2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

பங்குத்தந்தையிடம் பொலிஸார் மன்னிப்புக் கோரவேண்டும்

Yuganthini   / 2017 ஜூன் 26 , பி.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

இரணைதீவு மக்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த இரணைமாதா நகர் ஆலயத்தின் பங்குத்தந்தை அருள் செல்வன் அடிகளாருக்கு, பொலிஸ் அதிகாரியொருவர் எச்சரிக்கை விடுத்த சம்பவத்துக்கு, கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ள மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க ஒன்றியம், இந்தப் பிரச்சினையுடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரி, குறித்த பங்குத்தந்தையிடம் மன்னிப்புக் கோர வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பில், மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க ஒன்றியத்தின் செயலாளர் ஜோசப் கெனடியினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில், மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'ஆன்மீகப் பணி மட்டுமல்லாது, பொதுப் பணிகள் மற்றும் உரிமைகளுக்காகவும் தங்களது மதகுருமார்கள் குரல் கொடுத்து வருவதோடு, யுத்தம் நடைபெற்ற காலங்களில் கூட, தங்களின் உயிர்களைத் தியாகம் செய்து இறுதிவரை மக்களோடு மக்களாக இருந்து சேவை செய்ததை யாராலும் மறந்துவிட முடியாது.

'இந்நிலையில், நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில், ஜனநாயக ரீதியில் போராடும் மக்களுடன் இணைந்து குரல் கொடுப்பவர்களை இவ்வாறு எச்சரிப்பதை, உடன் நிறுத்த வேண்டும்.

'இதேவேளை, மக்கள் எதற்காகப் போராடுகின்றார்கள் என்று ஆராய்வதுடன், மக்களிடமும் மக்களின் சார்பாக உள்ள மத குருமார்கள், மக்கள் பிரதிநிதிகள், அரசியல்வாதிகள் உட்பட கிராம மட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், தலைவர்களை அழைத்து, கலந்துரையாடல்களை மேற்கொள்வதோடு, மக்களின் ஜனநாயக ரீதியிலான போராட்டததுக்கான தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பது, ஒவ்வொரு அரசாங்கத்தினதும் பொலிஸாரினதும் மிக முக்கிய பொறுப்பும் கடமையும் ஆகும்' என,  கத்தோலிக்க ஒன்றியத்தின் செயலாளர் தமது அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X