2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

’ஒட்டுசுட்டானுக்கு தனி பிரதேச சபை வேண்டும்’

Niroshini   / 2021 ஜனவரி 21 , பி.ப. 06:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

-நடராசா கிருஸ்ணகுமார்

 

முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிகளவு பரப்பளவைக் கொண்ட ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில், தனிப் பிரதேச சபை அமைய வேண்டுமென, புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் சதாசிவம் சத்தியசுதர்சன் தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவில் 6,706 குடும்பங்களைச் சேர்ந்த 20,784 பேர் வாழ்ந்து வருகின்றனர் எனவும் ஆனால், இங்கு தனிப் பிரதேச சபை இல்லை எனவும் கூறினார்.

புதுக்குடியிருப்பு பிரதேச சபையாலேயே ஒட்டுசுட்டான் பிரதேசம் நிர்வகிக்கப்படுகின்றதெனத் தெரிவித்த அவர், தனிப் பிரதேச சபை உருவானால் பிரதேச அபிவிருத்தியில் சுயமாக முடிவெடுக்க முடியுமெனவும் கூறினார்.

அத்துடன், வேலைவாய்ப்புகளை  அதிகரிக்க முடியுமெனக் கூறிய அவர், மக்கள் இலகுவாக பிரதேச சபையை அணுகவும் முடியுமென்றார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிக பரப்பளவைக் கொண்ட (618 கிலோமீற்றர்) பிரதேச செயலகமாக ஒட்டுசுட்டான் பிரதேச செயலகம் காணப்படுகின்றதெனத் தெரிவித்த அவர், இந்தப் பிரதேச செயலகப் பிரிவில் ஒட்டுசுட்டான், மாங்குளம் ஆகிய இரு  பொலிஸ் நிலையங்கள் காணப்படுகின்றன எனவும் கூறினார்.

'எனவே, தனிப் பிரதேச சபை உருவானால், அரச நிதி ஒதுக்கீட்டைத் தனியாகப் பெற்றுக் கொள்ள முடியும். மக்களுக்கு இலகுவாக திருப்தியான சேவையை வழங்க முடியும்' எனவும், அவர் தெரிவித்தார்.

ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவை விட குறைவான மக்கள் தொகையைக்; கொண்ட மாந்தை கிழக்கு, துணுக்காய் ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில், தனித் தனிப் பிரதேச சபைகள் இயங்குகின்ற போது, ஒட்டுசுட்டானில் மட்டும் ஏன் தனிப் பிரதேச சபை உருவாக்கப்படவில்லை எனவும், அவர் வினவினார்.

இது தொடர்பாக முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்திலும் ஒட்டுசுட்டான் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் தொடர்ச்சியாக குரல் எழுப்பி வருகின்ற போதிலும், ஒட்டுசுட்டானுக்கான தனிப் பிரதேச சபை அமைக்கப்படவில்லை எனவும், சதாசிவம் சத்தியசுதர்சன் குற்றஞ்சாட்டினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .