2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

முல்லையில் கடற்தொழிலாளர்களுக்கு தொழில் செய்ய முடியாத நிலை

சுப்பிரமணியம் பாஸ்கரன்   / 2017 செப்டெம்பர் 27 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு மாவட்டத்தின் முகத்துவாரம் தொடக்கம் பேப்பாறைப்பிட்டி வரைக்குமான சுமார் 73 கிலோமீற்றர் நீளமான கரையோரப்பகுதிகளில், சுதந்திரமாக தொழில்களை மேற்கொள்ள முடியவில்லை என பாதிக்கப்பட்ட கடற்தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பாக பல்வேறு தரப்பினரிடமும் கோரிக்கைகளை முன்வைத்தபோதும் நடவடிக்கைகள் எவையும் எடுக்கப்படவில்லை என கடற்தொழிலாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் வாழ்ந்து வரும் சுமார் 4,600க்கும் மேற்பட்ட கடற்தொழிலாளர் குடும்பங்களின் தொழில் நடவடிக்கைகள் பாதிக்கப்படும் வகையில், தடைசெய்யப்பட்ட தொழில் நடவடிக்கைகள் மற்றும் வெளிமாவட்ட மீனவர்களின் அத்துமீறிய தொழில்கள் என்பவற்றால் கடற்றொழிலாளர்களின் தொழில்சார் நடவடிக்கைள் பாதிக்கப்பட்டுள்ளன.

அதாவது, சுருக்கு வலை பயன்படுத்துதல், நிபந்தனைகளை மீறிய அட்டைத்தொழில், உழவு இயந்திரங்கள் மூலம் கரைவலைகளை இழுத்தல் உள்ளிட்ட தொழில்கள் மேற்கொள்ளப்படுவதால், பாரம்பரியமாக தொழில் செய்யமுடியாத நிலையில், குறித்த தொழிலாளர்கள், தமது தொழில்களை விடுத்து வேறு தொழில்களுக்குச் செல்லும் நிலை காணப்படுகின்றது.

அத்துடன் வட்டுவாகல் ஆற்றில், 100-க்கும் மேற்பட்ட கடற்தொழிலாளர்கள் இறால் பிடித்தல், வீச்சு வலைகள் மூலம் தொழில் செய்து வருகின்ற நிலையில், முகத்துவாரத்துக்குச் செல்லும் வீதியை உள்ளடக்கிய வகையில் வட்டுவாகல் ஆற்றின் இரு புறமும் கடற்படையினரின் பயன்பாட்டில் இருப்பதாலும் தொழில் செய்யமுடியாத நிலை காணப்படுகின்றது.

அத்துடன் முல்லைத்தீவு மாவட்டத்தின் அதிக கடல்வளத்தை கொண்ட கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி, நாயாறு, சாலை ஆகிய பகுதிகளில் வெளிமாவட்ட மீனவர்களின் தொழில்களால் தமது தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் நல்லாட்சி அரசாங்கம் தமக்கான வழிவகைகளை ஏற்படுத்தித் தரவேண்டும் என இப்பகுதி கடற்தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .