2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

‘கறுப்பு வைரம்’ மாயா ஏஞ்சலோ

Subashini   / 2018 ஏப்ரல் 04 , மு.ப. 11:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

“கசப்பு மண்டிய, திருகலான உங்கள் பொய்களால் வரலாற்றில் என்னை நீங்கள் வீழ்த்திவிடலாம். அந்த அழுக்கினுள் என்னை நீங்கள் புதைத்துவிடலாம் ஆனால், தூசியைப் போல நான் மேலெழுவேன்”

புகழ்பெற்ற இந்த வரிகளுக்கு சொந்தக்காரர், ஒரு கறுப்பின பெண். எழுத்தாளர். கவிஞர், நடிகை, நர்த்தகி, பாடகி, நாடகாசிரியர், பாடலாசிரியர், நாடகத்தயாரிப்பாளர், திரைப்படத்தயாரிப்பாளர், இயக்குனர், குடியுரிமைப் போராளி என பன்முகத்தோடு திகழ்ந்த, உலகம் போற்றும் படைப்பாளி. இனவெறிக்கு எதிராகத் தனது வாழ்நாள் முழுக்கப் போராடி, உலகையே தன் பக்கம் திரும்பிப் பார்க்கவைத்ததோடு, இனவெறி கொழுந்து விட்டெறிந்த போது, தன் இனத்தின் பெருமையையும் உலகுக்கு எடுத்துச் சொன்னவர். அவர் வேறு யாருமல்ல உலகம் போற்றும் படைப்பாளி மாயா ஏஞ்சலோ (Maya Angelou) தான் அவர்.

ஆறிற்கும் அதிகமான மொழிகளில் தேர்ச்சி கண்ட இவர், அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்துள்ளதோடு, புகழ்பெற்ற சில பத்திரிகைகளின் ஆசிரியராகவும் கடமையாற்றியுள்ளார். உண்மையில் இவர் எந்தவொரு பல்கலைக்கழகத்திலும் கற்கவில்லை என்று சொன்னால், சிறு குழந்தை கூட எள்ளி நகையாடும். ஆனால் உண்மை அதுதான். மாயா எந்வொரு பல்கலைக்கழகத்திலும், பட்டப்படிப்பை மேற்கொள்ளவில்லை. இருப்பினும் கூட, உலகம் முழுவதிலுமுள்ள, முப்பதுக்கும் அதிகமான பல்கலைக்கழகங்கள், இவருக்கு கௌரவப் பட்டங்களை வழங்கி கௌரவித்திருக்கின்றன.

“எனது பணி முழுக்க, எனது வாழ்வு முழுக்க அனைத்தும் இருத்தல் தொடர்பானவை. எனது எழுத்து முழுக்க, “ நீங்கள் பல தோல்விகளை எதிர்கொள்ள நேரிடலாம். ஆனால் தோற்றுவிடக் கூடாது”, என்பதைத்தான் எனது எழுத்துகள் சொல்கிறது” என்ற இவரின் வரிகள், தோல்வி மேல் தோல்வி கண்டு, மரணிக்கும் தருவாயில் ஊசலாடிக்கொண்டிருக்கும் அனைவருக்கும், மிகப்பெரும் உந்து சக்தி என்றால் மிகையாகாது. அத்தனை வலிமை மிக்க பல வரிகளுக்குச் சொந்தக்காரரான மாயாவின் ஜனன தினம் இன்று.

கருப்பினக் கவிஞர்களில் தனித்த அடையாளத்தைக் கொண்ட மாயா ஏஞ்சலோ, தன், சிறுபராயத்திலேயே, பல இன்னல்களைச் சந்தித்தார். இளம்வயதிலேயே பெற்றோரால் கைவிடப்பட்ட இவர், தனது எட்டு வயதில் தாயாரின் காதலனால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட அதிர்ச்சியில், பேசும் திறனிழந்து எண்ணிப்பார்க்க முடியாத துன்பங்களை அனுபவித்தவர். மிக இளம்வயதிலேயே தன் சொந்தவாழ்வில் எல்லாவிதமான கொடுமைகளையும் அனுபவித்த இவர் தன்னை, தன் சுயத்தை, தனது சொற்களால் மீட்டெடுத்தார். இனவெறிக்கு எதிராகத் தனது வாழ்நாள் முழுக்கப் போராடியுள்ள மாயா, அமெரிக்காவின் பெண்கள் உரிமைகள் மற்றும் மனித உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்துள்ளார்.

வாழ்வதற்காக வாழ்நாள் முழுக்கப் போராடுவதென்பது, நினைத்துப்பார்க்க முடியாத கொடுமை. ஆனால், மாயா ஏஞ்சலோவின் கவிதைகள் பஞ்சத்தில், பசியில், வேதனையில், கண்ணீரில் எழுதப்பட்டவை. ஒவ்வொரு சொல்லும், ஒவ்வொரு வரியும், அவர் வாழ்ந்து அனுபவித்த வாழ்வின் வலியை, வேதனையைப் பேசுவதாக அமைந்திருந்தது. அந்த வலி, அவரை அந்த வலியிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு, வெளிவரத் தூண்டிக் கொண்டே இருப்பதாக அமைந்தது.

ஒடுக்கப்பட்ட கருப்பினப் பெண்களின் அடையாளமாக உருவெடுத்த மாயா, தனது தனித்துவத்தை, தனது இரகசியத்தை தனது வலிகளால் உலகுக்கு உணர்த்தினார். கறுப்பின இலக்கியத்தின் எழுச்சியாகவும் கறுப்பினப் பெண்ணிய இலக்கியத்தின் முன்னோடியாகவும் திகழ்ந்த மாயா ஏஞ்சலோவின் படைப்புகள், அவர்மீது பிரகாச சூரியனை மிளிரச் செய்ததோடு, உலகெங்கும் ஒடுக்கப்படும் மனிதர்களின் வாழ்விற்கான வெளிச்சத்திற்கு ஓர் உத்வேகத்தைத் தந்ததை மறுப்பதற்கில்லை.

சம உரிமை, அமைதிக்கான போராட்டம் என்பனவற்றில், எப்போதும் முன்னணியில் இருந்த மாயா, ‘கூண்டுப் பறவை ஏன் பாடுகிறது என்று எனக்குத் தெரியும்’ என்று பெயரிடப்பட்ட தனது சுயசரிதையின் மூலம், சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றார். ஐம்பதுக்கும் மேற்பட்ட விருதுகளை வென்ற இவர், ஏழு சுயசரிதைகள், மூன்று கட்டுரைத் தொகுப்புகள், பல கவிதைத் தொகுப்புகளையும் எழுதியுள்ளார். ஒரு கவிஞராகவும் எழுத்தாளராகவும் அங்கீகாரத்தைப் பெறும் முன் சமையல், பாலியல் தொழிலாளி, நைட் கிளப் டான்சர் போன்ற பல வேலைகளை பார்த்திருக்கிறார் மாயா.

தனது சுயசரிதையின் மூலம் கறுப்பின மக்களின், ஒடுக்கப்பட்ட பெண்களின் பிரதிநிதியாக உருவெடுத்தார். ‘கூண்டுப் பறவை ஏன் பாடுகிறது என்று எனக்குத் தெரியும்’ நூலின் முதல் பாகம், அமெரிக்க, ஆபிரிக்க பெண்ணின், தனிப்பட்ட வாழ்க்கையை, அதன் குரூரங்களைப் பேசிய முதல் புத்தகமாகச் சித்தரிக்கப் படுகிறது. இனவெறியால் ஒடுக்கப்பட்ட ஒரு வாழ்க்கையை இலக்கியமும் மன உறுதியும் எப்படி மீட்டெடுக்கின்றன என்பதை விவரிக்கும் புத்தகம் அது.

அந்தவகையில், ஏஞ்சலோவின் வாழ்க்கையும், அவர் படைப்புகளும் உலகின் எந்த மூலையிலும் ஒடுக்கப்படும் மனிதர்களின் மீட்சிக்கான உத்வேகத்தைத் தரும் என்பதில் ஐயமில்லை. உலகம் போற்றும் படைப்பாளி மாயா ஏஞ்சலோவின் மரணம், அவரை உலகிலிருந்து பிரித்தாலும், அவரின் வரிகள் இன்றும் அவரை வாழவைத்துக்கொண்டுதான் இருக்கின்றன!

“உங்கள் சொற்களால் என்னைச் சுடலாம்

உங்கள் கண்களால் என்னை வெட்டலாம்

உங்கள் வெறுப்பால் என்னைக் கொல்லலாம்

ஆனால் காற்றைப் போல நான் எழுந்து வருவேன்!”

-மாயா ஏஞ்சலோ

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X