2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘எஞ்சிய உறவுகளை பறிக்கவே அவகாசம்’

Editorial   / 2019 மார்ச் 24 , பி.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள எஞ்சிய உறவுகளையும் பறிகொடுப்பதற்காகவே ஜெனீவாவில் இலங்கைக்கு  மேலும் இரண்டு வருட கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள  வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், அனைத்துக்கும் தலையசைத்து கொண்டிருக்க முடியாது என்றனர்.

2009ஆம் ஆண்டு மே மாதம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட போரின் இறுதி நாள்களில், இலங்கை ப​டையினரிடம் சரணடைந்த, ஒப்படைக்கப்பட்ட மற்றும் கைதுசெய்யப்பட்ட நிலையிலும், கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள உறவினர்களில் 40 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர் என்றும் உறவினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

“தீர்வைப் பெற்றுத்தரும் என நம்பியிருந்த சர்வதேச சமூகமும் இலங்கைக்கு கால அவகாசத்தை வழங்கி தம்மை ஏமாற்றிவிட்டது” என முல்லைத்தீவு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க இணைப்பாளர் மரியசுரேஸ் ஈஸ்வரி கவலை வெளியிட்டுள்ளார்.

“இலங்கைக்கு கால அவகாசம் வழங்கக் கூடாதெனக் கோரி தாம் பல்வேறு போராட்டங்களை மேற்கொண்ட போதிலும் சர்வதேச சமுகம் அதனை கவனத்தில் கொள்ளவில்லை” என்றார்.

“வெளிநாட்டு நீதிபதிகளை நாட்டுக்குள் அனுமதிக்க முடியாதென்றால் காணாமல் போனோர் தொடர்பான நிரந்தர அலுவலகமும் தமக்குத் தேவையில்லையென குறிப்பிட்ட அவர், இலங்கை அரசாங்கத்துக்கு, ஜெனீவாவில் கால அவகாசத்தை பெற்றுக்கொடுப்பதற்கு முன்னின்று உழைத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு, வடக்கு, கிழக்கு மக்கள் சரியான தண்டனையை வழங்கவேண்டும்” என கோரிநின்றார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் உறவினர்கள் யாராவது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டிருந்தால், காணாமல் போன உறவுகளின் வேதனை அவர்களுக்கும் தெரிந்திருக்கும் எனக் குறிப்பிட்ட அவர்,  காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான நிரந்தர அலுவலகம் கூறுவதற்கெல்லாம் தலையசைக்க தாம் தயாராக இல்லை என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .