2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘குரங்கை ஒழிக்க மாகாண சபை நிதி ஒதுக்கீடு’

Editorial   / 2017 நவம்பர் 21 , பி.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.அகரன்

குரங்கை ஒழிக்க மாகாணசபை நிதி ஒதுக்கியுள்ளதாக, வட மாகாண விவசாய அமைச்சர் க.சிவனேசன் தெரிவித்தார்.  

வவுனியா, முருகனூர் விவசாயப் பண்ணையில், நேற்று (20) மாலை நடைபெற்ற விவசாயிகளுக்கான சான்றிதழ் மற்றும் மரங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.  

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,  

“வன்னிப் பிரதேச விவசாய நடவடிக்கையில் அழிவுகளை ஏற்படுத்தும் ஒரு விலங்காக, குரங்கு காணப்படுகின்றது. குரங்கைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினமாக இருக்கின்றது. குரங்குகளை அழிக்க முடியுமா என்கின்ற கேள்வியும், இந்தக் குரங்குகளை என்ன செய்வது என்ற கேள்வியும் இருக்கிறது. அதைப் பிடித்துச் சென்று தூர இடத்தில் விடுவதாக இருந்தால், இன்று மக்கள் குடியிருப்புகளை அண்டிய பகுதிகளில் தான் காடுகள் இருக்கின்றன. ஆகவே, நாங்கள் அந்த விலங்குகள் இருக்கின்ற இடத்தில் வாழ்கின்றோம் என்ற காரணம் இருந்தாலும், அவற்றில் இருந்து எப்படி வீட்டுத் தோட்டங்களைப் பாதுகாப்பது என்று சிந்திக்க வேண்டியிருக்கிறது. கொஞ்சம் அசந்தால் போதும், குரங்குகள் வீட்டுத் தோட்டத்தை துவம்சம் செய்துவிட்டுப் போகின்றன.  

“எனவே, இது பிரச்சினையாகவும், சவாலாகவும் இருகிறது. இதனால், வருகின்ற ஆண்டு எனது அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில், குரங்களை ஒழிப்பதற்கு என்று ஒரு குறிப்பிட்ட நிதியை ஒதுக்கி வைத்துள்ளோம்.  

“ஆனால், அதனை எவ்வாறு ஒழிப்பது என்பது குறித்து ஆய்வு செய்து வருகின்றோம். அதனை ஒழிப்பதற்கு எமக்கு அதிகாரம் இருக்கின்றதா, மக்களுக்கு அழிப்பதற்குரிய கருவிகளை கொடுப்பதா என்று எல்லாம் ஆய்வு செய்து வருகின்றோம்” என்றார்.  

மேலும், “யானைகளின் அச்சுறுத்தலும் இருக்கின்றது. இதனை வட மாகாண சபையால் தனித்து கட்டுப்படுத்த முடியாது. மத்திய அரசாங்கத்துடன் இணைந்துதான் நாம் கட்டுப்படுத்த முடியும். தென்பகுதியில் வருமானத்துக்காக வளர்த்த யானைகளை தற்போது வருமானம் குறைந்ததும் அதனை வடபகுதியில் கொண்டுவந்து விட்டுள்ளார்கள். இதனால், எமது விவசாயிகள் தான் பாதிக்கப்படுகிறார்கள். இது தொடர்பில் முடிவு எட்ட வேண்டியுள்ளது.  

“அத்துடன், மரநடுகை மாதமாக கார்த்திகை மாதம் என்கின்ற ஒரு விடயம் இருக்கின்றது. வழமையாக கார்த்திகை மாதம் என்பது எங்களது பகுதிகளைப் பொறுத்தவரை நிலங்கள் ஊற்றெடுத்து இருக்கின்ற ஒரு காலம். மேடான பகுதி கூட, நிலங்கள் ஊற்றெடுத்துக் காணப்படும் காலப்பகுதி. ஆகவே, இந்தக் காலப்பகுதியில் மரங்களை நடுகின்ற போது, உச்ச பயனை அடையலாமா என்ற கேள்வி எழுகின்றது.  

கடந்த 3 வருடமாக இதைச் செயற்படுத்தி வருகின்றார்கள். விவசாயப் போதனாசிரியர்கள், விவசாயத்துறை சார்ந்தவர்கள், இதற்கான பதிலைக் கூற வேண்டும். எனவே, கார்த்திகை மாதம் மரநடுகைக்கு பொருத்தமானதா என ஆராய வேண்டும்” எனவும் தெரிவித்தார்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .