2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

வவுனியா பிரதேச செயலக வளாகத்தில் பெரும்பதற்றம்

Editorial   / 2018 ஜூன் 25 , பி.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

 

வவுனியா பிரதேச செயலகத்துக்கு மகஜர் கையளிக்க வந்த மக்களை புகைப்பட்டம் எடுத்த ஒருவரை, பொதுமக்கள் இணைந்துத் தாக்க முற்பட்டதால், வவுனியா பிரதேச செயலக வளாகத்தில், இன்று (25) பதற்றம் நிலவியது.

மலையக வம்சாவளி மக்களை இழிவுபடுத்தும் சக்திகளுக்கு எதிராகவும் காணி உரிமை வழங்கக் கோரியும், வவுனியாவில் நேற்று, கண்டனப் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா, சிந்தாமணி பிள்ளையார் ஆலயம் முன்னால் ஆரம்பமான இந்தப் பேரணி, பசார் வீதி வழியாக, பிரதேச செயலகம் வரை சென்றது.

இதன்போது, கண்டனப் பேரணியில் ஈடுபட்டவர்கள், மாவட்டச் செயலகத்துக்குச் சென்று, உதவி மாவட்டச் செயலாளர் கமலதாசனிடம், மகஜர் ஒன்றைக் கையளித்தனர். அதன்பின்னர், பிரதேச செயலகத்துக்குச் சென்று, பிரதேச செயலாளர் கா.உதயராஜாவிடமும் மகஜர் ஒன்றைக் கையளித்தனர்.

இதன்போது, மலையக மக்களை இழிவுபடுத்தி, அரச அலுவலகங்களுக்கு கடிதங்களை அனுப்பினாரென்றுக் கூறப்படும் பார்த்தீபன் என்பவர், அவ்விடத்துக்கு வந்து, கண்டனப் பேரணியில் ஈடுபட்ட மக்களைப் புகைப்படம் எடுத்துள்ளார். இதனை அவதானித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், பார்த்தீபனுடன் முரண்பட்டு, அவரைத் தாக்க முற்பட்டனர்.

இதன்போது கடமையில் இருந்த பொலிஸார், பார்த்தீபனை பிரதேச செயலக அலுவலகத்துக்குள் அழைத்துச்சென்றுப் பாதுகாத்தனர். இருப்பினும் ஆர்ப்பாட்டக்காரர்கள், பிரதேச செயலக அலுவலகத்துக்குள் புகுந்து, பார்த்தீபனைத் தாக்க முற்பட்டனர்.

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு மேலதிக பொலிஸார் பாதுகாப்புக்கு அழைக்கப்பட்டதுடன், பார்த்தீபனை விசாரணைக்காக பொலிஸ் நிலையத்துக்கு பொலிஸ் வாகனத்தில் அழைத்துச்செல்ல முற்பட்டபோது, பொலிஸ் வாகனத்தைச் செல்லவிடாது, மக்கள் குழப்பம் விளைவித்தனர்.

இதனால், பிரதேச செயலகத்தின் பின் வாசல் வழியாக, பார்த்தீபனை பொலிஸார் தமது வாகனத்தில் அழைத்துச் சென்றனர். இந்தக் குழப்ப நிலை காரணமாக, பிரதேச செயலகத்தில் சுமார் ஒரு மணிநேரம் பதற்றநிலை காணப்பட்டது.

இதையடுத்து, பிரதேச செயலக வாயிலை மறித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், மக்கள் தம்மை இழிவுபடுத்திய நபரை பிரதேச செயலகம் பாதுகாப்பதாகக் குற்றஞ்சாட்டி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது, அவ்விடத்துக்கு வந்த பிரதேச செயலாளர், பார்த்தீபன் தமது அலுவலகத்தில் பணிபுரிவதில்லை எனவும் அவரை தாம் பாதுகாக்கவில்லை எனவும் பொலிஸாரே உள்ளே விட்டனர் எனவும் தெரிவித்தார்.

அத்துடன், மக்களது காணிப் பிரச்சனைக்கு விரைவில் உரிய தீர்வு வழங்கப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து, மக்கள் அவ்விடத்தில் இருந்து கலைந்துச் சென்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .