2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பாதுகாப்பான ரயில் கடவைகளைக் கோரி ஆர்ப்பாட்டம்

க. அகரன்   / 2017 ஓகஸ்ட் 15 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ரயில் பாதைகளில், பாதுகாப்பான ரயில் கடவைகளை அமைக்கக் கோரி, ரயிலை வழிமறித்து, ஆர்ப்பாட்டமொன்று, வவுனியாவில் இடம்பெற்றது. இதன்காரணமாக, அரை மணி நேரம் ரயில் சேவை பாதிப்படைந்தது.

வவுனியா, தாண்டிக்குளம் பாதுகாப்பற்ற ரயில் கடவை முன்பாக, நேற்றுக் காலை 8.05லிருந்து 8.35 வரை குறித்த போராட்டம் இடம்பெற்றது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியாவிலிருந்து மாங்குளம் வரையிலான ரயில் பாதையில், பல இடங்களில் பாதுகாப்பற்ற ரயில் கடவைகள் காணப்படுகின்றது. இதன் காரணமாக, கடந்த மூன்று மாதங்களில், குறித்த பகுதிகளில் நான்கு விபத்துகள் ஏற்பட்டு ஐந்து பேர் மரணமடைந்துள்ளனர். வவுனியா தாண்டிக்குளம் பகுதியில், கொழும்பில் இருந்து யாழ். சென்ற ரயில், ஓட்டோவுடன் மோதி விபத்துக்குள்ளானதில், நேற்று முன்தினமும் (14) இளைஞனரொருவர் மரணமடைந்திருந்தார். 

இந்நிலையில், யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற ரயிலை, வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் வழிமறித்த மக்கள், அப்பகுதியில் பாதுகாப்பான ரயில் கடவை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

குறித்த பகுதியில், ரயில் கடவை முன்னர் பாதுகாப்பானதாக இருந்தபோது விபத்துகள் தடுக்கப்பட்டிருந்ததாகவும் தற்போது பாதுகாப்பான கடவை நீக்கப்பட்டு, சமிக்ஞை விளக்குள் மட்டுமே பொருத்தப்பட்டுள்ளதாகவும் நாற்சந்தி ஆக அமைந்துள்ள குறித்த பகுதியில், பொருத்தப்பட்ட சமிக்ஞை விளக்குள் அவ்வீதி வழியாக பயணிப்பவர்களுக்கு ஒழுங்கான முறையில் தெரியவில்லை எனவும் தமக்கு பாதுகாப்புக் கடவையே தேவை எனவும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர்.

இதுதொடர்பில், புகையிரதத் திணைக்களம், மாவட்ட அரச அதிபருக்கு, எழுத்து மூலம் தாம் முன்னர் தெரியப்படுத்தியிருந்ததாகவும் மக்கள் தெரிவித்தனர்.

இப்போராட்டத்தில், வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வட மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வட மாகாண சபை உறுப்பினர் ம.தியாகராசா, முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் செ.மயூரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சம்பவ இடத்துக்கு வந்த வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதுடன் நாளொன்றுக்கு 250 ரூபாய் வீதம் அப்பகுதியைச் சேர்ந்தவர்களை உடனடியாக அக்கடவையில் கடமையில் அமர்த்துவமாகவும், இது தொடர்பில் மாவட்ட அரச அதிபர் தலைமையில் கூடி இறுதி முடிவுகள் எடுப்பதாகவும் பொலிஸ் தரப்பு வழங்கிய வாக்குறுதியையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

இவ்வார்ப்பாட்டம் காரணமாக, யாழிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற புகையிரம் 30 நிமிடங்கள் தாமதித்தே பயணத்தைத் தொடர்ந்தது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .