2024 ஏப்ரல் 17, புதன்கிழமை

‘பிள்ளையும் இல்லை, தேங்காயும் இல்லை’

சுப்பிரமணியம் பாஸ்கரன்   / 2017 டிசெம்பர் 13 , பி.ப. 02:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

எனது பிள்ளை தண்ணீர் ஊற்றி வளர்த்த தென்னை மரங்கள் இப்போது காய்க்கின்றன. ஆனால் அதை அனுபவிக்க எனது பிள்ளையும் இல்லை, எங்களது பூர்வீகக் காணிக்குள் சென்று தேங்காய் பிடுங்கவும் முடியாது, பணத்துக்கு தேங்காய் வேண்ட வேண்டிய நிலையில் இருப்பதாக,  முல்லைத்தீவுப் பகுதியில் இடம்பெற்று வரும் இரண்டு தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நவரத்தினம் இந்திராணி தெரிவித்தார்.

முல்லைத்தீவு – கேப்பாப்புலவுப் பகுதியில், தமது பூர்வீக நிலங்களை விடுவிக்கக் கோரி, முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் கவனயீர்ப்புப் போராட்டம், இன்றும் (13) தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டது.

இதேவேளை, காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகள் தொடர்பில் உரிய பதில் கிடைக்கவேண்டும் எனக் கோரி, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் முல்லைத்தீவு மாவட்டச்செயலகம் முன்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் கவனயீர்ப்புப் போராட்டம், இன்றும் (13) தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் இப்போராட்டங்கள் இரண்டிலும் தொடர்ச்சியாக கலந்துகொண்டு வரும் நவரத்தினம் இந்திராணி என்ற தாய், இன்று (13) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே, இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

“எல்லோரும் வருகின்றார்கள், பதிவுகளை எடுக்கின்றார்கள், ஆனால், எந்த முடிவும் இல்லை. பிள்ளைக்காக நட்டஈடு தருவதாகச் சொல்லுகின்றார்கள். ஆனால் நட்டஈடு பெறுவதாக இருந்தால் நான் அதை ஆரம்பித்திலேயே பெற்றிருப்பேன். பிள்ளை உயிருடன் எங்கோ இருக்கின்றது என்ற நம்பிக்கையில் தான் நான் இன்றும் இருக்கின்றேன்” என்றார்.

“எங்களது காணியின் இரண்டு ஏக்கரில்  எனது பிள்ளை தண்ணீர் ஊற்றி வளர்த்த தென்னை மரங்கள் இப்போது நன்றாகக் காய்க்கின்றது. அதன் பலாபலன்களை படையினரே அனுபவிக்கின்றனர். எனது பிள்ளையின் உழைப்பால் உருவான இந்தத் தென்னைகளிலிருந்து ஒரு தேங்காய் ஏனும் எடுக்கவில்லை. பிள்ளையும் இப்போது என்னிடம் இல்லை” எனவும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .