2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

‘முள்ளிவாய்க்கால் நினைவை ஒற்றுமையாக நினைவு கூரவேண்டும்’

சண்முகம் தவசீலன்   / 2018 ஏப்ரல் 19 , மு.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் மே 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் மனித பேரவலத்தினை தாயகம் எங்கும் ஒற்றுமையாக நினைவு கூரவேண்டும் என்று யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது.

இந்தவிடயம் தொடர்பில் முள்ளிவாய்க்காலில் நேற்று (18) மாலை பல்கலைக்கழக மாணவர்கள் ஊடக சந்திப்பு ஒன்றை நிகழ்த்தினர் அத்தோடு குறித்த நினைவேந்தல் நிகழ்வு தொடர்பில் ஊடக அறிக்கை ஒன்றையும் வெளியிட்டனர் அந்த அறிக்கையில்

“மானுடத்தின் மதிப்பினைப் பேணிக்காப்பதில் அக்கறை கொண்டவர்களாக நாகரீமாகத் தம்மை அடையாளப்படுத்திக்கொள்ளும் உலக சமூகங்களின் மனச்சாட்சிக் கதவுகளை இறுக்கி மூடி வைத்தபடி, அவசர அவசரமாக இருபத்தோராம் நூற்றாண்டில் எல்லோர் முன்னிலையிலும் நடந்தேறிய, மறைக்கவும், மறக்கவும் முடியாத, மிகவும் கோரமாக நடாத்தி முடிக்கப்பட்ட தமிழர்களுக்கெதிரான மாபெரும் மனிதப்பேரவலம்தான்  மே18 முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை!

இப்பேரவலத்தை நாம் எல்லோரும் தமிழர்களாக, வரலாற்று வழித்தடத்தில் சுமந்துவந்த அத்தனை அறவழி முறைகளிலுருந்தும் வழித்தடம் மாறாமல், உலகின் முன்னால் நிமிர்ந்து நின்று நீதி கேட்கும் அத்தனை உரிமைகளும் தமிழர்களாகிய எமக்குண்டு.

நாங்கள் நாங்களாக, தமிழர்களாக இருக்கும்வரையில்தான் எமது இனவிடுதலையின் பயணம் வீறுகொண்டெழும், வியாபகம் பெறும். இல்லையேல் கால ஓட்டத்தில் வழித்தடம் மாறி, யார் யாரெல்லாம் எம்மை அழிக்க நினைத்தார்களோ அவர்களின் பாதையில் பங்காளிகளாகவும் கூட மாறநேரிடும்.

மே 18 முள்ளிவாய்க்கால் நினைவுதினமென்பது தமிழர்களின் ஒட்டுமொத்த துயரங்களாலும், தோல்விகளாலும் துவண்டுபோகும் நிகழ்வல்ல..! மாறாக தமிழர்களின் மீளெழுச்சியைக் கட்டியங்கூறி நிற்கும் தார்மீக வடிவமாக, காலம்காலமாய்த் தொடர்ந்து வரும் அத்தனை வரலாற்றின் அடையாளங்களோடும் தமிழ்த்தேசியம் புத்துயிர்பெறுகின்ற பேரெழுச்சி நிகழ்வாக அமையவேண்டும்!

எம் தாய் நிலத்திலாயினும், புலம்பெயர்ந்த தேசங்களலாயினும் , தமிழ்த்தேசியம் நோக்கிய வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் தமிழர் அமைப்புக்கள் தங்களது செயற்பாடுகளுக்கேற்ப முள்ளிவாய்க்கால் நினைவுதினம் போன்ற தமிழ்த்தேசிய நினைவெழுச்சி நிகழ்வினை அதன் அடையாளங்களிலிருந்தும் வேறுபடுத்துகின்ற பிரத்தியேக நிகழ்வாக ஒருபோதும் கடைப்பிடிக்க முடியாது எனவும், ஒன்றாக ஓரிடத்தில் அந்தந்த நாடுகள் தழுவி தமிழர்களின் ஒட்டுமொத்த  தமிழ்த்தேசிய மக்கள் பேரெழுச்சியாக எழுச்சிகொள்ள வேண்டும் எனும் தமிழ்மக்களின் பார்வையும், அவர்களது அபிலாசையும் புறக்கணிக்கமுடியாத சூழமைவாக மிகவும் வலுப்பெற்றுள்ளது.

இவ் விடயத்தினைப் பெரிதும் கருத்திற்கொண்டு இதுபற்றிய நேரடியான, நேர்மையான , ஆக்கபூர்வமான கலந்தாலோசனைகளோடு, இதனைச் செயற்படுத்த முனையுமாறு தமிழர்களின் விடுதலை நோக்கிய பயணத்தில் தம்மை ஈடுபடுத்தியிருக்கும் அனைத்து அரசியல் மற்றும் பொது அமைப்புக்களிடமும், எம்மினத்தின் எதிர்காலத் தூண்களான இளைய மாணவ சமுதாயம் அன்புரிமையுடன் வேண்டி நிற்கின்றது.

இதில் அனைத்துத் தமிழ்மக்களினதும், தமிழர்களைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற தமிழர் அமைப்புக்களினதும் பூரண ஒத்துழைப்பினை தமிழ்மாணவர்களான நாம் எதிர்பார்த்து நிற்கின்றோம். தமிழ்த்தேசியத்தின் எதிர்காலத்தை இன்றைய இருள்சூழ்ந்த நிலையிலிருந்து விடிவை நோக்கி மாற்றியமைக்கும் தொடக்கப்புள்ளியாக முள்ளிவாய்க்கால் மண்மீது உறுதியெடுப்போம்.” என குறிப்பிடப்பட்டுள்ளது


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .