2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

‘இன்னுமொரு மதத்தை மேவும் போதுதான் பிரச்சினை’

க. அகரன்   / 2017 ஒக்டோபர் 02 , பி.ப. 12:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஒரு மதம் இன்னுமொரு மதத்தை மேவும் போதுதான் பிரச்சினை ஏற்படுகின்றது என வட மாகாண விவசாய அமைச்சர் க.சிவநேசன் தெரிவித்துள்ளார்.

வவுனியா வேப்பங்குளம் இந்து அன்பகத்தில், நேற்று  (01) இடம்பெற்ற சிறுவர் தினத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“எங்களுடைய நாட்டை பொறுத்த வரை சிறுவர்களுக்கான சட்டங்கள் இருக்கின்றதா என்பதில் சந்தேகங்கள் இருக்கின்றன. சிறுவர் இல்லங்களை அமைப்பதற்கான நியதிச் சட்டங்கள் மாகாண சபையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை.

எங்களது நாட்டைப் பொறுத்தவரை சிறுவர்களுக்குச் சரியான பாதுகாப்பில்லை. பலர் அநாதரவாக விடப்பட்டுள்ளார்கள். ஆகவே நாங்கள் சிறுவர்கள் தொடர்பாக சரியான தீர்மானத்தை எடுக்க வேண்டும்.

வித்தியாவுக்கு நீதி கிடைத்திருக்கிறது. ஆனால் இங்கு கொலை செய்யப்பட்ட ஹரிஸ்ணவிக்கு நீதி கிடைக்கவில்லை. இதேபோல் இன்னும் பல சிறுவர்களுக்கு நீதி கிடைக்கப்பெறவில்லை.

இன்று எந்த மதத்துக்கு முன்னுரிமை கொடுப்பது என்பது தொடர்பிலும் நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். மதங்கள் என்பது ஒருவரை நல்வழிப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டதே தவிர இன்னொருவரை அடக்கி ஒடுக்குவதற்காக அல்ல.

ஒரு மதம் இன்னுமொரு மதத்தை மேவும் போதுதான் எங்களுக்கு பிரச்சனை ஏற்படுகின்றது. மிக பழமை வாய்ந்த கோயில்களில் ஏனைய மதங்கள் ஏன் தங்களது அடையாளங்களை வைப்பதற்கு முயற்சிக்க வேண்டும் என்பதுதான் என் கேள்வி. இன்னுமொரு மதத்தை அடக்கி ஒடுக்குவதை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்” எனக் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .