2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

‘கிளிநொச்சி பாடசாலைகளில் போதைப்பொருள் விழிப்புணர்வு’

Editorial   / 2019 மார்ச் 11 , பி.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி மாவட்டத்தில், வாரத்தில் ஒரு பாடசாலை என்ற அடிப்படையில், போதைப்பொருள் தொடர்பான விழிப்புணர்வுச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, கிளிநொச்சி மாவட்ட உளநல வைத்தியர் மா.ஜெயராசா தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், கிளிநொச்சி மாவட்டப் பாடசாலை மாணவர்கள் மத்தியில், போதைப்பொருள் பாவனை உள்ளதென்பதை, தமது செயற்பாடுகள் மூலமாக இனங்கண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

எமது பிள்ளைகளைக் காப்பாற்றுங்களெனத் தங்களிடம் வருகின்ற பெற்றோர்களும் உள்ளதாகத் தெரிவித்த அவர், எமது பிள்ளைகளைத் திருத்தவே முடியாதெனக் கைவிடுகின்ற பெற்றோர்களும் உள்ளதாகவும் குற்றஞ்சாட்டினார்.

போதைப்பொருள் பாவனையில் இருந்து மாணவர்களை மீட்டெடுப்பதற்காகவே, இந்த விழிப்புணர்வுச் செயற்பாடு, பாடசாலைகளில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்த அவர், அந்தவகையில், உயர்தர வகுப்புகளைக் கொண்ட பாடசாலைகளைத் தெரிவுசெய்து, அவற்றில், வாரம் ஒரு பாடசாலை எனும் அடிப்படையில், விழிப்புணர்வுச் செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறினார்.

இறுதியாக, பளை மத்திய கல்லூரியில் விழிப்புணர்வுச் செயற்பாடு நடைபெற்றதாகக் கூறிய அவர், கனகாம்பிகைக்குளம் பாடசாலையில், நாளை (12) விழிப்புணர்வுச் செயற்பாடு இடம்பெறவுள்ளதாகவும் தெரிவித்தார்.

போதைப்பொருள் பாவனையால் அடிமைக்குள்ளான பிள்ளைகளைக் கைவிட்ட பெற்றோர்கள், தங்களுடன் தொடர்புகொண்டால், பிள்ளைகளை அதிலிருந்து மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமெனவும் அவர்கள் தொடர்பான தகவல்கள், இரகசியமாகப் பேணப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான மாணவர்கள் தொடர்பிலான தகவல்களை, பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், தந்துதவ வேண்டுமெனவும், அவர் கேட்டுக்கொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .