2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

போலி வைத்தியர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும்

Editorial   / 2018 மார்ச் 01 , பி.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

- க.அகரன்

போலி வைத்தியர்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வவுனியா கிளை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அரச மருத்துவர் சங்கத்தின் வவுனியா கிளை விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“சிறிது காலத்துக்கு முன்னர் மத்திய சுகாதார அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் இலங்கையில் 30 ஆயிரம் போலி வைத்தியர்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வவுனியா கிளை ஏற்றுக்கொண்டு வவுனியா மாவட்டத்தில் சட்ட விரோதமாக வைத்திய நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்களின் விபரங்களைத் திரட்டி உரிய அதிகாரிகளிடம் அனுப்பி வைத்துள்ளது. அத்துடன் இவர்களது வைத்திய சிகிச்சை நடவடிக்கைகளால் மக்கள் பாதிக்கப்படுவதனைத் தடுக்க இது தொடர்பான தெளிவுபடுத்தலை மேற்கொள்கிறது.

எந்தவிதமான தகுதியும் மருத்துவ சபையின் பதிவும் இன்றி வைத்தியம் பார்ப்பவர்கள், வெளிநாட்டில் மருத்துவம் கற்ற பின்னர் இலங்கையில் பரீட்சைக்குத் தோற்றி இலங்கை மருத்துவ சபையின் பதிவினைப் பெற்றுக்கொள்ளாது வைத்தியம் பார்ப்பவர்கள், சித்த ஆயுர்வேத பாரம்பரிய மருத்துவச் சிகிச்சைகளை மேற்கொள்வதற்கு அங்கீகாரம் பெற்ற மருத்துவர்கள் மேலைத்தேய (அலோபதி) மருத்துவத்துக்குரிய மருந்துகளைக் கொண்டு வைத்தியம் பார்த்தல், மேலைத்தேய மருத்துவ முறைக்குப் பட்டம் பெற்றவர்கள் சித்த ஆயுர்வேத பாரம்பரிய மருந்துகளைக் கொண்டு வைத்தியம் பார்த்தல் என்பன சட்ட விரோதமான வைத்திய நடவடிக்கைகளில் உள்ளடங்கும்.

குறிப்பாக வவுனியா நகரப்பகுதி குடியிருப்பு, இரண்டாம் குறுக்குத்தெரு, கோவில்குளம், சிதம்பரபுரம், தோணிக்கல், பூந்தோட்டம், குருமன்காடு, பட்டைகாடு, நெளுக்குளம் போன்ற பகுதிகளில் சட்டவிரோத மருத்துவ நடவடிக்கைகள் அதிக அளவில் இடம்பெறுவதாக ஆதாரங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.

தனியார் வைத்திய நிலையமொன்றின் மூலம் சிகிச்சை அளிக்கும் ஒவ்வொரு வைத்தியரும் தங்களது தகைமை மற்றும் பதிவுச் சான்றிதழை பொதுமக்களுக்கு காட்சிப்படுத்துவது கட்டாயமாகும்.

இப்படியான சட்டவிரோத சிகிச்சை முறைகள் மூலம் ஏற்கனவே அதிகரித்த நிலையில் உள்ள சிறுநீரக நோய்கள் மேலும் தீவிரமடைவதுடன் கிருமிகொல்லி மருந்துகள் செயற்படாமல் போகும் தன்மை என்பன ஏற்படும். அத்துடன் சட்டவிரோத கருக்கலைப்பு முறையற்ற சிகிச்சைகளால் உயிரிழப்பு என்பனவும் ஏற்பட்டு இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனவே பொதுமக்கள் தாங்கள் சிகிச்சை பெறச்செல்லும் வைத்தியரின் தகைமை பற்றியும் அவர் வழங்கும் மருந்துகள் பற்றியும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

முறையற்ற சிகிச்சை நடவடிக்கைகளை இனங்கண்டால் உரிய அதிகாரிகளிடம் முறையிடுவது உடனடி நடவடிக்கைளை மேற்கொள்ள உதவியாக இருக்கும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .