2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கிளிநொச்சியில் கடன் அறவீட்டாளர்கள் அட்டூழியம்

Yuganthini   / 2017 ஜூன் 25 , பி.ப. 07:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

 

கிளிநொச்சியில் கிளைகள் எதனையும் கொண்டிருக்காத நிதி நிறுவனம் ஒன்று வறிய மக்களுக்கு அதிகூடிய வட்டிக்கு கடன்களை வழங்கி விட்டு அதனை அறவிடுவதற்கு வீடுகளுக்கு சென்று தகாத வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்ட சம்பவம் ஒன்று,  கிளிநொச்சி - பரந்தன் பகுதியில் வியாழக்கிழமை (22) இரவு இடம்பெற்றுள்ளது.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு மீள்குடியேறிய மக்களுக்கு பல்வேறு நிதி நிறுவனங்கள் அவர்களது வீடுகளுக்கே சென்று, அதிகூடிய வட்டிக்கு கடன்களை வழங்கி வருகின்றனர்.

கிளிநொச்சி - பரந்தன் கால் ஏக்கர் பகுதியில் உள்ள மிகவும் வறிய குடும்பங்களுக்கு, கிளிநொச்சியில் கிளைகள் எதனையும் கொண்டிருக்காத நிதி நிறுவனம் அதி கூடிய வட்டிக்கு கடன்களை வழங்கி விட்டு அவற்றை அறவிட்டு வருகின்றது.

வியாழக்கிழமை இரவு (22), குறித்த பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற குறித்த நிதி நிறுவனத்தின் கடன் அறவீட்டாளர்கள், கடன்களைப் பெற்றவர்களை அவதூறாக பேசியதுடன், கடன் பெற்றவர்களையும் அச்சுறுத்தியுள்ளனர்.

குறித்த கடன்களைப் பெற்ற குடும்பங்கள், உரிய முறைப்படி கடன்களைச் செலுத்தி வருவதாகவும் தற்போது தொழில் எதுவும் இல்லாததால், இந்தத் தவணைக் கட்டணத்தை அடுத்த தவணையுடன் சேர்த்து கட்டுவதாக தெரிவித்தபோதும், இவ்வாறு இரவு வேளையில் வந்து தமக்கு தொந்தரவுகளைத் தருகின்றனர் என, பாதிக்கப்பட்டோர் தெரிவித்துள்ளனர்.

பெண் பிள்ளைகளையும் வைத்திருக்கும் பெண் தலைமைத்துவக் குடும்பங்களாகிய தாம், சமூகத்தில் பல்வேறுப் பிரச்சனைகளுக்கு முகங்கொடுக்கும் அதேவேளை, தற்கொலை செய்யவேண்டிய நிலை ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் ஆகியவற்றில் இவ்வாறு கடன் வழங்கும் நிறுவனங்கள் பிற்பகல் 5 மணிக்குப் பின்னர் கடன்களை அறிவிடுவதற்கு வீடுகளுக்குச் செல்ல முடியாது என்று தெரிவிக்கப்பட்டதுடன், இது தொடர்பாக மாகாண சபையில் கூட தீர்மானிக்கப்பட்டது.

இருப்பினும், இவ்வாறு கடன்களை அறவிடுவதற்கு இரவு 9.15 மணிக்குச் செல்வது தொடர்பாக பலரும் விசனம் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .