2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

முல்லைத்தீவு மாவட்டத்தில் 15,682 புதிய வீடுகள் தேவை

Editorial   / 2017 ஜூன் 27 , பி.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு மாவட்டத்துக்குட்பட்ட மக்களுக்கு வழங்குவதற்கு  இன்னமும் 15,682 புதிய வீடுகள் தேவையென மாவட்டச் செயலக தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள 136 கிராம அலுவலர் பிரிவுகளிலும்  41,367 குடும்பங்கள் மீள்குடியேறியுள்ள நிலையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் இதுவரைக்கும் 19,565 வீடுகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், பகுதியளவில் பாதிக்கப்பட்ட 3,418 வீடுகள் புனரமைக்கப்பட்டுள்ளன.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களில் பலர், குடும்ப உறுப்பினர்களை இழந்த நிலையில்,  ஒன்று மற்றும் இரண்டு அங்கத்தவரை கொண்ட குடும்பங்களாக மாறியவர்களுக்கு இதுவரை வீட்டுத் திட்டங்களில் வீடுகள் வழங்கப்படவில்லை.

இவர்களுடன், புள்ளித் திட்டங்கள் காரணமாக உள்வாங்கப்படுவதில் அதிகமான குடும்பங்கள் தகுதி பெறத் தவறியுள்ளமையால், பல குடும்பங்களுக்கு இது வரை வீட்டுத்திட்டம் கிடைக்காத நிலை காணப்படுகின்றது.

அத்துடன்,  மீள்குடியேற்றத்தின் பின்னர் திருமணம் செய்து கொண்ட பல குடும்பங்களுக்கும் வீடுகள் வழங்கப்பட வேண்டியுள்ளது. ஒட்டு மொத்தமாக இன்னமும் 15, 682 குடும்பங்களுக்கு புதிய வீடுகள் வழங்கப்பட வேண்டியுள்ளது.

2,657 குடும்பங்களின்  பகுதியளவில் சேதமற்ற வீடுகளும் திருத்தப்பட வேண்டியுள்ளது என புள்ளிவிவரத் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.                                   

இதற்கமைய, மாந்தை கிழக்கு பிரதேச செயலகப் பிரிவில் 990 வீடுகளும், துணுக்காய் பிரதேச செயலகப் பிரிவில் 1,175 வீடுகளும், ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவில் 2,136 வீடுகளும், கரைதுரைப்பற்று பிரதேச செயலக பிரிவில் 5,168 வீடுகளும், புதுகுடியிருப்பு பிரதேச செயலகப் பிரிவில் 4,616 வீடுகளும், வெலிஓயா பிரதேச செயலகப் பிரிவில் 1,597 வீடுகளும் அமைத்துக் கொடுக்க வேண்டியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மாந்தை கிழக்கு பிரதேச செயலகப் பிரிவில் 1,489 வீடுகளும், துணுக்காய் பிரதேச செயலகப் பிரிவில் 2,025 வீடுகளும், ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவில் 3,180 வீடுகளும், கரைதுரைப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் 4,929 வீடுகளும், புதுகுடியிருப்பு பிரதேச செயலக பிரிவில் 6,870 வீடுகளும், வெலிஓயா பிரதேச செயலக பிரிவில் 1,072 வீடுகளும் பல்வேறு திட்டங்களுக்கு ஊடாக அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளதாக  அத்தகவலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .