2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

திடீர் கோளாரால் அவசரமாக தரையிறக்கப்பட்ட ரஷ்ய விண்கலம்

Editorial   / 2018 ஒக்டோபர் 16 , பி.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்க, ரஷ்ய விண்வெளி வீரர்களுடன் சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் நோக்கி புறப்பட்ட விண்கலத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டதையடுத்து,  அது அவசரமாக தரையிறக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, அதிலிருந்த இரு விண்வெளி வீரர்களும் காயமின்றி மீட்கப்பட்டனர்.

இதுகுறித்து ரஷ்ய விண்வெளி ஆய்வு மையமான ராஸ்காஸ்மாஸ், அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாஸா ஆகியவை தெரிவித்ததாவது, ரஷ்ய விண்வெளி வீரர் அலெக்ஸி ஓவ்சினினையும், அமெரிக்க விண்வெளி வீரர் நிக்லாஸ் ஹேகையும் ஏற்றிக் கொண்டு, சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை நோக்கி சோயெஸ் விண்கலம் கஜகஸ்தானிலுள்ள பைகானூர் ஏவுதளத்திலிருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.

புறப்பட்ட சிறிது நேரத்திலியே அந்த விண்கலத்தின் இரண்டாவது கட்ட இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, அந்த விண்கலத்திலிருந்த விண்வெளி ஓடம் தனியாகப் பிரிந்து பூமியை நோக்கி பாயத் தொடங்கியது. எதிர்பார்த்ததை விட மிக வேகமாகவே தரையை நோக்கி அது பாய்ந்ததால் அதிலிருந்த இரு விண்வெளி வீரர்களும் அளவுக்கு அதிகமான புவியீர்ப்பு எதிர்விசையை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

எனினும், இதுபோன்ற சூழல்களுக்காக அவர்களுக்கு ஏற்கெனவே பயிற்சி அளிக்கப்பட்டிருந்ததால் அந்த விசையை அவர்களால் சமாளிக்க முடிந்தது.

மேலும், பூமியில் தயாராக இருந்த மீட்புக் குழுவினருடன் தொடர்பு கொண்டு அவர்களால் பேச முடிந்தது.

இதையடுத்து, அவசரமாக தரையிறங்கிய அந்த விண்கலத்தில் இருந்து இரு விண்வெளி வீரர்களையும் மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டனர். மீட்கப்பட்ட இருவரும் காயமன்றி, நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தனர்.

இதன் மூலம், ரஷ்யாவின் பேரிடர் மீட்பு செயலமைப்பு மிக நல்ல முறையில் செயல்படுவது உறுதியாகியுள்ளது என்று இரு ஆய்வு மையங்களும் தெரிவித்தன.

ரஷ்ய விண்வெளி ஆய்வு மையத்தைப் பொருத்தவரை, கடந்த சில ஆண்டுகளாகவே பல்வேறு தோல்விகளையும், பின்னடைவுகளையும் சந்தித்து வருகிறது. அந்த மையம் அனுப்பிய செயற்கைக்கோள்கள், ஆய்வுக் கலங்கள் மாயமாகியுள்ளன.

இந்தச் சூழலில், விண்வெளி வீரர்களுடன் ராஸ்காஸ்மாஸ் தற்போது அனுப்பிய விண்கலத்தில் பழுது ஏற்பட்டு அது அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .