2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘வெவ்வேறான அணுகுமுறைகளினூடாகவே தமிழ் - சிங்கள மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும்’

Editorial   / 2019 நவம்பர் 18 , பி.ப. 01:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

 

வெவ்வேறான பார்வைகளினூடாகவும் அணுகுமுறைகளினூடாகவுமே தமிழ் - சிங்கள மக்களின் பிரச்சினைகள் ஆராயப்பட்டு தீர்க்கப்பட வேண்டுமென, தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்ட அறிக்கையிலேயே, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், தமிழ் மக்களில் மிகப் பெரும்பான்மையானவர்களின் உணர்வுகளும் உள்ளக்கிடக்கைகளும் ஒவ்வொரு வாக்குகளினாலும் உலகத்துக்கு உணர்த்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமது மக்களின் நீண்டகால அபிலாஷைகள் தீர்த்துவைக்கப்படாத அன்றாட பிரச்சினைகள், கேள்விகளுக்குள்ளாக்கப்பட்டுள்ள எதிர்கால வாழ்வு என இவையெல்லாம் ஏமாற்றங்களாக தொடர்வதின் நீட்சியே வாக்குகளுடாக பிரதிபலிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பெரும்பான்மை இன மக்களின் நிலைப்பாடானது, தமிழ் மக்களின் நிலைப்பட்டிலிருந்து வேறுபட்டு நிற்கின்றதெனத் தெரிவித்துள்ள அவர், காலம் காலமாக சிங்கள தலைமைகள் தமிழ் மக்களின் உணர்வுகளையும் கோரிக்கைகளையும் ஏமாற்றிக் கொண்டிருப்பதும் உதாசீனப்படுத்துவதும் தெரிந்தும் பெரும்பான்மை இனம் துணை நிற்பது வருத்தமானதே எனவும் கூறியுள்ளார்.

சிங்கள தலைமைகள் சிங்கள பெரும்பான்மை மக்களை தவறாக வழிநடத்திக்கொண்டு அரசியல் நன்மைகளை அனுபவிக்கவே விரும்புகின்றார்களெனச் சாடியுள்ள அவர், ஒன்றுபட்ட இலங்கைக்குள் சிங்கள தேசம் அனுபவிக்கின்ற அனைத்து உரிமைகளையும் தமிழ் மக்களும் அனுபவிக்கவேண்டுமெனக் கோருவதில் தவறொன்றும் காணமுடியாதெனவும் தெரிவித்துள்ளார்.

புதிய ஜனாதிபதி, தனது 5 வருட பதவிக் காலத்தில், இயலுமான வரை கடந்த அரசாங்கங்கள் விட்ட தவறுகளைப் பாடமாக்கிக் கொண்டு, திருத்தங்களுடன் பயணித்தால், நாட்டின் ஒவ்வொரு பிரஜைக்கும் வாழ்வுண்டெனத் தெரிவித்துள்ள அவர்,  தமிழ் மக்களால் கோட்டாபய ராஜபக்‌ஷ நிராகரிக்கப்பட்டாலும், இன்னுமொரு பெரும்பான்மை இனத்தைச் சார்ந்தவருக்கே தமிழ் மக்கள் வாக்களித்திருந்தார்களெனவும் கூறியுள்ளார்.

இது அரசியல் ரீதியான முடிவே தவிர இன ரீதியானதல்ல என்பதை புரிந்தவராக, புதிய ஜனாதிபதி ஒட்டுமொத்த நாட்டின் ஜனாதிபதி என்பதை ஏற்றுக்கொண்டு, மக்கள் மனங்களை வெல்ல நடவடிக்கைகளை எதிர்காலத்தில் மேற்கொள்ளவேண்டுமெனவும், அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .