2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வெள்ளி விழாக்காணும் ‘கலா பொல’

Editorial   / 2018 பெப்ரவரி 14 , பி.ப. 01:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெள்ளிவிழாக் காணும் திறந்தவெளி ஓவியக் கண்காட்சியான ‘கலா பொல’, கொழும்பு 7 ஆனந்த குமாரசுவாமி மாவத்தையில், 2018 பெப்ரவரி 25ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது.

இக் கண்காட்சியில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரஞ்சித் சிங், பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பிக்கவுள்ளார். ஜோன் கீல்ஸ் பி.எல்.சி நிறுவனத்துடன் ஒன்றிணைந்து ஜோர்ஜ் கீற் மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு வழங்கப்படுகின்ற ‘கலா பொல’ கண்காட்சியானது, 1993ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து முன்னேற்றப் பாதையில் பயணித்து வந்திருக்கின்றது.   

முதன்முதலாவதாக 35 ஓவியர்களின் படைப்புகளைக் காட்சிப்படுத்திய இக்கண்காட்சியை, இலங்கையின் புகழ்பெற்ற ஓவியர் ஜோர்ஜ் கீற் பார்வையிட்டார்.   

இவ்வருடம் நடைபெறும் வெள்ளிவிழா கண்காட்சியில், 300 இற்கும் மேற்பட்ட ஓவியர்கள் மற்றும் சிற்பக் கலைஞர்கள் நாட்டின் பல பாகங்களிலும் இருந்தும்  கலந்து கொண்டு, தமது படைப்புகளைக் காட்சிப்படுத்தவுள்ளனர்.  

 அன்றைய தினம், முற்பகல் 8.00 மணிமுதல் இரவு 9.00 மணிவரை, நாள் முழுவதும் நடைபெறவுள்ள இக்கண்காட்சியைப் பார்வையிட வரும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களின் பாராட்டுதல்களையும் பேராதரவையும் இந்தக் கலைஞர்கள் பெற்றுக் கொள்வார்கள்.

கடந்த கால் நூற்றாண்டு காலமாக ‘கலா பொல’ கண்காட்சியானது ஒரு சிறப்பான கலாசார நிகழ்வாகவும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் கொழும்பின் கவர்ச்சிமிகு முக்கிய அம்சமாகவும் முன்னேற்றம் அடைந்திருக்கின்றது.   

உள்நாட்டிலும் வெளிநாட்டிலும்  நடைபெறுகின்ற இத்தனை சிறப்பம்சங்களைக் கொண்ட ஓர் ஓவியக் கண்காட்சியாக இது திகழ்கின்றமையால், கொழும்பின் வருடாந்த கலாசார நாட்காட்டியில் ஒரு முக்கிய நிகழ்வாக இது இடம்பிடித்திருக்கின்றது. கண்காட்சியின் கொண்டாட்டங்களில், அந்தி மாலைப் பொழுதில் கலாசார களிப்பூட்டல் நிகழ்ச்சிகளும் உள்ளடங்கியிருக்கும்.   

இக்கண்காட்சியைப் பார்வையிடுவதற்கான அனுமதிக் கட்டணம் இலவசமாகும். இந்த வெள்ளிவிழா கண்காட்சியும், கடந்த வருடங்களைப் போலவே தமது ஆற்றல்களை வெளிப்படுத்துவதற்கான முனைப்புடன் இருக்கின்ற கலைஞர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட கலைப் படைப்புக்களால் வர்ணமயமானதாக மாறியிருக்கும் வீதியோரத்தை அவர்கள் கண்டுகளிக்கக் கூடியதாக இருக்கும்.

அந்தவகையில், ஒவ்வொரு வருடமும் இக் கண்காட்சி முன்னொருபோதுமில்லாத வளர்ச்சியைத் தொடர்ச்சியாகப் பெற்று வருகின்றது.இலங்கையரின் கலைப் படைப்புகளைக் காட்சிப்படுத்துவதையும் ஊக்குவிப்பதையும் மையமாகக் கொண்ட ‘கலா பொல’ கண்காட்சியானது ஓவியம் தீட்டுவோரும் சிற்பிகளும் தங்களது அனைத்து விதமான கலைப் படைப்புகளையும் காட்சிப்படுத்துவதற்கான ஒரு தளமேடையாகச் செயற்பட்டுள்ளது.   

இது கலைஞர்களுக்கு வருமானம் ஈட்டுவதற்கான வாய்ப்பையும் அவர்கள் தமக்கிடையேயும் அத்துடன் தொடர்ச்சியாகப் பாராட்டும் தன்மை கொண்ட பார்வையாளர்களுடனும் ஒரு வலைப்பின்னல் உறவை ஏற்படுத்துவதற்கான களத்தையும் வழங்குகின்றது.   

அந்த விடயத்தில் கடந்த பல வருடங்களில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கின்றது. அதேவேளை, உள்நாட்டுக் கலைஞர்கள் சர்வதேச அரங்கில் தமது படைப்புகளுக்கான அங்கிகாரத்தைப் பெறுவதற்கும், அவற்றை சர்வதேச அரங்குக்குள் முன்கொண்டு செல்வதற்குமான ஒரு தளமேடையாகவும் ‘கலா பொல’ அமைந்திருக்கின்றது.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .