2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘சிறுபான்மையினராக்க வேண்டும் என்பது பெரும்பான்மையினரின் திட்டமாகவுள்ளது’

சண்முகம் தவசீலன்   / 2018 மார்ச் 16 , மு.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

“சிறுபான்மை மக்களை இன்னும் சிறுபான்மையாக்க வேண்டும் என்பது பெரும்பான்மையினரின் திட்டமாக இருக்கின்றது” என வடமாகாண சபை விவசாய அமைச்சர் க.சிவனேசன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 207 பயனாளிகளுக்கான விவசாய உள்ளீடுகள் வழங்கும் நிகழ்வு நேற்று (15) ஒட்டுசுட்டான் விவசாய பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“முல்லைத்தீவு மாவட்டத்தில் சகல மக்களும் ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்நிலையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக காலநிலை மாற்றம் மிக மோசமாக பாதித்துள்ளது. நாங்கள் எதிர்பார்க்கின்ற மழை கிடைக்கவில்லை. இதனால் விவசாய திட்டமிடல்கள் தொடர்பில் மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன.

முல்லைத்தீவு மாவட்ட விவசாய மக்கள் நெற்செய்கையை முழுமையாக நம்பி, தங்கள் வாழ்வாதாரத்தை கொண்டு செல்லவேண்டுமாக இருந்தால், 16 ஏக்கர் காணியில் இரண்டு போகங்கள் செய்தால், ஒரு குடும்பம் சாதாரண வாழ்க்கையை வாழ முடியும் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, காலநிலை மாற்றத்துக்கு ஏற்ப மாற்றுப் பயிர்ச் செய்கைகளை மேற்கொண்டால், வருமானம் அதிகரிக்கும்.

மணலாற்று பகுதியில் குடியேற்றங்கள் நடைபெறுகின்றது. அங்கு தமிழர்களின் காணிகள் இருக்கின்றது. அங்கு நீங்கள் குடியேறுகின்றீர்களா, நாங்கள் சில வசதிகளை செந்து தருகின்றோம் என்று கேட்டால் ஒருவர் கூட அதற்கு தயார் இல்லை.

ஆனால் தெற்கில் உள்ள சிங்களவர்கள் அங்கு குடியேறி இருந்து எங்கள் இடங்களில் பயிர் செய்து அப்பயிர்களின் அறுவடைகளை எங்கள் இடங்களில் உள்ள வீதிகளில் கொண்டுவந்து விற்பனை செய்கின்றார்கள்.

சிறுபான்மை மக்களை இன்றும் சிறுபான்மையாக்க வேண்டும் என்பது பெரும்பான்மையினரின் திட்டமாக இருக்கின்றது. அவர்கள் திட்டத்தை நிறைதுவேற்றிக்கொண்டுதான் இருக்கின்றார்கள். நாங்கள் சொல்லி சொல்லி இன்னும் கீழே போய்க்கொண்டு இருக்கின்றோம். தெற்கில் இருக்கின்ற சிங்கள அரசு மட்டும் தமிழர்களை ஒடுக்கவில்லை. நாங்களும் சிந்திக்க வேண்டும். மாவட்டத்தில்  வளமான பகுதிகள் இருக்கின்றது. அவற்றை அபிவிருத்தி செய்து மக்கள் வாழக்கூடியதாக நாங்கள் மாற்றுவோமாக இருந்தால், எங்களுடைய மக்களும் அங்கு சென்று குடியேற முடியும். அவர்களும் வளர்த்துக்கொள்ளுவார்கள். அப்போதுதான் சிங்கள குடியேற்றங்களை நிறுத்த முடியும். அதிகாரிகள் கூட இதனை பற்றி சிந்திக்கின்றார்கள் இல்லை” என தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .