2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சுகாதாரத் தொண்டர்களுக்கு பதிலளிக்காது தப்பியோடிய ராஜித

க. அகரன்   / 2017 செப்டெம்பர் 24 , பி.ப. 07:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

வட மாகாண சுகாதாரத் தொண்டர்களுக்குப் பதிலளிக்காது, சுகாதாரம், போஷணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரத்ன தப்பியோடிய சம்பவமொன்று வவுனியாவில் இடம்பெற்றுள்ளது.

வட பகுதியில், பல்வேறு கட்டடங்களைத் திறந்து வைப்பதற்கு விஜயம் செய்த ராஜித சேனாரத்ன, வவுனியாவில் அமைக்கப்பட்ட சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையை, இன்று  (24) மாலை திறந்து வைத்தார்.

இதன்போது, நிரந்தர நியமனம் கோரி தொடர்ச்சியாக போராடிய நிலையில், மத்திய, மாகாண சுகாதார அமைச்சர்களின் வாக்குறுதிகளை நம்பி போராட்டத்தைக் கைவிட்டிருந்த சுகாதாரத் தொண்டர்கள், தமது நியமனம் தொடர்பில் கேட்டுக் கொள்வதற்கும் மகஜர் ஒன்றைக் கையளிப்பதற்கும் முயன்றபோது, ராஜித சேனாரத்ன அவர்களை சந்திக்காது, ஊடகங்களின் கேள்விகளுக்கு பதிலளிக்காது, உடனடியாக வாகனத்தில் ஏறி அங்கிருந்து சென்று விட்டார்.

இது தொடர்பில் சுகாதாரத் தொண்டர்கள் தெரிவிக்கையில்,

“நாம் தொடர்ச்சியாக நிரந்தர நியமனம் கோரிப் போராடி வந்த நிலையில், ஓரு மாத காலத்துக்குள் நிரந்தர நியமனம் வழங்கப்படும் என்ற உத்தரவாதத்துக்கு அமைவாக, எமது போராட்டத்தைக் கைவிட்டிருந்தோம். இன்று (நேற்று முன்தினம்) மத்திய சுகாதார அமைச்சரிடம் மகஜர் கையளித்து எமது நியமனம் தொடர்பில் கேட்டறிவதற்காக பல மணிநேரமாக காவல் இருந்தபோதும் எம்மைச் சந்திக்காது சுகாதார அமைச்சர் சென்று விட்டார். இதனால் மிகுந்த மனவருத்த்துடன் நாம் இரவு வேளையில் வீடு திரும்புகின்றோம்” எனத் தெரிவித்தனர்.

இதேவேளை, ஊடகவியலாளர்களின் கேள்விக்கும் பதிலளிக்கபாது அவர் சென்றமை தொடர்பில் ஊடகவியலாளர்களும் அதிருப்தி வெளியிட்டு இருந்தனர்.

பிராந்திய சுகாதார வைத்திய சேவைகள் பணிப்பாளர் திருமதி பவானி பசுபதிராஜா தலைமையில் நடைபெற்ற சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை திறப்பு நிகழ்வில், பிரதி சுகாதார அமைச்சர் பைஸல் காசிம், நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான், வட மாகாண சபை உறுப்பினர் ஜயதிலக உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .