2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

ஊடகவியலாளர்கள் புறக்கணிப்புக்கு கண்டனம்

Princiya Dixci   / 2021 ஏப்ரல் 06 , பி.ப. 03:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.றொசேரியன் லெம்பேட்

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டங்களிலும், பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டங்களிலும் ஊடகவியலாளர்களின் அனுமதி மறுப்பானது, பொது மக்கள் உண்மைச் செய்திகளை அறிந்து விடக்கூடாது என்பது மட்டுமல்லாது,   உண்மைகளை மறைக்கும் செயற்பாடாகுமென்று, பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்பு, உள்நாட்டு அலுவல்கள், மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சின் செயலாளரால் வெளியிடப்பட்ட மாவட்ட, மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களின் போது செய்தி சேகரிப்பதற்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்காதிருக்கும் சுற்றுநிருபம் தொடர்பாக வினவிய போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்துரைத்த அவர், ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்கள் தான் செய்தியாளர்களை சந்திக்க முடியுமென்றால், முடிவுகளை அறிவிக்க வேண்டுமென்றால் மக்கள் பிரதிநிதிகளை அழைக்கவும் தேவையில்லை என்றார்.

பொதுஅமைப்புகளின் பிரதிநிதிகளையும் அழைக்க தேவையில்லை எனத் தெரிவித்த அவர், மாவட்ட, பிரதேச அபிவிருத்தி விடயங்களை அதிகாரிகளுடன் பேசி விட்டு ஊடக சந்திப்பை நடத்த முடியுமெனவும் கூறினார்.

இது முற்றிலும் உண்மைகளை மறைக்கும் விடயமாகுமெனத் தெரிவித்த அவர், அத்துடன், ஊடகவியலாளர்களின் தனித்துவமான, உண்மைச் செய்திகளை சேகரிக்கும் அவர்களின் கருத்துச் சுதந்திரத்துக்கு சவால் விடுக்கும் செயற்பாடாகுமெனவும் கூறினார்.

"மாவட்ட, பிரதேச ஒருங்கிணைப்புத் தலைவர்கள் தவறாக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கும், உண்மைகளை சொல்லாது விடப்படுவதற்கும் சந்தர்ப்பங்களை உருவாக்கும்.

"பாராளுமன்றத்தில் விவாதங்களை நேரலையாக ஒளிபரப்ப ஊடகங்கள் அனுமதிக்கப்படும் போது ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டங்களில் ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிக்க மறுக்கப்படுவது அரசாங்கத்தின் மீது சந்தேகத்தை தோற்றுவிக்கின்றது" எனவும், அவர் கூறினார்.

உண்மைகள் எழுதப்படும் போது, வெளிக்கொணரப்படும் போது மக்கள் விழித்தெழுவதும் மக்கள் மனங்களில் மாற்றம் வருவதும், அதனால் எதிர்க்கட்சி ஆளும் கட்சியாவதும், ஆளும் கட்சி எதிர்கட்சியாவதும் ஜனநாயக நடைமுறை மாற்றங்களாகுமெனவும், அவர் கூறினார்.

எனவே, ஊடகங்களினதும், ஊடகவியலாளர்களினதும் குரல் வளைகளை நெரிக்கும், சுதந்திரத்தை பறிக்கும் செயற்பாடுகளை நிறுத்தி உண்மைகளையும் பொய்யான விடயங்களையும் வெளி உலகுக்கும், மக்களுக்கும் கொண்டு சேர்க்க ஊடகங்களை ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டங்களுக்கு அனுமதிக்க வேண்டும் என, வினோ நோகராதலிங்கம் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X