2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வவுனியாவில் போராட்டம்

க. அகரன்   / 2017 ஒக்டோபர் 09 , பி.ப. 12:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரியும் அவர்கள் மீதான வழக்குகளை தென்பகுதி நீதிமன்றத்துக்கு மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் வவுனியாவில் பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டமொன்று இன்று நடைபெற்றது. வவுனியா மாவட்ட பொது அமைப்புகளின் ஏற்பாட்டில், பஸ் நிலையம் முன்பாக இவ்வார்ப்பாட்டம் காலை 10 மணியிலிருந்து ஒரு மணி நேரத்துக்கு நடைபெற்றது.

தமிழ் அரசியல் கைதிகள் மூவரின் வழக்குளை, வவுனியா மேல் நீதிமன்றத்திலிருந்து அநுராதபுரம் மேல் நீதிமன்றுக்கு மாற்றியுள்ள நிலையில், அவர்கள் தொடர்ச்சியாக கடந்த 14 நாட்களாக உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் உடல் நிலை மோசமடைந்துள்ள நிலையில் அவர்களது போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும் அரசியல் கைதிகளை விடுவிக்க வலியுறுத்தியும் இப்போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், “ஜனாதிபதி அவர்களே, சிறைகளில் வாடும் அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்யுங்கள். பிரதமர் அவர்களே, அரசியல் கைதிகளின் விடயத்தை மனிதாபிமானத்துடன் அணுகி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவாதமளித்த உங்களது உத்தரவாதத்தை நிறைவேற்றுங்கள். எதிர்க்கட்சித் தலைவர் அவர்களே, ஜனாதிபதியின் வாக்குறுதியை அரசியல் கைதிகளுக்குத் தெரிவித்து, உண்ணாவிரதத்தை முடித்து வைத்தீர்களே, அதனடிப்படையில் அவர்களின் விடுதலையை வலியுறுத்தி அரசாங்கத்துக்குகு அழுத்தம் கொடுங்கள்.

அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களே, ஆயுதப் போராட்டம் தொடங்குவதற்குக் காரணமாக இருந்த காரணிகள் இன்னமும் அப்படியே இருக்கிறது என்று கூறிய எதிர்க்கட்சித் தலைவரின் கூற்றுக்கு எதிர்ப்பேதும் தெரிவிக்காமல் அதனை ஏற்றுக்கொண்டுள்ள தாங்கள் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்துங்கள். சர்வதேச சமூகமே, எந்த வழியில் பார்த்தாலும் பல்லாண்டுகளாக சிறைவாசம் அனுபவிக்கும் அரசியல் கைதிகள் அனைவரும் அரசியல் காரணங்களுக்காகவே தடுத்து வைக்கப்பட்டிருப்பது சர்வதேச சமூகத்துக்கும் இந்த நாட்டு மக்களுக்கும் நன்றாகவே தெரியும், எனவே, நல்லிணக்கத்தை வெளிப்படுத்துவதற்காகவும் நாங்கள் உங்கள்மீது வைத்துள்ள நம்பிக்கையை அங்கிகரிப்பதற்காகவும் சகல அரசியல் கைதிகளையும் நிபந்தனையின்றி விடுதலை செய்யுங்கள்.

தமிழ் அரசியல் தலைவர்களே, மக்கள் பிரதிநிதிகளே, அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி நாங்கள் வீதிகளில் இறங்கிவிட்டோம். இனியாவது நீங்கள் எம்முடன் இணைவீர்களா? என அவர்கள் கோஷங்களை எழுப்பியிருந்தனர்.

குறித்த போராட்டத்தில், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், புதிய மாக்சிச லெனினிசக் கட்சி உறுப்பினர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X