2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘இனவாத சக்திகளை முறியடிக்க ஐ.தே.கவால் மட்டுமே முடியும்’

Editorial   / 2020 ஜூலை 22 , பி.ப. 06:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

தென்னிலங்கையில் இனவாதத்தைத் தூண்டிக் கொண்டிருக்கும் ராஜபக்ஷவின் கட்சியை தமிழ், முஸ்லிம் மக்கள் நிராகரிப்பதோடு, சிறுபான்மை மக்கள் சுபீட்சமாக வாழ்வதற்கு ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்களிக்க வேண்டுமென, ஐக்கிய தேசிய கட்சியின் வன்னி மாவட்ட வேட்பாளர் ஜேம்ஸ் பிரமிளஸ் கொஸ்தா தெரிவித்தார்.

மன்னாரில் உள்ள ஐக்கிய தேசிய கட்சி அலுவலகத்தில், இன்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், ஐக்கிய தேசிய கட்சியின் யானை சின்னத்துக்குப் பெரும்பான்மையான வாக்குகள் கிடைக்குமென்ற நம்பிக்கை தமக்கு உள்ளதென்றார்.

இறுதி யுத்தத்தில், காணாமல் போனவர்களின் பிரச்சினை, சரணடைந்தவர்களுடைய பிரச்சினை, சிறையில் வாடும் இளைஞர்களின் பிரச்சினை என்று  தமிழ் மக்களுக்கு கொடுங்கோல் ஆட்சி  செய்தவர் மஹிந்த ராஜபக்ஷ என்ற வகையில் அவருடைய ஆட்சியை ஏற்படுத்த தென்னிலங்கையிலே, இனவாத சக்திகள் கங்கனம் கட்டிக் கொண்டு நிற்பதை ஊடகங்கள் ஊடாக அறிய முடிகிறதென்றார்.

“எனவே, வன்னி மாவட்ட மக்களே இந்த நாட்டில் தலைதூக்கியுள்ள இனவாத சக்திகளை முறியடிக்கக் கூடிய ஒரே பலம் ஐக்கிய தேசிய கட்சிக்கு மாத்திரம் தான் இருக்கிறது என்பதை இந்த இடத்தில் ஆணித்தரமாக கூறுகின்றோம். 

“முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் காலத்திலே வடக்கு - கிழக்குப் பகுதிகளில் இருந்த சோதனைச் சாவடிகள் அகற்றப்பட்டன. தமிழ் மக்களின் பூர்வீக காணிகள் தமிழர்களுக்கே  வழங்கப்பட்டது.  அதே போல் 20 ஆயிரம் வீடுகள் தமிழ் மக்களுக்கு கட்டிக் கொடுக்கப்பட்டது” எனவும், அவர் கூறினார்.

அவரது ஆட்சியில் தமிழ்  - முஸ்லிம் மக்கள் பாதுகாப்புடன் வாழக்கூடிய சூழ்நிலை காணப்பட்டதெனத் தெரிவித்த அவர், தமிழர்களுடைய நீண்ட கால பிரச்சினைக்குத் தீர்வாக புதிய அரசமைப்பு வரைபை  ரணில் விக்ரமசிங்க உட்பட தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து தயாரித்தார்களெனவும் ஆனால் மஹிந்த ராஜபக்ஷவினுடைய இனவாத சக்திகள் அந்த வரைபை நாடாளுமன்றத்துக்குக் கொண்டு வர முடியாமல் தடுத்தார்களெனவும் கூறினார்.

“அப்படியான ஓர்  இனவாத சக்தியை எந்தக் காரணம் கொண்டும் தமிழ் -  முஸ்லிம் மக்கள் வன்னி மாவட்டத்தில் ஆதரிக்க வேண்டாம் என்பதை மிகவும் வினயமாக கேட்டுக் கொள்கின்றோம்”  என, வேட்பாளர் ஜேம்ஸ் பிரமிளஸ் கொஸ்தா  மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .