2024 மார்ச் 28, வியாழக்கிழமை

புதைகுழியை பாராது திரும்பிச் சென்ற டி கிறிப்

Editorial   / 2017 ஒக்டோபர் 14 , பி.ப. 12:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் மாந்தை மனித புதைகுழி காணப்பட்ட இடத்துக்கு இன்று (14)  காலைச் சென்ற  ஐக்கிய நாடுகளின் இடைக்கால நீதி தொடர்பான விசேட பிரதிநிதி பப்லோ டி கிறிப் மற்றும் குழுவினர், அப்பகுதிக்கு செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களை கண்ட நிலையில், மாந்தை மனித புதை குழியை பார்வையிடாது மன்னாருக்கு திரும்பியுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,

மன்னாருக்கு இன்று (14) விஜயம் மேற்கொண்ட ஐக்கிய நாடுகளின் இடைக்கால நீதி தொடர்பான விசேட பிரதிநிதி பப்லோ டி கிறிப் மற்றும் குழுவினர் மன்னார் மாவட்டத்தின் பல்வேறு இடங்களுக்கும் சென்று நிலைமைகளை ஆராய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.

இந்த நிலையில், குறித்த குழுவினர் இன்று காலை 8.45 மணியளவில் மன்னார் திருக்கேதீஸ்வரம் மாந்தை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதை குழி உள்ள இடத்தை பார்வையிட வருகை தந்தனர். இதன்போது, அப்பகுதியில் செய்தி சேகரிப்பதற்காக மன்னார் மாவட்ட ஊடகவியலாளர்கள் சென்றிருந்தனர்.

மனித புதைகுழி காணப்பட்ட இடத்துக்குச் சென்ற ஐக்கிய நாடுகளின் இடைக்கால நீதி தொடர்பான விசேட பிரதிநிதி பப்லோ டி கிறிப் மற்றும் குழுவினர் குறித்த பகுதிக்குச் சென்று சிறிது நேரம் காத்து நின்றதோடு, ஊடகவியலாளர்கள் அப்பகுதியில் செய்தி சேகரிக்க காத்திருந்த நிலையில், மனித புதைகுழியை பார்வையிடாது மன்னாரிற்கு திரும்பிச் சென்றனர்.

பின்னர் மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியில் உள்ள மன்னார் பிரஜைகள் குழுவில் பல்வேறு தரப்பினருடனும் அவசர சந்திப்புக்களை மேற்கொண்டனர். எனினும் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. 

ஐக்கிய நாடுகளின் இடைக்கால நீதி தொடர்பான விசேட பிரதிநிதி பப்லோ டி கிறிப் மற்றும் குழுவினர் என்ன நோக்கத்துக்காக மன்னாருக்கு வருகை தந்தனர் என்பதனை அறிந்துகொள்ள முடியவில்லை.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X