2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளவில்லை’

எஸ்.றொசேரியன் லெம்பேட்   / 2017 ஒக்டோபர் 11 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தமிழ் அரசியல் கைதிகளின் அஹிம்சைப் போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்படுகின்றதே தவிர, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளவில்லை என வட மாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் தெரிவித்துள்ளார். தமிழ் அரசியல் கைதிகளின் நிலை தொடர்பாக, மன்னாரில், இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அநுராதபுரம் சிறைச்சாலையில் எமது தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. நீராகாரம் கூட இல்லாமல் போராட்டத்தை முன்னெடுத்துள்ளமையால் அவர்களுடைய சிறுநீரகங்கள் கூட பாதிப்படையும் நிலை ஏற்பட்டுள்ளதாக வைத்தியத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

தமிழ் அரசியல் கைதிகள், தமது விடுதலை நியாயத்துக்காக பல்வேறு விதமான போராட்டங்களை சிறைச்சாலைகளில் மேற்கொண்டு வந்தார்கள். தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள உண்ணாவிரத போராட்டங்கள் போன்று கடந்த காலங்களில் பல தடவைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனினும் பல்வேறு காரணங்களினால் அல்லது பல அரசியல் கட்சிகளுடைய வாக்குறுதிகளால், அவர்களுடைய உண்ணாவிரதப் போராட்டம் அடிக்கடி முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இவ்வாறாக அஹிம்சைப் போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதைத் தவிர, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எவராலும் எடுக்கப்படவில்லை. நாட்டில் யுத்தம் முடிவடைந்து பல ஆண்டுகளை கடந்துள்ளபோதும் தமிழ் அரசியல் கைதிகளின் விசாரணைகள் நீதியற்ற நிலையிலே பிற்போடப்பட்டு திட்டமிட்ட வகையில் விடுதலை தாமதப்படுத்தப்படுவதாகவே நாங்கள் கருதுகின்றோம்.

எனவே, இவ்விடயத்தில் கடுமையான கண்டனத்தை தெரிவிப்பதோடு, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைவரும் ஒன்றிணைய வேண்டும்” எனக் கூறினார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .