2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பயன்படுத்திய வாகனங்களுக்கான இறக்குமதி வரியைக் குறைக்குமாறு கோரிக்கை

ச. சந்திரசேகர்   / 2018 ஓகஸ்ட் 01 , பி.ப. 12:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் பயன்படுத்திய வாகனங்களுக்கு, புத்தம் புதிய வாகனங்களுக்காக அறவிடப்படும் வரி அறவிடப்படுகிறது, இந்த வரியைக் குறைக்குமாறு அரசாங்கத்திடம் இலங்கை வாகன இறக்குமதியாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளதுடன், புத்தம் புதிய பூஜ்ஜிய வாசிப்பைக் கொண்ட வாகனங்களை இலங்கை மோட்டார் வாகனப் பதிவுத் திணைக்களத்தில் பதிவு செய்யும் போது, புதிய வாகனங்களாகப் (Brand New) பதிவு செய்யுமாறு அரசாங்கத்தைக் கோரியுள்ளது.  

இலங்கை வாகன இறக்குமதியாளர் சங்கம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முன்வருமாறு அரசாங்கத்திடம் கோரிக்கைவிடுக்கும் ஊடகவியலாளர் சந்திப்பொன்று அண்மையில் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போது, சங்கத்தின் தலைவர் ரஞ்சன் பீரிஸ் இந்தக் கோரிக்கையை விடுத்திருந்தார்.  

இதன்போது, தொடர்ந்து கருத்து வெளியிட்ட பீரிஸ், “நாம் அரசாங்கத்துக்கு பரிந்துரைத்த வாகனங்களுடன் தொடர்புடைய பல விடயங்கள் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக பயணிகளின் பாதுகாப்பு, சூழல் பாதுகாப்பை உறுதி செய்யும் யூரோ 4 தரத்தைக் கொண்ட வாகனங்களை இறக்குமதி செய்யுமாறு நாம் மேற்கொண்டிருந்த பரிந்துரைகளை அரசாங்கம் தற்போது செயற்படுத்தியுள்ளது. இதனால் இலங்கைக்குக் கொண்டு வரப்படும் வாகனங்கள் தரமானவையாகவும் பாதுகாப்பானவையாகவும் அமைந்திருக்கும்” என்றார்.  

அவர் மேலும் குறிப்பிடுகையில், “குறிப்பாக, புத்தம் புதிய வாகன இறக்குமதியிலீடுபடும் முகவர்கள், இறக்குமதி செய்யும் ஏனைய வாகன இறக்குமதியாளர்கள், புதிய வாகனங்களைக் கொள்வனவு செய்து, அவற்றை வெளிநாடுகளில் பதிவு செய்வதனூடாக இலங்கையில் குறைந்த வரியை செலுத்துவது தொடர்பான குற்றச் சாட்டுகளை முன்வைத்துள்ளனர். நாம் இதை முற்றாக நிராகரிப்பதுடன், வாகனத்தின் என்ஜின் திறனுக்கமையவே வரி அறவீடு இலங்கையில் அமுலிலுள்ளது. இது குறித்த அறிவித்தல், 2017 நொவம்பர்  ஒன்பதாம் திகதியிடப்பட்ட 2044/32 இலக்க வர்த்தமானியில் வெளியிடப்பட்டிருந்தது. வெளிநாடுகளில் புதிய வாகனங்களைக் கொள்வனவு செய்து, அவற்றைப் பதிவு செய்து, பின்னர் இலங்கைக்கு இறக்குமதி செய்வது என்பது, அந்நாடுகளில் காணப்படும் ஏற்றுமதி விதிமுறைகளின் பிரகாரம் முன்னெடுக்கப்படுகின்றதேயன்றி, இலங்கையில் வரி விதிப்பைத் தவிர்ப்பதற்காக மேற்கொள்ளும் ஒரு செயற்பாடாக கருத முடியாது” என்றார்.  

துறையின் நிலைத்திருப்புக்கு பங்களிப்பு வழங்கும் வாகன இறக்குமதியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளதாகவும், தொடர்ச்சியாக வரி அறவீட்டு முறையில் மாற்றங்களை மேற்கொள்வதால் வாகன இறக்குமதியாளர்கள் தமது வியாபாரத்தில் தளம்பல் நிலையை எதிர்கொள்வதாகவும், இலங்கை ரூபாயின் மதிப்பு இழந்து செல்வதால், வாடிக்கையாளர்களுக்கும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாகவும் சங்கம் குறிப்பிட்டுள்ளது. 

வாகன இறக்குமதியாளர்களுக்கு காணப்படும் சிக்கல்களிலிருந்து விடுபடுவதற்கு உதவிகளை அரசு மேற்கொள்ள வேண்டியது மிகவும் இன்றியமையாதது. இலங்கை வாகன இறக்குமதியாளர் சங்கத்தின் அங்கத்தவர்கள், துறையில் வாகன முகவர்களிடமிருந்து பெருமளவான சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளதாகவும் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது.  

ஓடர்களை மேற்கொள்ளும் போது, நீண்ட தாமதங்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை அங்கத்தவர்களுக்கு ஏற்பட்டுள்ளதாகவும், குறைந்த இலாப எல்லைகள் மற்றும் சந்தைப்பங்கு தொடர்பான முறைப்பாடுகள் முகவர்களிடமிருந்து எழுவதாகவும், விலைமனுக்கோரல்களுக்கு முகவர்கள் கோரிக்கைவிடுப்பதில் ஏகபோக உரிமை வழிமுறையை பின்பற்றுகின்றமை தொடர்பிலும் சிக்கல்கள் எழுந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .