2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மூனாமடுவில் காணியை கோரி கடிதம் அனுப்பிய பிக்கு

Editorial   / 2019 மார்ச் 20 , பி.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியா, மூனாமடுவில் இராணுவத்தால் வழிபட்டு வந்த புத்தர் சிலை உள்ள காணியை, தனக்கு வழங்குமாறு கொரி, வவுனியா மாவட்ட செயலாளருக்கு பிக்கு ஒருவர் கடிதம் அனுப்பியுள்ளார்.

மூனாமடுவில் பகுதியில் உள்ள நாகபூஷணி அம்மன் கோவில் நீண்டகாலமாக அப்பகுதி மக்களால் வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், 1995ஆம் ஆண்டு, அப்பகுதி இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டது.

அதன் பின்னர், அப்பகுதியில் இராணுவ முகாமை அமைத்த இராணுவத்தினர், தமது வழிப்பாட்டுக்காக புத்தர் சிலையொன்றையும் நிறுவி வழிபட்டு வந்தனர்.

தற்போது அந்தப் பகுதிகள் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட போதும், அப்பகுதியில் இருந்து புத்தர் சிலை அகற்றப்படவில்லை. இந்நிலையில், வவுனியாவில் உள்ள பிக்கு ஒருவர், குறித்த புத்தர் சிலை அமைந்துள்ள காணியை தன்னிடம் ஒப்படைக்குமாறு மாவட்டச் செயலகத்திடம் கோரியுள்ளார்.

இதேவேளை, மூனாமடு நாகபூஷணி அம்மன் கோவில் காணியை, கோவில் நிர்வாகத்திடமே ஒப்படைக்க வேண்டுமென, வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியத்தின் செயலாளர் ஜெ.மயூரக்குருக்கள் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, அவர் இன்று (20) ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலேயே, மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், இந்தக் காணி, இந்து கோவில் அமைந்துள்ள பகுதி என்பதால், நாகபூஷணி அம்மன் கோவிலுக்கே, இந்தக் காணிச் சொந்தமானதென, பிரதேச செயலகம் கூறியுள்ளதாகவும் எனவே இந்தக் காணியை வேறு எவரும் உரிமைக் கோரவோ, கையகப்படுத்தவோ முடியாதெனவும், அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வடக்கில், புத்தர் சிலை வைத்த இடங்களையெல்லாம் சொந்தம் கொண்டாட நினைப்பதும் தமிழர்களின் பாரம்பரிய இடங்களை கையகப்படுத்த நினைப்பதும், தவறானப் பார்வைகளைக் கொண்டுவருமெனவும், அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், மூனாமடு நாகபூஷணி அம்மன் கோவில் காணி தொடர்பில், ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடியப் பின்னரே, தீர்மானம் எடுக்கப்படுமென, வவுனியா மாவட்டச் செயலாளர். தி.திரேஸ்குமாரி தெரிவித்தார்.

இது ​தொடர்பில், தொடர்ந்துக் கருத்துரைத்த அவர், இந்தக் ​காணியைக் கோரி, பிக்கு ஒருவர் கடிதமொன்றை அனுப்பியுள்ளதாகவும், நாளை (21) மாவட்டச் செயலகத்தில் நடைபெறவுள்ள மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டு தீர்க்கமான முடிவொன்று எடுக்கப்படுமெனவும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .