2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய வகையில், மாகாண சபை இல்லை’

Editorial   / 2018 மார்ச் 05 , பி.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

- க.அகரன்

மக்களுடைய தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய வகையில், மாகாண சபையின் அமைச்சுக்களும் திணைக்களங்களும் இல்லை என வட மாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.

வவுனியாவில் வடமாகாண விவசாய அமைச்சின் ஏற்பாட்டில் இடம்பெற்ற விவசாயிகள் மற்றும் பண்ணையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தற்போதைய காலநிலை மாற்றத்தால் விவசாயத்தை மேற்கொள்ள முடியாமல் எமது மாவட்ட விவசாயிகள் படும் துன்பத்தை நாங்கள் அறிவோம். அந்த வகையிலே எமது மாகாண சபை பல வேலைகளை செய்தாலும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுடைய தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய வண்ணம் எமது மாகாண சபையின் அமைச்சுக்களும் திணைக்களங்களும் இல்லை என்பது மிகவும் மனவேதனையான விடயம்.

மகாவலி நீர்ப்பாசன திட்டம் என்பது எமது வவுனியா மாவட்டத்திலே 30 குளங்களில் நீர் வருகையை உறுதிப்படுத்தும் திட்டமாக இருக்கின்றது.

இதனால் எமது பகுதி விவசாயிகள் 2 போகம் செய்யகூடிய சந்தர்ப்பம் இருந்தாலும் இரண்டு போகம் செய்தால் எமது விலங்குகளை மேய்ப்பதற்கான மேய்ச்சல் நிலங்கள் இல்லாமல் போகும். அது பற்றியும் நாம் சிந்திக்க வேண்டும்.

மகாவலி நீரை வடபகுதிக்கு கொண்டு வருவதற்கான தேவை நிச்சயமாக இருக்கிறது. இத்திட்டம் தேவையான போதும் தண்ணி வரும் பொழுது குடியேற்றமும் வந்து விடும் என்ற பயம் எமக்கு உள்ளது. இது போலத்தான் மகாவலி நீரை கிழக்கு மாகாணத்துக்கு கொண்டு செல்லும் போது நீர் அங்கு செல்லும் முதல் வேறு மாகாணங்களை சேர்ந்த மக்கள் அங்கு குடியேற்றப்பட்டமை நாம் மறக்க இயலாது.

முதலமைச்சர் மற்றும் ஜப்பான் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலில் நாம் இது தொடர்பாக குறிப்பிட்டோம். இந்த திட்டம் முக்கியமான திட்டமாக இருந்தாலும் எமது சந்தேகங்களை நீக்கி புதிதாக சட்டங்களை இயற்றி எமது நிலம் ஆக்கிரமிக்கப்படாத வகையிலே இந்த நீர் வடமாகாணத்துக்கு கொண்டு வரப்பட வேண்டும்.

யுத்த பாதிப்பால் பல காலமாக செய்கை பண்ணப்படாத விவசாய நிலங்களை விவசாயிகள் சென்று அந்நிலத்தை துப்பரவு செய்யும் பொழுது வனவளத்துறை அதற்கு தடைகளை ஏற்படுத்துகிறது. அத்துடன் கைது செய்து வழக்கு தாக்கல் செய்யும் நிலைமைகளும் உள்ளது.

மாகாண சபை உறுப்பினர் என்ற வகையில் எம்மை தேடி வரும் வாழ்வாதாரம் அற்ற மக்களுக்கு பெருந்தொகையான நிதியினை செலவு செய்கின்றோம். ஆனால் அந்த நிதி எவ்வளவு பயனுள்ளதாக செலவிடப்படுகிறது என்பது தொடர்பான ஆய்வு செய்யப்படவேண்டியுள்ளது” என தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .