2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

சாந்தபுரத்தில் தேடுதல் நடவடிக்கை

Editorial   / 2018 ஜூன் 25 , மு.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன்

கிளைமோர், புலிக்கொடி என்பன மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில், கிளிநொச்சி - சாந்தபுரம் பகுதியில், பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால், நேற்றும் (24) தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பகுதியில் வைத்து, வௌ்ளிக்கிழமை (22) காலை, ஓட்டோவில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான பொருட்கள் சில கைப்பற்றப்பட்டன. இதன்போது, 20 கிலோ கிராம் கிளைமோர் 1, கைக்குண்டு 1, தொலைதூர இயக்கிகள் 4, டி56 சன்னங்கள் 98, விடுதலைப் புலிகளின் சீருடைகள் 2, விடுதலைப் புலிகளின் கொடிகள் சுமார் 40 என்பன கைப்பற்றப்பட்டன.

இதையடுத்து, ஓட்டோவில் பயணித்த இருவர் கைதுசெய்யப்பட்டனர். அத்துடன், சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் என்று சந்தேகிக்கப்படும் ஒருவர், தப்பியோடியிருந்தார். இந்நிலையில் தப்பியோடிய நபரை, இராணுவம், பொலிஸார், புலனாய்வாளர்கள் இணைந்து தேடி வந்த நிலையில், வன்னிவேளாங்குளம் பகுதியில் வைத்து நேற்று முன்தினம் (23) இரவு, பிரதான சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டார்.

கைதுசெய்யப்பட்டவரை, கிளிநொச்சி - சாந்தபுரம் பகுதிக்கு அழைத்துச் சென்ற பொலிஸாரும் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரும், அங்கு உள்ள பகுதிகளில் ஆயுதங்கள் இருக்கலாம் என சந்தேகித்து, தேடுதல் மேற்கொண்டனர். இந்நிலையில், குறித்த பகுதிக்கு, நேற்று யாரும் அனுமதிக்கப்படவில்லை.

அப்பகுதியில், இதுவரை எவ்வித ஆயுதங்களோ, வெடிபொருட்களோ மீட்கப்படாத நிலையில், பிரதான சந்​தேகநபரின் வாக்குமூலத்துக்கு அமைவாக, நேற்று (24) அதிகலை 1.30 மணி வரை, தேடுதல் நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டது.

இதேவேளை, சந்தேகநபர்கள் கடத்திச் சென்ற வெடிபொருட்களில் சில களவாடப்பட்டுள்ளன எனவும், அது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .