2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘சுயநல வழியை கூட்டமைப்புப் பின்பற்றியது’

Editorial   / 2020 ஜூலை 27 , பி.ப. 12:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

தமிழ்த் ​தேசிய கூட்டமைப்பினர் கொள்கை வழியில் பயணிக்காது சுயநல வழியைப் பின்பற்றியதாலேயே, தமிழ் மக்களின் முதல் அணி என்கின்ற அந்தஸ்தை இழந்ததாகத் தெரிவித்த வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், “இதனால் தான், நாம் மாற்று அணி ஆகியுள்ளோம்” எனவும் கூறினார்.

தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தேர்தல் பிரசாரக் கூட்டம், மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில், நேற்று (26) மாலை 5.45 மணியளவில், மன்னார் நகர சபை உறுப்பினர் எஸ்.ஆர்.குமரேஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், முதலமைச்சராகப் பதவியேற்று, பொது மக்களைச் சந்தித்து, தமது மக்களுக்கு எதிராக நடைபெற்றது இனப்படுகொலை தான் என்று, அதனை பகுத்து அறிந்து கொண்டபோது, எத்தகைய ஒரு பெரும் பொறுப்பு தன் தோள்களில் சுமத்தப்பட்டுள்ளது என்பதை அப்பொழுது தான் உணர்ந்து கொண்டேனெனவும் கூறினார்.

அந்தக் கடப்பாட்டை உணர்ந்து, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நடக்க முற்படவில்லை என்பது தனக்கு மன வருத்தத்தை தந்ததாகத் தெரிவித்த அவர், எத்தனை இடர் வந்தாலும், தமது உரிமைகள் விடயத்தில் எந்தவிதமான விட்டுக்கொடுப்புகளையோ, காட்டிக்கொடுப்புகளையோ நாம்   செய்து விடக்கூடாதென்பதில், கவனமாக இருந்தோமெனவும் கூறினார்.

அதனால் தான், கடும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்ட போது,   இனப்படுகொலை தீர்மானத்தைக் கைவிடவோ அல்லது பொறுப்புக்கூறல் விடயத்தில் விட்டுக்கொடுப்புகளை செய்யவோ தான் தயாராக இருக்கவில்லையெனவும், விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

உண்மையில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர்  வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்போது, நீரோ பிடில் வாசித்தது போல்தான் நடந்து கொண்டிருந்தார்களெனச் சாடிய அவர், பிரச்சினைகளை அப்படியே விட்டு விட்டு, தமது சுய இலாப சிந்தனைகளில் இருந்தனரெனவும் இப்பொழுதும் அப்படித்தான் இருக்கின்றார்களெனவும் கூறினார்.

“கொள்கைகள் என்பது வெறும் வாய்ப்பேச்சு பொருளாக மாறி இருந்தன. நானும் சந்தர்ப்பவாதியாக மாறி, சிங்கள மக்கள் மற்றும் அரசியல்வாதிகளுடன் இருந்த தொடர்புகளை வைத்து, அரசாங்கத்துடன் இணைந்து, அவர்களுக்கு ஏற்ப தாளம் போட்டு  இருந்தால் அல்லது அவர்களை நெல்சன் மண்டேலாவுக்கு ஒப்பாக தூற்றி துதி பாடி இருந்தால், எமது மாகாண சபைக்கு பல மடங்கு நிதியை அவர்கள் ஒதுக்கி இருப்பார்கள். பல செயற்றிட்டங்களை வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்க அனுமதி வழங்கிய இருப்பார்கள்” எனவும் அவர் கூறினார்.

ஆனால், அவ்வாறு செய்திருந்தால் தமிழ் மக்களின் பல தசாப்த கால உரிமைப் போராட்டங்களுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி இருப்பேனெனத் தெரிவித்த அவர், அதனால் பெரும் துரோகத்தை தான் இழைத்திருப்பெனெனவும் கூறினார்.

“அதனால் தான் நான் அத்தகைய தவறை செய்யவில்லை. தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் மட்டுமல்ல, அப்போதைய பிரதமர் ஜனாதிபதியுடன் நான் பல தடவைகள் எமது கொள்கைகள் காரணமாக நான் முரண்பட நேர்ந்தது.

“எனவே, நாங்கள் பிரிய வேண்டி வந்தமைக்கு காரணம், தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரின் சுயநலம் சார்ந்த கொள்கைகள்  நடவடிக்கைகள் தான். எமது தமிழ் மக்கள் தேசிய  கூட்டணி கட்சி ஒரு நிறுவன மயப்படுத்தப்பட்ட கட்சியாக வரையறை செய்யப்பட்ட கொள்கையுடன் செயற்படுகின்றது. அதற்கான எழுத்து மூல உடன்பாட்டில் நாம் கைச்சாத்திட்டுள்ளோம்” எனவும், விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

தம்முடைய தனிமனித உணர்வுகளோ, செயற்பாடுகளோ  எதுவித தாக்கத்தையும் ஏற்படுத்தாதெனத் தெரிவித்த அவர், மாறாக கொள்கை வழி பயணத்தில் தாம் தொடர்ந்து செல்வோமெனவும் கூறினார்.

தமக்குப் பின்பும் இந்தக் கட்சி நீடித்து நிலைத்து நிற்கும் என்று எதிர்பார்க்கின்றோமெனத் தெரிவித்த அவர், தமிழரசுக் கட்சியினரின் ஆரம்ப கால நேர்வழிப் போக்கும்  வெளிப்படைத்தன்மையும் தற்போது அற்றுப் போய்விட்டதெனவும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .