2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

விசேட கலந்துரையாடல்

Editorial   / 2019 மார்ச் 24 , பி.ப. 02:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்ற குழுக்களின் பிரதி அவைத் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தலைமையில், சுகாதார அமைச்சருடன் விசேட சந்திப்பொன்று வெள்ளிக்கிழமை  (22) மாலை சுகாதார அமைச்சின் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன்போது, மன்னார் மாவட்டத்தின் சுகாதார  நிலைமை இலங்கையின் ஏனைய மாவட்டங்களை விட மிகவும் பின்தங்கிய நிலைமையில் இருப்பதனால், மாவட்ட பொது வைத்தியசாலையை அபிவிருத்தி செய்வது மிகவும் அத்தியாவசியமானதென, செல்வம் அடைக்கலநாதனால் சுகாதார அமைச்சரிடம் சுட்டிக்காட்டப்பட்டது.

மேலும் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் போதிய வசதிகள் இன்மையால் மக்கள் வவுனியா, யாழ்ப்பாண வைத்தியசாலைகளை நோக்கி செல்ல வேண்டியிருப்பதால், மன்னார் மாவட்ட மக்கள் பல சிரமங்களை எதிர்நோக்கியுள்ளமை தொடர்பாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.

ஏனைய வைத்தியசாலைகளில் கட்டட, வைத்திய வசதிகள் துரித கதியில் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்ற போதிலும், மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை தொடர்ச்சியாக புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும்  சுட்டிக்காட்டப்பட்டது. 

அத்துடன், மன்னார் வைத்தியசாலையில் வெளி நோயாளர் பிரிவு, சத்திர சிகிச்சைக் கூடம், நிரந்தர நோயாளர் விடுதிகள்,  வைத்தியர்களுக்கான நிரந்தர தங்குமிட வசதிகள் போன்றவற்றை அமைப்பது தொடர்பில் அவற்றுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பில் சுகாதார அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

மேலும் கதிரியக்க இயந்திரங்கள், சத்திர சிகிச்சை கூடத்துக்கான உபகரணங்கள், ஆய்வு கூட உபகரணங்கள், கணினிகள் போன்றவற்றை பெற்றுக்கொள்வது தொடர்பிலும் ஆராயப்பட்டது.

இதையடுத்து, மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பில் திட்ட வரைவு ஒன்று உருவாக்கப்பட்டு, அதற்கு விசேட முக்கியத்துவம் வழங்கி, வைத்தியசாலையை அபிவிருத்தி செய்வதற்கு விரைந்து ஆவனம் செய்வதாக சுகாதார அமைச்சரால் உறுதியளிக்கப்பட்டது.

அத்துடன், உரிய மருத்துவ ஆளணியினரை எதிர்வரும் காலங்களில் நியமிப்பதாக சுகாதார அமைச்சின் அதிகாரிகளால் உறுதியளிக்கப்பட்டது.  

மேலும்,   மன்னார் வைத்தியசாலை தர முயர்த்தப்பட வேண்டும் என்ற   கோரிக்கையும் பநாடாளுமன்ற உறுப்பினரால் முன்வைக்கப்பட்டது. 

இது தொடர்பில் சாதகமாக பரிசீலிப்பதாக, சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .