2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வரி மாற்றங்கள் யாருக்கு நன்மை?

அனுதினன் சுதந்திரநாதன்   / 2019 டிசெம்பர் 02 , மு.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் புதிய ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றிருக்கும் கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையிலான தற்காலிக அரசாங்கம், தாம் பொறுப்பேற்ற ஒருசில நாள்களிலேயே, இலங்கை மக்களுக்குப் பெரும் வரிச்சலுகைகளை வழங்கியிருக்கிறது. இதன் மூலமாக, பெரும் நன்மை அடைபவர்கள் பொது மக்களா? அல்லது நமது கண்களுக்குப் புலப்படாத வேறு விளைவுகள் இதற்குள் அடங்கியிருக்கிறதா? என்பதை அறிந்து கொள்ளுவது அவசியமாகிறது.  

தற்போதையை நிலையில், இலங்கையின் தற்காலிக அரசாங்கம் அறிவித்திருக்கும் இந்த வரிச் சலுகையானது, அடுத்து வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னேற்பாடு என்பதைக் கட்டியம் கூறினாலும், நாடாளுமன்றத் தேர்தல் வரையாவது, இந்த வரிச்சலுகைகள் மூலமாக, பொதுமக்களுக்கு நன்மைகள் கிடைக்குமென்பதை மறுக்க முடியாது.   

முக்கியமாக, இந்த வரிச்சலுகையில் VAT வரிவிகிதமானது 15%த்திலிருந்து 8%மாக குறைக்கப்படுள்ளதுடன், குறித்த வரியைச் செலுத்துவதற்கான வரியின் எல்லை 1 மில்லியன் ரூபாயிலிருந்து 25 மில்லியன் ரூபாயாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இது நேரடியாகவே, நாட்டில் பொதுமக்களின் கொள்வனவு சக்தியில் மிகப்பெரும் சாதகமான மாற்றத்தை ஏற்படுத்துமென்பதுடன், வணிக ரீதியில் சிறிய, நடுத்தர வணிகங்களின் வணிகச் செயற்பாடுகளுக்கு, மிகப்பெரும் உறுதுணையாக இருக்கப்போகிறது.   

VAT வரியானது, மறைமுக வரியாக இருக்கின்றமையால், வருமானத்தை உழைப்பவர்களும் சரி, வருமானத்தைப் பெற்றிராதவர்களும் சரி, இந்த வரியைச் செலுத்த வேண்டியதாக இருக்கின்றது. 
எனவே, இந்த மறைமுக வரியில் குறைப்பைச் செய்கின்றபோது, மக்களுடைய சேமிப்பு, கொள்வனவு ஆற்றல் அதிகரிக்க வழிவகுப்பதாக அமையும். 

ஆனால், மறுபக்கத்தில் இந்த வரி வீத குறைப்பின் காரணமாக, இலங்கை அரசின் வருமானத்தில் மிகப்பெரும் குறைவு ஏற்படப் போகின்றது. இந்த வருமான இழப்பை, ஈடுசெய்ய இந்த அரசனானது கடனையோ, நிதியுதவிகளையோ கையேந்தும் நிலையொன்று ஏற்படுமாயின், அது மீண்டும் நீண்டகாலத்தில் இலங்கைப் பிரஜைகளின் மீதே சுமையாக வரக்கூடிய நிலையிருக்கிறது. 

எனவே, இது தொடர்பில் மக்களும், அரசாங்கமும் அவதானமாகச் செயற்பட வேண்டியதாக இருக்கும். இல்லாவிடின், குறுகியகால நன்மைக்காக நீண்டகால கடன் சுமையை, இதே மக்களே சுமக்க வேண்டியதாக இருக்கும்.  

இதற்கு அடுத்ததாக, மஹிந்த ராஜபக்‌ஷ ஆட்சியிலிருக்கும்போது, அறிமுகப்படுத்திய ‘தேசத்தை கட்டியெழுப்பும் வரி’யான (NBT TAX) 2% த்தை இந்த அரசாங்கம் முற்றாக ஒழித்திருக்கிறது. இதில் வரவேற்கத்தக்க இரண்டு விடயங்கள் உள்ளடங்கி இருக்கின்றன. ஒன்று, இதுவொரு மறைமுக வரியாக இருப்பதன் காரணமாக, மக்களுக்கு நேரடி நன்மையொன்று இருக்கின்றது. இரண்டாவது, இலங்கையில் வெவ்வேறு பெயர்களில் அறிமுகப்படுத்தப்பட்ட வரிகளானது, இல்லாமல் செய்யப்படுவதன் மூலமாக, இலங்கையின் வரிவருமானத்துறை நிர்வாகச் செயற்பாடுகள் எளிமைப்படுத்தப்படுவதுடன், அதற்கான அரச செலவீனங்கள், நிறுவனங்களின் செலவீனங்கள் சேமிப்பாக மாற்றமடையும். இது அரச நிர்வாகத்தைச் சிறப்பாகக் கொண்டு நடத்த ஏதுவானதாக அமையும். 

ஆனாலும், தற்போதைய நிலையில், இந்த NBT வரியை இல்லாமற் செய்வதன் காரணமாக, அரசாங்கத்துக்கு வருடாந்த வருமான இழப்பு, சுமார் 51 பில்லியனாக இருக்கப் போகிறது. எனவே, இந்த வருமான இழப்பை, எந்த வருமான மூலத்தின் மூலமாக நிவர்த்திக்கப் போகிறார்கள் என்பதுதான் மீண்டும் அனைவரிடத்திலும் கேள்வியாகத் தொக்கி நிற்கிறது.  

இதற்கு அடுத்ததாக, தனிநபர் வருமான வரி மூலமாகவுள்ள PAYE வரியின் குறைந்த எல்லையை 125,000 ரூபாயிலிருந்து 250,000 ரூபாயாக அதிகரித்து இருக்கிறார்கள். இதனால், இதுவரை மாதாந்தம் 125,000 இலிருந்து 250,000 வரை வருமானமாகப் பெற்றவர்கள், மிகப்பெரும் நன்மை பெறுபவர்களாக இருக்கப் போகிறார்கள். அதேபோன்று, பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கான வருமான வரியின் விகிதமானது 28%த்திலிருந்து 14%மாக குறைக்கப்பட்டிருப்பதன் காரணமாக, இந்த வருமானச் சேமிப்பை, அந்த நிறுவனங்கள், தமது தொழில் முயற்சிகளுக்குப் பயன்படுத்திக்கொள்ள முடியும். 

அத்துடன், கட்டட நிர்மாணத் தொழிற்றுறையினருக்கு இந்தச் சலுகை வழங்கப்பட்டிருப்பதன் காரணமாக, இறக்குமதி வரிச் சுமையை இதன் மூலமாகக் குறைக்கக் கூடியதாக இருக்கும்.  
இதற்கு மேலதிகமாக, தகவல் தொழில்நுட்பம் சார்ந்த தொழிற்றுறைக்கும், அதுசார் வணிகச் செயற்பாடுகளுக்கும் முற்றாக, வரிச் சலுகை வழங்கப்பட்டிருக்கிறது. அதுபோல, கடந்தகால நிகழ்வுகளால் வாடிப்போயுள்ள இலங்கையின் சுற்றுலாத்துறை நிறுவனங்களை மீட்டெடுக்க, வரிச் சலுகைகளும் அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றன. அத்துடன், நாட்டுக்குள் வெளிநாட்டு வருமானத்தைக் கொண்டுவரும் தொழிலாளர்களுக்கும் வருமான வரி முற்றாக விலக்களிக்கப்பட்டு இருக்கிறது.இதன் மூலமாக, நாட்டின் வெளிநாட்டு வருமானப் பாய்ச்சலை, மேம்படுத்த முடியுமென எதிர்பார்க்கப்படுகிறது.  

இத்தகைய ஒட்டுமொத்த வரிச்சலுகை,  நிவாரணங்கள் மூலமாக, அரசாங்கத்துக்கு ஆகக்கூடிய வருமான இழப்பு, சுமார் 345-370 பில்லியனாக இருக்கக்கூடுமென கணக்கிடப்பட்டிருக்கிறது. அத்துடன், இலங்கையில் ஜனாதிபதி தேர்தலின் காரணமாக 2020ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்டத்தைச் சமர்ப்பிக்காமல் நான்கு மாதங்களுக்கு, நாட்டைக் கொண்டு நடத்துவதற்கான, VOTE ON ACCOUNT சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. இதன் பிரகாரம், நாட்டின் அரச கரும செலவீனங்கள் மாத்திரம், 751 பில்லியனாக இருக்கின்றது. இதைப் பூர்த்தி செய்யப் போதுமான வருமானத்தை இலங்கை கொண்டிருக்காமையால், சுமார் 721 பில்லியன் ரூபாயைக் கடனாகப் பெற அமைச்சரவை அனுமதியைப் பெற்றிருந்தார்கள். இந்த 721 பில்லியன் ரூபாய், தற்போது இந்த வரிச்சலுகை மூலமாக, முதல் நான்கு மாதங்களில் ஏற்படக்கூடிய செலவீனங்கள் என்பனவற்றை இலங்கை அரசு எவ்வாறு ஈடுசெய்யப் போகின்றது என்பதே கேள்விக்குறியாக உள்ளது.  

இந்த ஒட்டுமொத்தச் செலவீனங்களுக்கும், இலங்கை அரசு கடனைத்தான் பெற்றுக்கொள்ளப் போகின்றதென்றால், வெறும் 3-4 மாதங்களுக்கு மாத்திரம் நாம் அனுபவிக்கின்ற இந்தச் சலுகைகள், எமது எதிர்காலச் சந்ததியினருக்கு மிகப்பெரும் சுமையாக மாற்றம் பெறப் போகின்றது என்பதே, உறுதியாகத் தெரிகிறது. எனவே, இது தொடர்பில் தற்காலிக அரசாங்கமும், அதன் அரசியல் நிர்வாகத் தலைமைகளும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

எனவே, இந்த வரிச்சலுகைகளானது மிகக்குறுகிய காலத்தில் பொதுமக்களுக்கு சாதகாமாக இருக்கப்போகின்றது என்கிறபோதிலும், நீண்டகாலத்தில் அதுவே மிகப்பெரும் வரிச்சுமையாக மாற்றமடையாதிருப்பது, நாட்டின் அரசியல்வாதிகளின் கைகளிலேயே இருக்கின்றது.     


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .