2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

‘கூட்டமைப்புக்குக் கொடுத்த காலம் காலாவதியாகிவிட்டது’

Editorial   / 2020 ஜூலை 20 , பி.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

 

தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்குக் கொடுத்த காலம் காலாவதியாகிவிட்டதெனத் தெரிவித்த யாழ். தேர்தல் மாவட்டத்தில் சுயேச்சைக் குழுவில் போட்டியிடும் பொ.ஐங்கரநேசன், இந்தத் தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பைத் தோற்கடிக்கப்பட வேண்டுமெனவும் அதன் மூலம் இந்த அரசாங்கத்துக்கும் சர்வதேசத்துக்கும் பாடம் புகட்ட வேண்டுமென்றும் கூறினார்.

கிளிநொச்சி கூட்டுறவுச்சபை மண்டபத்தில், நேற்று (19) நடைபெற்ற வேட்பாளர் அறிமுக நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், தாங்கள் நம்பி வாக்களித்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர், தங்களுக்கு ஏதாவது தீர்வைப் பெற்றுத்தருவார்கள், விடிவுக்கான வழியைக் காட்டுவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில், சிங்களப் பேரினவாதக் கட்சிகளுடன் கலக்கும் வகையில் தம்மையும் அழைத்துச் சென்றுள்ளனரெனவும் சாடினார்.

பௌத்தம் தான் முதல் மதம் என்று இலங்கை அரசாங்கம் அறிவித்த போது, அதற்கு எதிராக கூட்டமைப்பினரால் குரல் எழுப்ப முடியவில்லையெனக் குற்றஞ்சாட்டிய அவர், மாறாக புலிகளினுடைய குறைகள் பலவற்றைப் பட்டியலிட்டுச் சொன்னார்களெனவும் அதன்மூலம் தமது போராட்டத்தைச் சர்வதேசத்தின் மத்தியில் மலினப்படுத்தினார்களெனவும் சாடினார்.

“ஆயுதப் போராட்டத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்று சொல்லுகின்ற இந்தக் கட்சியினர், எவ்வாறு ஆயுதப் போராட்டத்தின்போது கைதான அரசியல் கைதிகளின் விடுதலைப் பற்றிச் சிந்திப்பார்கள்? இந்த ஆயுதப் போராட்டம் இடம்பெற்றபோது, காணாமல் போனவர்கள் தொடர்பான தீர்வுக்கு எவ்வாறு முயற்சிப்பார்கள்?” எனவும், ஐங்கரநேசன் வினவினார்.

“மீண்டுமொரு சந்தர்ப்பத்தைத் தாருங்கள், ஐக்கிய நாடுகளுடன் பேசுவோம், உலக நாடுகளுடன் பேசுவோம், இராஜதந்திர அரசியலை முன்னெடுப்போம் என, கூட்டமைப்பினர் சொல்லுகின்றார்கள். இனியும் இவர்களுக்கான கால அவகாசத்தைக் கொடுத்தால், பல்வேறான சவால்களுக்கு நாங்கள் மீண்டும் முகங்கொடுக்க வேண்டி நேரிடும்” எனவும், அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X