2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

’வட மாகாண தொண்டர் ஆசிரியர் நியமனத்தில் முறைகேடுகள்’

க. அகரன்   / 2017 ஒக்டோபர் 05 , மு.ப. 08:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வட மாகாண தொண்டர் ஆசிரியருக்கான நிரந்தர நியமனம் வழங்கும் நேர்முகத் தேர்வில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக, வவுனியா மாவட்ட தொண்டர் ஆசிரியர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக, பாதிக்கப்பட்ட தொண்டர் ஆசிரியர்கள் கருத்து தெரிவிக்கையில்,

“கடந்த பல ஆண்டுகளாக, பல்வேறு நெருக்குவாரங்களுக்கு மத்தியிலும் யுத்த சூழலுக்கு மத்தியிலும் தொண்டர் ஆசிரியர்களாக பணியாற்றிய பலருக்கு உரிய ஆவணங்கள் இருந்தும் அவர்கள் தெரிவு செய்யப்படாது புறக்கணிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களிடம் உரிய ஆவணங்கள் இல்லை என்கின்ற பொய்யான குற்றச்சாட்டொன்றை வட மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன், நேர்முகத் தேர்வில் 1,046 பேர் தோற்றியிருந்தனர். இவர்களில் 676 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியபோதும் வெறும் 182 பேரின் பெயர் விபரங்களே தற்போது வெளியாகியுள்ளன. அவர்கள் மட்டுமே நேர்முகத் தேர்வில் கோரப்பட்ட ஆவணங்களை முழுமையாக கொண்டிருந்ததாகவும் ஏனையவர்களிடம் நேர்முகத் தேர்வில் கோரப்பட்ட ஆவணங்கள் முறையாக இல்லை எனவும் வடக்கு கல்வி அமைச்சு தெரிவிக்கிறது. ஆனால் எம்மிடம் முழுமையான ஆவணங்கள் உள்ளன. அவற்றை அவர்கள் சரியாக பரிசீலிக்க தவறியுள்ளதுடன், அவ்வாறு முழுமையான ஆவணங்கள் அற்ற சிலரும் தற்போது தெரிவாகியுள்ளiமை நேர்முகத் தேர்வு குறித்து பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியிருக்கின்றது. 

பாடசாலை சம்பவத் திரட்டு புத்தகத்தில் பெயர் இல்லை எனக் கூறியே பலர் புறக்கணிப்பட்டுள்ளனர். ஆனால் அவ்வாறு சரியான முறையில் பெயர் உள்ள பலரும் தற்போது தெரிவு செய்யப்படவில்லை. சம்பவ திரட்டுப் புத்தகத்தின் உண்மைப் பிரதியை ஆராயாது வெறும் போட்டோ பிரதியொன்றை ஆராய்ந்து அதில் உள்ள உண்மைத் தன்மையை நேர்முகத் தேர்வாளர்கள் எவ்வாறு உறுதிப்படுத்திக் கொண்டார்கள் என்ற கேள்வி எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. அதிபர், வலயக்கல்விப் பணிப்பாளர் உறுதிப்படுத்திய சம்பவ திரட்டுப் பதிவைக் கூட நிராகரித்துள்ள தேர்வாளர்கள், அதன் உண்மைப் பிரதியை பார்த்து பரிசீலிக்காததன் காரணமாகவே பலர் நிராகரிக்கப்பட்டுள்ளனர். 

 

எமது மகாண கல்வி அமைச்சின் நீதி, நியாயமற்ற இந்த நடவடிக்கையை வன்மையாக கண்டிப்பதுடன், மேற்கொண்டு இது தொடர்பான தொடர் நடவடிக்கையை மேற்கொள்வதற்கு, உண்மையாகவே பாதிக்கப்பட்ட வவுனியா மாவட்ட தொண்டர் ஆசிரியர்கள் 0778714114 அல்லது 0776550632 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்” எனக் கூறியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .