2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

‘பெண்கள் அரசியலுக்கு வருவதன் மூலமே முன்னேற்றத்தை உறுதிப்படுத்தலாம்’

Editorial   / 2017 டிசெம்பர் 03 , பி.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன் 

“கொள்கை அடிப்படையில் பெண்கள் அரசியலுக்கு வருவதன் மூலமே, பெண் சமூகத்தின் முன்னேற்றத்தை உறுதிப்படுத்த முடியும்” என, வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்தார். 

யாழ்ப்பாணம், மூளாய் சைவப்பிரகாச வித்தியாலயத்தில், நேற்று (02) நடைபெற்ற பெற்றோர் தின விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில் கூறியதாவது,  

“பாடசாலை ஆசிரியர்களும் மாணவர்களும், அரசியல் சார்பற்று நடுநிலையா சமூகக் கட்டமைப்பை உருவாக்குவதற்குப் பாடுபட வேண்டும். அரசியல்வாதியாக இருக்கும் நான், இன்று இந்தப் பதவியில் இருக்கலாம், நாளை இன்னொரு கொள்கையைப் பின்பற்றும் கட்சியைச் சேர்ந்தவராக இருக்கலாம். ஆனால், ஆசிரியர்களோ மாணவர்களோ பிழையாக வழி நடத்தப்படக்கூடாது. ஏனெனில், அவர்கள் தமது சமூகம் சார்ந்த கட்டமைப்பில், ஒழுக்கமான நல்லதொரு சமூகத்தை தோற்றுவிக்க வேண்டியவர்களாக இருக்கின்றார்கள்.

“இந்த நாட்டில், 52 சதவீதமளவில் பெண்கள் இருக்கின்றபோதிலும், அவர்களின் அரசியல் பற்கேற்பென்பது, சொற்ப அளவாகவே காணப்படுகின்றது. உள்ளூராட்சிமன்றத் தேர்தல் களத்தைப் பார்த்தோமானால், வெறும் 1.8 சதவிகிதமே பெண்கள் இருக்கிறார்கள். நாடாளுமன்றத்தில் 2.8 சதவிகிதமான பெண்களே இருக்கின்றார்கள். வடமாகாணத்தைப் பொறுத்த வரையில், 38 உறுப்பினர்களில் ஒரே ஒரு பெண் பிரதிநிதியாக நான் மட்டுமே இருக்கிறேன். இதனால், ஆணாதிக்கச் சிந்தனை கொண்ட இந்த சமூகத்தில், அரசியலிலும் சரி நிர்வாகத்திலும் சரி, பெண்கள் தமது கொள்கைகளையும் செயற்பாடுகளையும் மிகவும் போராட்டத்துக்கு மத்தியிலேயே முன்னெடுத்துச் செல்ல வேண்டியுள்ளது. 

“ஆண்களுக்கு நிகரான திறமைகளுடனும் மேம்பட்ட திறமைகளுடனும் பல பெண்கள் இருக்கின்றார்கள். சிலருக்கு அவர்களது திறமைகளை வெளிப்படுத்துவதற்கு சந்தர்ப்பங்கள் கிடைக்கின்றன. பலருக்கு அவ்வாறான சந்தரப்பங்கள் கிடைப்பதில்லை. எல்லாவற்றுக்கும் ஆண்களைச் சார்ந்திருப்பதே இதற்குக் காரணமாகும். 

“கொள்கை அடிப்படையில் பெண்கள் அரசியலுக்கு வருவதன் மூலமே, இந்த நிலைமைய  மாற்ற முடியும். நல்ல கல்வியறிவுடைய மற்றும் சமுதாயச் சிந்தனையுடைய பெண்கள் அரசியலுக்கு வருவதன் மூலமே, பெண் சமூகத்தின் முன்னேற்றத்தை உறுதிப்படுத்த முடியும்” என, அவர் மேலும் தெரிவித்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X