2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

‘தலைமைகள், கொள்கைகளில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்’

Editorial   / 2018 பெப்ரவரி 22 , பி.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

- க.அகரன்

“அதிகாரத்தை எம்மக்களுக்கு பெற்றுக் கொடுக்க வேண்டும் என ஆதங்கப்படுகின்ற சகல தலைமைகளும் தங்கள் கொள்கைகளில் மாற்றத்தை ஏற்படுத்தி ஒரு ஒருமைப்பாட்டுக்கு வரவேண்டும்” என வடமாகாண சுகாதார அமைச்சர் ஞா.குணசீலன் தெரிவித்தார்.

வவுனியா புளியங்குளம் பிரதேச வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவுக்கான திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“வடமாகாண சபையின் சுகாதார அமைச்சின் கீழ் 123 வைத்தியசாலைகள் இருந்தாலும் கூட, 21 வைத்தியசாலையில் இன்னும் ஒரு தனி வைத்தியரை நியமிக்க முடியாத நிலையில் இருக்கிறோம்.  வடமாகாண சபையில் குறிப்பாக சுகாதார திணைக்களத்தை பொறுத்த வரை வைத்திய நிபுணர்கள் உட்பட ஆளணி பற்றாக்குறையில் பாரிய சவாலை எதிர்நோக்க வேண்டியுள்ளது. இவர்களை நியமிப்பது இவர்களின் எண்ணிக்கையை தீர்மானிப்பதில் மத்திய அரசும் உத்தியோகத்தர்களுடைய சங்கங்களும் செல்வாக்கு செலுத்துவதால் எங்களது சுகாதார திணைக்களத்துக்குரிய உத்தியோகத்தர்களை நியமிப்பதில் மிகுந்த சிரமத்துக்குள்ளாகியுள்ளோம்.

வைத்திய நிபுணர் ஒருவரை வைத்தியசாலைக்கு நியமிப்பதில் கடும் பிரயத்தனம் மேற்கொள்ள வேண்டியிருக்கின்றது. பாராபட்சம் என்ற ஒன்று வடமாகாணத்திலே காட்டப்பட்டு வருகின்றது. எங்களது அடிப்படை தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளக்கூடிய அதிகாரங்களை பெற்றுக்கொள்ள வேண்டிய தேவை எமக்கிருக்கின்றது. தேவையான பூரணமான அதிகாரங்களை வடமாகாணசபையால் பெற்றுக்கொள்ள முடிகின்றதோ அப்போதுதான் இவ்வாறான பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும். அதுவரைக்கும் மத்திய அரசிடமும் மத்திய சுகாதார அமைச்சிடமும் கையேந்துகின்ற நிலைதான் இங்கு இருக்கின்றது.

இன்றைய காலகட்டத்திலே எது நடந்தாலும் அது தமிழர்களின் பகுதியிலே தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. மத்தியில் ஸ்திரமான பெரும்பான்மையான ஆட்சி அமைந்தாலும் ஸ்திரமற்ற ஆட்சி அமைந்தாலும் அதன் பாதிப்பு  தமிழ் இனத்தின் மீது திரும்புகின்றது.

இதிலே தமிழ் மக்கள் என்ற ரீதியிலும் வடமாகாண மக்கள் என்ற ரீதியிலும் சிலவற்றை சிந்திக்க வேண்டியிருக்கின்றது. ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்ட எமது விரல்கள் நீட்டும் போது ஏனைய விரல்கள் எங்களை சுட்டிக்காட்டுகின்றது என்பதை மறந்து விட முடியாது. நடந்து கொண்டிருக்கின்ற தவறுகளுக்கும், நடந்து கொண்டிருக்கின்ற தவறுகளுக்கும் மக்களிடையே ஏற்பட்ட மாற்றங்களுக்கும் காரணம் என்று சொல்லி மற்றவர்களை நாங்கள் விரல் நீட்ட முடியாது. தமிழ் தரப்பு உட்பட சரியான சமஸ்டி முறையிலான அதிகாரத்தை எம்மக்களுக்கு பெற்றுக் கொடுக்க வேண்டும் என ஆதங்கப்படுகின்ற சகல தலைமைகளும் தங்கள் கொள்கைகளில் மாற்றத்தை ஏற்படுத்தி ஒரு ஒருமைப்பாட்டுக்கு வரவேண்டும். அவ்வாறு வராவிட்டால் எங்கள் மக்களது நிலைமை இன்னும் ஒரு மோசமான நிலையை சந்திக்க வேண்டி வரும்” என்று தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X