2024 மார்ச் 28, வியாழக்கிழமை

‘நம்பிக்கையை இல்லாதொழிக்கும் செயற்பாட்டை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது’

சுப்பிரமணியம் பாஸ்கரன்   / 2017 ஓகஸ்ட் 08 , மு.ப. 11:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

“நல்லாட்சி அரசாங்கம் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை இல்லாது ஒழிக்கும் செயற்பாட்டையே, அரசாங்கம் தொடர்ந்தும் முன்னெடுத்து வருவதாக” நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி இரணைதீவு மக்கள், தமது பூர்வீக நிலங்களை விடுவிக்கக்கோரி, இவ்வாண்டு மே மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கப்பட்ட தொடர் போராட்டம், நேற்று (08) 100ஆவது நாளாகவும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

1992ஆம் ஆண்டு யுத்த சூழ்நிலையால், இரணைதீவிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள், தங்களது சொந்த இடமான இரணைதீவில் மீள்குடியேற்றுமாறு தொடர்ச்சியாகக் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், இவ்வாண்டு மே மாதம் முதலாம் திகதி முதல் தொடர்ச்சியான கவனயீர்ப்புப் போராட்டதை ஆரம்பித்தனர்.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன்,

“அரசாங்கம் எங்களுடன் பேசிக்கொள்வது போலக் காட்டிக்கொண்டு, மறுபக்கத்தில் திட்டமிட்ட நில அபகரிப்புகளையும் செய்து வருகின்றது. பூர்வீகமாக தலை முறையாக வாழ்ந்த இரணைதீவு மக்களுடைய நிலத்தை, அரசாங்கம் விடுவிக்கவில்லை. போராடி வருகின்ற மக்கள் 100 நாட்களுக்கு மேலாக வீதியிலிருந்து, தொழிலின்றி, பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் போராடி வருகின்றனர்.

அண்மையில், இந்த மக்களைச் சந்தித்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன, இரண்டு வாரங்களுக்குள் ஜனாதிபதியுடன் பேசி தீர்வினைத் தருவதாக அந்த மக்களுக்கு உறுதியளித்து இரண்டு மாதங்களாகியபோதும் அந்த மக்களுக்கான தீர்வு இன்னமும் வழங்கப்படவில்லை. கேப்பாப்புலவு, இரணைதீவு ஆகிய பகுதிகளில் தமது பூர்விக நிலங்களை விடுவிக்கக்கோரி இந்த மக்கள் போராடி வருகின்றனர்.

இலங்கை, இந்திய ஒப்பந்தக் காலத்திலும் கிழக்கு மாகாணத்திலேயே பல்வேறு நில அபகரிப்புக்களும் சிங்களக் குடியேற்றங்களும் முன்னெடுக்கப்பட்டன. அப்போது, திட்டமிட்ட சிங்களக்குடியேற்றங்களையும் நில ஆக்கிரமிப்புக்களையும் தடுத்து நிறுத்தவேண்டுமென்று 12 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து ஐந்து அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து தியாகி தீலிபன் உயிர்நீத்தார்.

 

நிலங்களுக்காக இன்று மக்கள் போராடிக்கொண்டிருக்கின்ற போது, அந்த நிலங்களை விடுவிக்காது போராட்டங்களை நீள விட்டுச் செல்வதுடன் அரசாங்கம் எங்களுடன் பேசிக்கொள்வது போல காட்டிக்கொண்டு மறுபக்கத்தில் திட்டமிட்ட நில ஆக்கிரமிப்புக்களை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முன்னெடுத்து வருகின்றது. ஆகவே, நல்லாட்சி அரசாங்கம் மீது மக்கள் கொண்டிருக்கின்ற நம்பிக்கையை முற்றுமுழுதாக இல்லாமல் செய்யவே, இந்த மக்களுடைய போராட்டங்களை இந்த நல்லாட்சி அரசு நீளவிட்டு வேடிக்கை பார்க்கின்றது” என மேலும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X