2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

சட்டவிரோதமான கடையால் சபையில் குழப்பம்

Editorial   / 2018 ஜூன் 21 , பி.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியா நகரசபையின் உத்தரவை மீறி, சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட புதிய கடையால், வவுனியா நகரசபை அமர்வில், இன்று (21) பெரும் அமளி ஏற்பட்டது.

வவுனியா நகரசபையின் மூன்றாவது அமர்வு, நகரசபை மண்டபத்தில், தவிசாளர் இ.கௌதமன் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது, நகரசபைக் காணியில், நகரசபையின் உத்தரவையும் மீறி, சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கடை, வவுனியா நகரசபை செயலாளரால் பூட்டப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டமை பற்றி, உறுப்பினர் டி.கே.இராஜலிங்கத்தால், சபையில் கேள்வி எழுப்பப்பட்டது. இதையடுத்தே, குறித்த விவகாரம் சபையில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதன்போது, குறித்த விடயம், சபையில் கடும் விவாதத்தை ஏற்படுத்தியது. இதன்போது, நகர சபை உறுப்பினர் காண்டீபனுக்கும் உறுப்பினர்களான லரீப், அப்துல்பாரி மற்றும் பாயிஸ் ஆகியோருக்கும் இடையில், கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

சுமார் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக இது தொடர்பில் கடும் தர்க்கம் ஏற்பட்டதால், இறுதியில் சபை, 5 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதன்போது ஒவ்வோர் உறுப்பினர்களும், எதிர்க்கட்சி உறுப்பினர்களின் காதுக்குள் சென்று மந்திர ஆலோசனை நடத்தினர். இறுதியில், குறித்த விவகாரம் பகிரங்க வாக்கெடுப்புக்கு எடுக்கப்பட்டது.

இதன்போது, குறித்த கடையை நிர்மாணித்தவருக்கே, நீண்டகாலக் குத்தகைக்கு வழங்க வேண்டுமென்ற கோரிக்கைக்கு ஆதரவாக, நகரசபைத் தலைவர் உட்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈ.பி.டி.பி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் 12 பேர் வாக்களித்தனர்.

இதேவேளை, குறித்த கடையை, நகரசபை பொறுப்பேற்பதற்கான பகிரங்கக் கேள்விக் கோரலுக்கு விடவேண்டுமென்ற கோரிக்கைக்கு ஆதரவாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள் 9 பேர் வாக்களித்தனர்.

இதையடுத்து, அதிக வாக்குகளைப் பெற்றதற்கமைய, குறித்த கடையை நிர்மாணித்தவருக்கே, நீண்டகால குத்தகைக்கு வழங்க வேண்டுமெனத் தீர்மானிக்கப்பட்டு, அது தொடர்பான கடிதம், மேலதிக முடிவுக்காக, உள்ளூராட்சி ஆணையாளர் மற்றும் உள்ளூராட்சி அமைச்சருக்கு அனுப்பத் தீர்மானிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .