2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கேப்பாபுலவு காணி விவகாரம்; ஒரு வாரத்தில் தீர்வு வழங்குவதாகப் பிரதமர் உறுதி

Editorial   / 2019 ஜனவரி 23 , மு.ப. 01:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.நிரோஷினி, சி.அமிர்தப்பிரியா

இன்னும் ஒருவார காலப்பகுதியில், படையினர் வசமுள்ள கேப்பாபுலவு காணிகள் குறித்து, இராணுவத்திடம் இருந்து அறிக்கையொன்றைப் பெற்று, அதன் பின்னர் தீர்க்கமான முடிவொன்றைப் பெற்றுத் தருவதாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்ததாக, காணி உரிமைக்கான மக்கள் கூட்டணி தெரிவித்துள்ளது.

அத்துடன், முல்லைத்தீவு மாவட்டப் பிரதிச் செயலாளர் வழங்கிய உறுதிமொழிக்கமைய, எதிர்வரும் 25ஆம் திகதியன்று, கேப்பாபுலவில் விடுவிக்கப்படாதுள்ள காணிகளை விடுவிக்காவிடின், அப்பகுதி மக்கள் தமது சுயவிருப்பத்தின் பேரில், உள்நுழையவுள்ளதாகவும் அக்கூட்டணி தெரிவித்துள்ளது.

மருதானை சிஎஸ்ஆர் மண்டபத்தில், நேற்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, காணி உரிமைக்கான மக்கள் கூட்டணி, இவ்வாறு தெரிவித்தது.

இதன்போது கருத்துரைத்த கூட்டணியின் அமைப்பாளர் சந்துன் துடுகல, டிசெம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர், வடக்கு, கிழக்கில் படையினர் வசமுள்ள காணிகள் அனைத்தும் விடுவிக்கப்படவுள்ளதாக, ஜனாதிபதியால் தெவிக்கப்பட்ட போதும், இதுவரை காணிகள் எதுவும் விடுவிக்கப்பட வில்லையெனக் குற்றஞ்சாட்டினார்.

குறிப்பாக, கேப்பாபுலவு மக்கள், கடந்த 2 வருடங்களாக தமது காணியைக் கோரி போராடிவரும் நிலையில், இன்று வரை, அதற்கான தீர்வு எதுவும் பெற்றுக்கொடுக்கப்படாத நிலையில், அப்பகுதி மக்கள் தென்னிலங்கை மக்களின் உதவியைக் கோரி நிற்பதாகத் தெரிவித்த அவர், இன்று (செவ்வாய்க்கிழமை) பிரதமரிடமும் ஜனாதிபதியின் செயலாளருடனும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரிடமும் பேச்சுவாரத்தை முன்னெடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

கூட்டமைப்பின் தலைவருடனான பேச்சுவார்த்தையில், கேப்பாபுலவு காணி விவகாரம் தொடர்பில் தாம் தொடர்ந்து கவனஞ்செலுத்தி ஜனாதிபதியுடன் பேச்சுவார்​த்தை நடத்தி வருவதாகவும் ஜனாதிபதி அக்காணியை விடுவிக்கும் நோக்கத்துடன் இருப்பதாக, சம்பந்தன் தெரவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

அத்துடன், பிரதமருடனான சந்திப்பில், இன்னும் ஒருவாரக் காலப்பகுதியில், படையினர் வசமுள்ள கேப்பாபிலவு காணிகள் தொடர்பில், இராணுவத்திடம் இருந்து அறிக்கையொன்றைப் பெற்று, அதன் பின்னர் தீர்க்கமான முடிவொன்றைப் பெற்றுத் தருவதாக, பிரதமர் ரணில் விக்கிர மசிங்க உறுதியளித்துள்ளாரெனவும் கூறினார்.

அத்துடன், வடக்கு முழுவதும் 10 ஆயிரம் வீடமைப்புத் திட்டத்துக்கான பூர்வாங்க நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக, பிரதமர் தெரிவித்தாகவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .