2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

தவிசாளராக யோகராஜா தெரிவு

Niroshini   / 2021 மே 05 , பி.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியா தெற்கு தமிழ்ப் பிரதேச சபையின் புதிய தவிசாளராக, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பங்காளிகட்சியான புளொட்டினை சேர்ந்த தர்மலிங்கம் யோகராஜா தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

கடந்தமுறை இடம்பெற்ற உள்ளூராட்சி சபை தேர்தலில், வவுனியா தெற்கு தமிழ்ப் பிரதேச சபை மற்றும் முல்லைத்தீவு - கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் ஆட்சியை, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றியிருந்தது.

இதற்கமைய, சபையின் தவிசாளர் பதவியை, ஆட்சி காலப்பகுதியில் இரண்டரை வருடங்கள் எனப் பங்கிட்டு வகிப்பதற்கு, கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் புளொட் மற்றும் டெலோ ஆகியவற்றுக்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டிருந்தது.

இதற்கமைவாக, வவுனியா தெற்கு தமிழ்ப் பிரதேச சபை தவிசாளர் து.நடராயசிங்கமும் கரைத்துறைப்பற்று பிரதேச சபை தவிசாளரும், தங்களது பதவிகளை இராஜினாமா செய்திருந்தனர்.

இதையடுத்து, கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் புதிய தவிசாளர் ஏற்கெனவே தெரிவுசெய்யப்பட்டுள்ள நிலையில், வவுனியா தெற்கு பிரதேச சபையின் புதிய தவிசாளருக்கான தேர்தல், மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் டிறஞ்சன் தலைமையில், இன்று (05) நடைபெற்றது.

இதன்போது, தமிழர் விடுதலைக் கூட்டணியினால் த.யோகராஜாவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. வேறு கட்சிகளைச் சார்ந்தவர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்படாத நிலையில், யோகராஜா போட்டியின்றி, தவிசாளராகத் தெரிவுசெய்யப்பட்டார்.

தவிசாளராக தெரிவுசெய்யப்பட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த த. யோகராஜா, தமது சபைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள ஆபத்தான கற்குவாரிகளின் அனுமதிப்பத்திரங்களை மீளப்பெறுவதற்கான பரிசீலணைகளை செய்வதாகத் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .