2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

ஓராண்டு பூர்த்தியடைந்துள்ள கேப்பாபுலவு போராட்டம்

சண்முகம் தவசீலன்   / 2018 மார்ச் 01 , பி.ப. 02:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

“கடந்த 1 வருடமாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாபுலவு மக்கள், ஜனாதிபதியைச் சந்திக்க எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் ஏற்பாடு செய்துள்ளதாக” நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா தெரிவித்துள்ளார்.

கேப்பாபுலவில் பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகளை விடுவிக்கக்கோரி கடந்த 1 வருடமாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட நில மீட்புக்கான போராட்டம், இன்றுடன் (01) 1 வருடம் பூர்த்தியாகியுள்ளது.

இதனையடுத்து, தமது அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் கலந்துரையாடுவதுக்கு நாடாளுமன்ற, மாகாண சபை உறுப்பினர்களை போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அழைத்திருந்தனர்.

இதற்கமைய, நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா, வடமாகாண விவசாய அமைச்சர் கந்தையா சிவநேசன், வடமாகாண சபை உறுப்பினர்களான து.ரவிகரன், ஆ.புவனேஸ்வரன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களைச் சந்தித்தனர்.

இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா, “இந்த விடயம் தொடர்பில், மக்களும் ஜனாதிபதியும் சந்திப்பதுக்கான ஏற்பாடுகளை, எதிர்க்கட்சி தலைவர் சம்மந்தன் எடுத்துள்ளதாகவும் தற்போது தென்பகுதியில் நிலவும் அரசியல் குழப்பநிலை காரணமாக அதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் விரைவில் அந்த சந்திப்பை ஏற்படுத்துவதாகவும்” தெரிவித்தார்

இந்த சந்திப்பு சாதகமான தீர்வுகளை கொண்டுவராவிடில் மாபெரும் வெகுஜன போராட்டம் ஒன்றை நடாத்தவுள்ளதாக இதன்போது பொதுமக்கள் தெரிவித்தனர்.

மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள், முல்லைத்தீவு பாதுகாப்பு படை கட்டளை தலைமையக வாயிலில் அமைக்கப்பட்டுள்ள கூடாரத்தில் அரைமணி நேரம் தியானம் மேற்கொண்டதோடு, போராட்ட கூடாரம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

போராட்டத்தையடுத்து, படிப்படியாக பொதுமக்களின் காணிகள் விடுவிக்கப்பட்ட நிலையில், கடந்த டிசெம்பர் மாதம் 28ஆம் திகதி, கேப்பாபுலவு பகுதியில்  111.5 ஏக்கர்  காணிகளும் சீனியாமோட்டை பகுதியில் 21.84 ஏக்கர் காணிகளும் விடுவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், 104 குடும்பங்களுக்கு சொந்தமான 181 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படும் வரை தமது போராட்டம் தொடருமென தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X