2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

‘கூட்டமைப்பு அல்லாதவர்களே ஆட்சியமைக்க வேண்டும்’

எஸ்.என். நிபோஜன்   / 2018 பெப்ரவரி 15 , பி.ப. 06:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

“கிளிநொச்சி கரைச்சி, பச்சிலைப்பள்ளி ஆகிய இரு பிரதேச சபைகளிலும் ஆட்சியமைப்பதுக்கு  சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு பரிசீலனை செய்துகொண்டிருப்பதாக” சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் அமைப்பாளர் மு.சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியிலுள்ள அவரது அலுவலகத்தில் இன்று (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கரைச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச சபைகளில் எம்மை ஆட்சிப்பொறுப்பேற்குமாறு கிளிநொச்சி மாவட்டத்தைச்  சேர்ந்த பல்வேறு தரப்பினர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.  இந்த இரண்டு பிரதேச சபைகளிலும் கூட்டமைப்புக்கு  அளிக்கப்பட்ட வாக்குகளை விட கூடுதலான வாக்குகள் எதிர்தரப்பினர்களுக்கு அளிக்கப்பட்டதால் கூட்டமைப்பு அல்லாதவர்களே ஆட்சியமைக்க வேண்டும்.

அத்துடன் எமது தேர்தல் விஞ்ஞாபனத்தின் அடிப்படையில் இந்த சபைகளை வினைத்திறனுடன் சிறப்பான முறையில் நிர்வகிக்க கூடிய ஆற்றல் எமக்கே உள்ளது. எனினும் இது தொடர்பாக நாம் உடனடியாக தீர்மானிக்க முடியாது. ஆட்சியமைப்பதாக இருந்தால் வெளிப்படையாக மக்களுடைய அறிவுறுத்தல்களின்படியே தீர்மானிக்க முடியும்.

இலங்கையில் நடைபெற்ற உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் அதிகூடிய ஆசனங்களைப் பெற்ற ஒரே சுயேச்சைக் குழு நாங்களே. மொத்தமாக 19 ஆசனங்கள்.  கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு 77 வீத வாக்குக்களை பெற்றிருந்தது. அதில் எனக்கு 13 வீத வாக்குகளே கிடைந்திருந்தன. ஆனால் இந்த உள்ளுராட்சி தேர்தலில் கூட்டமைப்புக்கு 47 வீதமான வாக்குகளும், எங்களது சுயேட்சைக் குழுவுக்கு 30 வீதமான வாக்குகளும் கிடைக்கப்பெற்றுள்ளது.

அரசியலில் நாங்கள் சிறப்பாக அடையாளம் காணப்பட்ட சக்தியாக இருக்கிறோம். கிளிநொச்சியில் நாம் எதையும் தீர்மானிக்கக் கூடியவர்களாக உள்ளோம்

வடக்கில் பல இடங்களிலும் பல சுயேச்சைக் குழுக்கள் வெற்றியீட்டியுள்ளன. மக்கள் இந்தக் கட்சிகளில் நம்பிக்கை இழந்து, இந்தக் கட்சிகளுக்கு அப்பால் சுயேச்சைக் குழுக்களைத் தெரிவு செய்திருப்பதால், அதற்குப் பொருத்தமான ஒரு வலையமைப்பை நாங்கள் மேற்கொள்ளலாம் என்று எதிர்பார்த்திருக்கிறோம். இது தொடர்பாக எம்முடன் பல தரப்பினர் பேசியிருக்கிறார்கள். நாங்களும் பேசி வருகிறோம். புதிய அரசியல் தெரிவு ஒன்றையே மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

கூட்டமைப்போடு நாங்கள் சேர்ந்து ஆட்சியை அமைப்பது குறித்துச் சிந்திக்கவில்லை. ஆனால், அவர்கள் எம்முடன் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்கள். தேர்தல் காலத்தில் அவர்களுடைய மக்கள் நலனுக்குப் புறம்பான விடயங்களை நாம் விமர்சித்திருக்கிறோம். அதிலிருந்து அவர்கள் மாற்றங்களை உருவாக்கினால், அதை மக்கள் ஏற்று அங்கீகரித்தால் மட்டுமே இதைக் குறித்து நாம் பரிசீலிக்க முடியும். ஆகவே தற்போதைக்கு எந்த உடன்படிக்கையும் கிடையாது.  அதேவேளை வேறு எந்தக் கட்சிகளுடனும் எவ்வித உடன்பாடும் இல்லை” என தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .