2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பூங்காக் காணியின் சர்ச்சை தொடர்பில் கருத்துகள் பெறல்

Editorial   / 2019 மார்ச் 20 , பி.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் நகர சபை கடற்கரை பூங்காக் காணி தொடர்பான பிணக்கு ஏற்பட்டுள்ள நிலையில், மேற்படி காணிப் பிணக்கு தொடர்பாக பொதுமக்கள், பொதுச்சங்கங்களின் வேண்டுகோளுக்கமைவாக, கலந்துரையாடல் மன்னார் நகர சபையின் ஏற்பாட்டில் இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடலில் சபை உறுப்பினர்கள், பொது அமைப்புகள், சங்கங்கள், புத்திஜீவிகள் கலந்துகொண்டு தங்களது கருத்துகளையும், ஆதங்கத்தையும் தெரிவித்திருந்தனர்.

குறித்த கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட விடயங்கள் அறிக்கையாக தயாரிக்கப்பட்ட நிலையில், மன்னார் நகர சபை தவிசாளர் எஸ்.ஞானப்பிரகாசம் அன்டனி டேவிட்சனினால் இன்று (20) உரிய திணைக்களங்களுக்கும் அரசியல் பிரதி நிதிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“மேற்படி காணியானது, நகரசபையை அண்டிய பகுதியாக காணப்படுவதுடன், பரம்பரை பரம்பரையாக மன்னார் பட்டின மீனவர்கள், பொது மக்கள் ஆகியோரினால் பயன்படுத்தப்பட்டு வந்த பிரதேசம் இதனை பிறிதொருவருக்கு விட்டுகொடுக்க முடியாது.

“குறித்த காணியானது நகரசபையால் பல வருடங்களாக பராமரிக்கப்பட்டு வருகின்றது. அதாவது, நகர சபை உருவாகிய காலந் தொட்டு நகரசபையே அதன் சகல உரிமைத்துவங்களையும் கொண்டு வருவதுடன், ஆட்சியதிகாரத்தையும் அபிவிருத்தி வேலைகளையும் மேற்கொண்டும் வருகின்றது.

“குறித்த பகுதி நகரசபை பிரதேச சபையாக பிரிக்கப்படும் போது நிலப்பரப்பல்லாது கடற்பரப்பாக காணப்பட்ட பிரதேசம். இக்கடல் பிரதேசம் மன்னார் நகரசபை பிரதேசத்தைச் சேர்ந்த பெரிய கடை, பனங்கட்டு கொட்டு மக்களின் பூர்வீக மீன்படி பிரதேசமும், வள்ளம் கட்டும் இடமுமாகும். இதனை எக்காரணம் கொண்டும் பிரதேசசபைக்கு விடுவிக்க முடியாது. 

அத்துடன், எல்லை பிரதேசங்களாக எல்லையிடப்பட்ட போதும் மன்னார் நகரசபை எல்லைப்பிரதேசமாக ஏ-14 பாதையில் வந்து ஏறுகின்றது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

பாலம் தொடர்பாக குறிப்பிடப்படவில்லை. மன்னார் பிரதேச சபையின் எல்லைப்பிரதேசம் பாலம் என்று குறிப்பிடப்பட்டுள்ள போதும் பிரதான பாலம் என்று குறிப்பிடப்படவில்லை.

இங்கு இரண்டு பாலங்கள் உள்ளது. இதில் எந்த பாலம் என வினா தொடுக்கப்பட்டது.

கரையோரமாக வருகிறது என குறிப்பிடப்பட்டாலும், பள்ளிமுனையில் இருந்து கோந்தப்பிட்டி, கோட்டை கரையோரம் எனக் குறிப்பிடப்படாது பள்ளிமுனை கரையோரமாக வநது ஏ-14 பாதையை ஊடறுக்கின்றது என்றால் பள்ளிமுனை கரையோராமாக வரும் நீர்க்கால்வாய்,கரிச்சட்டிப்பாலத்தை தொடுகின்றது. ஏன் அந்த கரையோரமாக எம்மால் கருத முடியாது என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

மற்றும் நகரசபை, பிரதேசசபை எல்லையாக வர்த்தமானியில் அறிவிக்கப்பட்ட இல-1423/2 ல் காட்டப்பட்டுள்ள இடப்பரப்பு பிரதேசம் நிர்வாக எல்லையாக கருதப்படுகின்றது. இந்நிர்வாக எல்லையில் எமது கிராம சேவை பிரிவுகளே குறித்த பிரதேசத்தை உள் வாங்குகிறதே தவிர மன்னார் பிரதேச சபையின் எந்த கிராமசேவகர் பிரிவுகளும் குறித்த பாலத்தை அண்டிய பகுதியில் அல்லாது 4ஆம் அதற்கு அப்பாலே அதன் எல்லை ஆரம்பிப்பதுடன் வட்டார ரீதியாகவும் எந்த ஒரு வட்டாரமும் குறித்த பகுதியில் இல்லை. ஆனால் மன்னார் பெற்றா வட்டாரத்துக்குள்ளும் சவுத்பார் வட்டாரத்துக்குள்ளும் குறித்த பகுதி அடங்குகின்றது.

எனவே நிர்வாக எல்லையாக கருதப்படாத பகுதியை எவ்வாறு மன்னார் பிரதேசசபை எல்லையாக கருத முடியும் என வினவப்பட்டது.

மன்னார் பிரதேச சபை நகரசபை எல்லைகள், பட்டித் தோட்ட பிரதேசத்தின் ஒரு பகுதியாக ஊடறுத்துச் சென்ற போதும் நிர்வாக ரீதியாக கீரி கிராமம் முழுவதும் நகரசபை பிரதேசமாக உள்ளடக்கப்பட்டு தற்போது நிர்வகிக்கப்பட்டு வருவதை ஏன் இவ் எல்லைப் பிரதேசத்துக்கும் எடுகோளாக கருத முடியாது என வினவப்பட்டது.

குறித்த பிரதேசத்தில் அண்டிவாழும் மக்கள் அனைவரும் நகரசபை பிரதேசத்தைச் சார்ந்த மக்களாகக் காணப்படுவதால் அவர்களே அதன் பயனை அடைய வேண்டும் என்பதுடன், திருக்கேதீஸ்வர மக்களோ தாராபுர மக்களோ இப்பிரதேசத்திற்கு வரப்போவதில்லை. எனவே இப்பிரதேசம் எமது மக்களுக்குரியதாகும் என கருத்துத் தெரிவிக்கப்பட்டது.

மேலும் பல முயற்சிகளின் மூலம் குறித்த செயற்றிட்டம் நகர அபிவிருத்தி அதிகார சபை மூலமாக அபிவிருத்தி செய்ய இருக்கும் இவ்வேளையில் குறித்த அபிவிருத்தியை இல்லாமல் செய்யும் நிலையை ஏற்படுத்தியிருக்கும் மன்னார் பிரதேசசபையை வன்மையாக கண்டிப்பதுடன், இதற்கு துணைபோகும் அனைத்து அரசியலுக்கும் எதிராக மக்கள் எழுச்சிபெற வேண்டும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டது.

அத்துடன் இந் நிதி திரும்பிசெல்லுமாக இருந்தால் இதற்கான முழுப்பொறுப்பும் மன்னார் பிரதேசசபைக்கே சாரும் எனவும் கருத்துத் தெரிவிக்கப்பட்டது.

மேலும் குறித்த காணி தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி அவர்களால் மன்னார் நகரசபைக்குப் பாரப்படுத்தும் படி கூறப்பட்டுள்ளது. இதனை கருத்தில் எடுக்கும் படியும் தெரிவிக்கப்பட்டது.

இறுதியாக நாளை மறுதினம் (22) நடைபெறும் நீதிமன்ற வழக்கிற்கு பிற்பாடு எமக்கு சாதகமான முடிவு கிடைக்காத பட்சத்தில் பொது அமைப்புகள், பொதுமக்கள், சங்கங்கள் ஒன்றிணைத்து எமது நில மீட்புக்காக சார்த்வீக ரீதியில் போராட்டங்களை மேற்கொள்வதென தீர்மானிக்கப்பட்டு கலந்துரையாடல் நிறைவடைந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .