2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

விபத்தில் சிறுவன் உயிரிழப்பு: பொலிஸ் நிலையம் பொதுமக்களால் முற்றுகை

Yuganthini   / 2017 ஜூன் 22 , பி.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்,  எஸ்.றொசேரியன் லெம்பேட்,  எஸ்.என்.நிபோஜன்

கிளிநொச்சி - கரியாலைநாகபடுவான் அந்தோனியார் தேவாலயத்துக்கு முன்பாக, இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில், முழங்காவில் பொலிஸார் இதுவரை எவ்வித நடவ​டிக்கையையும் எடுக்காததைக் கண்டித்து, 300க்கும்  மேற்பட்ட  கிராம மக்கள், மதத் தலைவர்கள் மற்றும் பொதுஅமைப்புகள் ஒன்றாகச் சேர்ந்து பொலிஸ் நிலையத்தை, இன்று (22)  முற்றுகை இட்டனர். 

இவர்கள், நாச்சிக்குடா  சந்தியில் இருந்து முழங்காவில் பொலிஸ்  நிலையம் வரை பேரணியாகச் சென்று பொலிஸ் நிலையத்தை  முற்றுகை இட்டனர். 

கிளிநொச்சி - கரியாலைநாகபடுவான் அந்தோனியார் தேவாலயத்துக்கு முன்பாக, கடந்த 17ஆம் திகதி இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயங்களுக்குள்ளான சிறுவன், கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், புதன்கிழமை (21) மாலை , சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான்.

முழங்காவில் மகா வித்தியாலயத்தில் தரம் 7இல் கல்வி கற்ற, அ.அபினாஸ் (வயது 12) என்ற சிறுவனே, இவ்வாறு உயிரிழந்துள்ளான்.

அந்தோனியார் தேவாலயத்தின் திருவிழாவில் கலந்துகொள்வதற்காக ஏ-32 வீதியோரத்தில் சென்று கொண்டிருந்த சிறுவனைப் பின்புறமாகச் சென்றுகொண்டிருந்த கார் மோதிவிட்டுத் தப்பிச்சென்றுள்ளது.

குறித்த விபத்துத் தொடர்பில் முழங்காவில் பொலிஸ் நிலையத்தில் குடும்பத்தினரால் முறைப்பாட்டு செய்யப்பட்டிருந்ததுடன் தப்பி ஓடிய காரின் ஓர் இலக்கத்தகடு வீழ்ந்த நிலையில் அதன் இலக்கமும் பொலிஸாருக்கு வழங்கப்பட்டிருந்தது.

இது தொடர்பாக, இதுவரை  தகுந்த நடவடிக்கை எதையும் பொலிஸார் எடுக்காததைக் கண்டிக்கும் முகமாகவே, கிராம மக்களால் இன்று (22) பொலிஸ் நிலையம்  முற்றுகை இடப்பட்டது. 

இதனை அடுத்து, அங்கு வருகைதந்த உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்,  சந்தேகநபரைக் கைதுசெய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் வியாழக்கிழமை (இன்று) சந்தேகநபர் கட்டாயம் கைது செய்யப்படுவார் என்றும்  வௌ்ளிக்கிழமை  எமது பொலிஸ் நிலைய கூட்டினுள் அவரைக் காணமுடியும் எனவும்  வழங்கிய வாக்குறுதிக்கு அமைவாக ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .