, அதைச் சீராகப் பேணுவதற்காகவும் இவ்வாறான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்கின்றது. இதன் ஓi' அங்கமாக, கடந்த வாரம் ஜனாதிபதி, இலங்கை மத்திய வங்கியின் அதிகாரிகளுடன் முன்னெடுத்த சந்திப்பில், நாட்டின் பொருளாதாரத்தைச் சீராகப் பேணுவதற்கு, மத்திய வங்கியால் எவ்விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை எனப் பகிரங்கமாகச் சாடியிருந்தார். இது துறைசார் நிபுணர்கள் மத்தியில், ஒரு சலசலப்பை ஏற்படுத்தி, கடந்த வாரத்தின் பிரதான பேசு பொருளாக அமைந்திருந்தது.

இவ்வாறு அரசாங்கம் நிவாரணத் திட்டங்கள் குறித்துக் கவனம் செலுத்துவதற்கு மேலதிகமாக, நாட்டின் வங்கிச் சேவைகளையும் காப்புறுதிச் சேவைகளையும் அணுகாத அல்லது அணுக முடியாத நிலையிலுள்ள மக்களை, இந்தச் சேவைகளைச் சென்றடைவதற்கான கொள்கைத் திட்டங்களை வடிவமைப்பது தொடர்பில் கவனம் செலுத்துவது, ஒரு பிரதான தேவையாக அமைந்துள்ளது.

இந்த நிலையிலுள்ள மக்களை, நாட்டின் உறுதியான நிதிக் கட்டமைப்பையும் பாரிய பொருளாதாரத்துக்கு உள்ளும் ஈடுபடுத்த வேண்டிய தேவை காணப்படுகின்றது. இவ்வாறான கொள்கைகள், வடிவமைக்கப்படுவதனூடாக, தற்போது நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதாரச் சவாலுக்கு ஒருவகையில் தீர்வைத் தேடக்கூடியதாக இருக்கும்.

குறிப்பாக, நாட்டின் பின்தங்கிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களும், ஏதோ ஒருவகையிலான வர்த்தகம், நிதிசார் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடத்தான் செய்கின்றனர். இவ்வாறான தரப்பினருக்குச் சேவைகளை வழங்கவென, கிராமிய வங்கிகள் சில நாட்டில் காணப்பட்ட போதிலும், அவற்றில் இந்த வகையான மக்களைத் தம்முடன் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடச் செய்வதற்கு, எந்த வகையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது ஒரு புதிராக அமைந்துள்ளது.

நாட்டின் 83 சதவீதமான வயது வந்தவர்கள், வங்கிக் கணக்கொன்றைக் கொண்டிருந்த போதிலும், அவர்கள் வங்கிச் சேவைகளைப் பயன்படுத்துவது என்பது மிகவும் மட்டுப்படுத்தப்பட்டதாக அமைந்துள்ளது. குறிப்பாக, இந்தப் பின்தங்கிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள், அதிகளவு அரச வங்கிகளில் தமது கொடுக்கல் வாங்கல்களைப் பேணுவதில் நாட்டம் கொண்டிருப்பார்கள். தனியார் துறை வங்கிகளில் அண்மைக் காலமாக வங்கிக் கணக்கொன்றில் காணப்பட வேண்டிய ஆகக்குறைந்த மீதித் தொகை தொடர்பான வரையறாக்கள் அறிமுகம் செய்யப்பட்டிருந்தன. குறிப்பாக, 1,500 ரூபாயை விட, கணக்கு மீதி குறைவாகக் காணப்படுமிடத்து, அந்தக் கணக்கிலிருந்து 25 ரூபாயைத் தண்டமாக மாதாந்தம் அறவிடும் முறைமையொன்றையும் சில தனியார் வங்கிகள் பின்பற்றி வருகின்றன.

இது போன்ற விதிமுறைகள், பின்தங்கிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மத்தியில் வரவேற்பைப் பெறமாட்டாது. அவர்களை வங்கிகளுடன் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுவதற்குத் தூண்டும் வகையிலான கவர்ச்சிகரமான திட்டங்களை, வங்கிகள் அறிமுகம் செய்ய வேண்டும். அவ்வாறு, இந்த மக்கள் மத்தியில் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனங்கள், முறையாக அறிமுகம் செய்யும் பட்சத்தில், அவர்கள் அதிக வட்டியில் கடன் வழங்கும் தனிநபர்கள், நுண்நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனங்களை நாடுவதைத் தவிர்க்கக் கூடியதாக இருக்கும்.

வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வயது வந்தவர்களில், கடந்த ஆண்டில் எவ்விதமான பண வைப்புகளையும், பண மீளப்பெறுகைகளையும் மேற்கொள்ளாதவர்களின் எண்ணிக்கை 31 சதவீதமாகும். இதில், 17 சதவீதமானவர்கள் பெண்கள் மாத்திரமே, முறைசார் நிதித்துறையிலிருந்து கடன் பெற்றிருந்தனர். அதேபோன்று, முறைசாரா நுண்நிதிச் சேவைகளை வழங்கும் துறைசார் அமைப்புகளிலிருந்து கடன் பெற்றவர்களில், 80 சதவீதமானவர்கள் பெண்களாக அமைந்துள்ளனர். இதனூடாக, முறைசார் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனங்களில், பாலின ரீதியான சமத்துவம் பேணப்படாமையை அவதானிக்க முடிகின்றது.

அதுபோலவே, நாட்டில் காப்புறுதித் துறை குறைந்தளவில் ஊடுருவியுள்ளது என்பது, அண்மைக் காலங்களில் தொடர்ச்சியாக தெரிவிக்கப்பட்டு வரும் கருத்தாக அமைந்துள்ளது. இதன் பிரகாரம், 15 சதவீதத்துக்கும் குறைவான சிறிய, நடுத்தரளவு வியாபாரங்கள், ஒரு சதவீதமான நுண் வியாபாரங்கள் மாத்திரமே ஏதோ வகையான காப்புறுதிச் சேவையைப் பெற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. பெண்கள் மீது காப்புறுதிச் சேவைகளை வழங்கும் நிறுவனங்கள், அதிகளவு கவனம் செலுத்தாமையும் இதற்கு ஒரு காரணமாகக் குறிப்பிட முடியும். 2006–2009 வரையான காலப்பகுதியில் கிடைக்கப்பெற்ற தரவுகளின் பிரகாரம், பெண்களால் பெற்றுக் கொள்ளப்பட்டிருந்த காப்புறுதிக் கொடுப்பனவுகள், 34 சதவீதத்தால் குறைந்திருந்தன. 

நிதித்துறைசார் அபிவிருத்திச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதுடன், அந்தச் சேவைகளைப் பெற்றுக் கொள்ள அனைத்துத் தரப்பினரும் உள்வாங்கப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டியுள்ளது. உள்வாங்கப்படுவது என்பது, வங்கிச் சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு, மக்களுக்குப் பொருத்தமான சேவைகள் வழங்கப்படுவதை உறுதி செய்வது, பண வைப்பு, மீளப்பெறுகைகள், கொடுப்பனவுகள் கையாளல், நுண்நிதிச் சேவைகள், குத்தகைகள், காப்புறுதி போன்றன இவற்றில் அடங்குகின்றன. முதலீட்டைத் தூண்டும் சகல நிதிச் சேவைகளும் தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்துவதாகவும் வளர்ச்சியைத் தூண்டுவதில் பங்களிப்பு வழங்குவதாகவும் அமைந்திருக்கும். 

நிதித்துறை அபிவிருத்தி, உள்ளடக்கத்தை ஊக்குவிப்பதற்கு அவசியமான சட்டங்கள், விதிமுறைகளை நிர்ணயிக்கும் பொறுப்பை அரசாங்கங்கள் கொண்டுள்ளன. இதில் ஒழுங்குபடுத்தல் என்பது மிகவும் முக்கியமானதாகும். உதாரணமாக, கணக்கு ஒன்றை ஆரம்பிப்பதற்கு ஆவணப்படுத்தல் தேவைப்பாடு போன்ற அடிப்படை விடயங்கள் காணப்படுகின்றன. கணக்கொன்றை ஆரம்பிக்க எதிர்பார்க்கும், நிதி இருப்பைக் கொண்டுள்ள வாடிக்கையாளர்கள், தமது வசிப்பிடத்தை, உறுதி செய்ய முடியாத ஆவணமொன்றைக் கொண்டிருக்காவிடின்,  முறைசார் துறையில் பணியாற்றும் அத்தாட்சிப்படுத்தலைக் கொண்டிருக்காவிடின், அவர்களுக்குக் கணக்கொன்றை ஆரம்பிப்பதற்கான அனுமதி மறுக்கப்படுகின்றது.

அது போன்று, தொழில்நுட்பப் புரட்சியின் காரணமாக, தற்போது பெருமளவு பயன்படுத்தப்படும் மொபைல் வங்கிச் சேவை, இணைய வங்கிச் சேவை போன்றவற்றைப் பயன்படுத்துவதற்கு வங்கிகள் தூண்டும் வகையில், நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். குறிப்பாக, தொழில்நுட்ப ரீதியில் உறுதியான பின்புலத்தைக் கொண்டிருக்காதவர்கள், பாரம்பரிய வங்கிச் சேவைகளை நாடவே விரும்புவார்கள். அவ்வாறான நபர்களுக்கு, இந்த நவீன யுக வங்கிச் சேவைகளைப் பயன்படுத்துவது பற்றிப் படிப்படியான அறிவூட்டல் செயற்பாடுகளை, நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் மேற்கொள்ளலாம். 

அதேவேளை, கடன் வழங்கல் என்பது அனைவருக்கும், எந்தளவு தொகையையும் வழங்குவது எனப் பொருள்படாது. சிறு வியாபாரங்களுக்கு முறையான திட்டமிடல், வரவு-செலவுக் கணக்குகளைப் பேணல், பதிவுகளைக் கொண்டிருத்தல் போன்ற விடயங்கள் பற்றிய பயிற்சிகளை வழங்கி, அதனூடாக அவர்களுக்கு அவசியமான நிதிச் சேவைகளைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கலாம்.

இது, வழமையான வங்கிச் சேவைகளுக்கு அப்பாற் சென்ற ஒரு நடவடிக்கையாக அமைந்திருக்கும். ஆனாலும், வழங்கிய கடனைத் திரும்பப் பெறுவதில், இவ்வாறான செயற்பாடுகளில் வங்கிகளின் அதிகாரிகள் தலையிடுவதனூடாக, கடன் மீள அறவிடுவது தொடர்பான தெளிவான திட்டத்தைப் பேண முடியும். ஒரே கடனை, வெவ்வேறு வர்த்தகப் பெயர்களில், அதே வட்டி வீதங்களில் வழங்கும் முறையில் மாற்றத்தை ஏற்படுத்தி, பிரத்தியேக ரீதியில் வடிவமைக்கப்பட்ட கடன் திட்டங்களை அறிமுகம் செய்வதில், வங்கிகள் கவனம் செலுத்தலாம். நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனங்கள், தாம் வருமானமீட்டுவது அல்லது, நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் தமது, மாத வருமானத்தை உறுதி செய்யும் வகையில், முறையாக ஆராயாமல் கடன்களை அனைவருக்கும் வழங்கி, பின்னர் கடன் பெற்றவரை மேலும் நெருக்கடிக்கு ஆளாக்காமல், ஆரம்பத்தில் அவர்கள் தொடர்பான முறையான பின்புல அறிக்கை ஒன்றைத் தயாரித்து, இடர்நேர்வு ஆய்வொன்றை மேற்கொண்டு, கடன் வழங்கிய பின்னரும், அவர்களின் செயற்பாடுகள் தொடர்பில் அடிக்கடி ஆராய்வது சிறந்ததாகும்.

இவ்வாறான முறைமை, பின்தங்கிய பிரதேசதங்களைச் சேர்ந்த, ஊறுபடக்கூடிய நிலையிலுள்ள மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்திருக்கும். ஏனெனில், அவர்களுக்குப் பெரும்பாலும் நிதியைக் கையாள்வது தொடர்பான போதிய வழிகாட்டல்கள் கிடைப்பது குறைவாக இருக்கும். 

முறையாக இயங்கும் நிதிக் கட்டமைப்பினூடாக, சமூகங்கள் வலுவூட்டப்பட்டு, உறுதியான வளர்ச்சிக்குப் பங்களிப்பு வழங்க முடியும். பின்தங்கிய பகுதிகளில் இயங்கும் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனங்கள், அப்பகுதிகளில் தொழில்முயற்சியாண்மை, போட்டிகரத்தன்மை, புத்தாக்கம், வளர்ச்சி ஆகியவற்றை ஊக்குவித்து, அதனூடாகத் தேசிய பொருளாதாரத்துக்குப் பங்களிப்பு வழங்கக்கூடிய வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்வது போன்ற வழிகாட்டல்கள் அடங்கிய கொள்கைத் திட்டங்களை, அரசாங்கம் வடிவமைப்பது நீண்ட கால அடிப்படையில் நாட்டின் பொருளாதாரத்துக்கு பயனளிப்பதாக அமைந்திருக்கும்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .