2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

வானிலிருந்து வந்தது அது

Editorial   / 2018 ஜனவரி 22 , பி.ப. 02:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்தியாவின் ஹரியானா மாநிலத்தின் குர்கான் எனும் மாவட்டத்திலுள்ள கிராமத்தில், உறைந்த நிலையில், விமானத்திலிருந்து விழுந்த மனித கழிவுகளை, வேற்றுக்கிரக வாசிகளின் பரிசு என்று நினைத்து, வீடுகளுக்குக் கொண்டுச் சென்ற கிராமத்தவர்கள், பின்னர் உண்மை தெரிந்ததும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

குர்கானில் பசில் பூர் பாத்லி கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்பீர் யாதவ். அவர், கோதுமை வயலொன்றை சொந்தமாக வைத்துள்ளார்.

நேற்று, வயலில் இறங்கி வேலை பாரத்துக் கொண்டிருருந்தபோது, தன்னுடைய வயலை நோக்கி, வானிலிருந்து பாறையொன்று வருவதைக் கண்டுள்ளார்.  இதன்போது அதிர்ச்சியடைந்த அவர், தன்னை சுதாகரித்துக்கொள்வதற்கு முன்னர், அந்தப் பாறை, அவரது வயலுக்குள் விழுந்துள்ளது.

வானில் இருந்து விழுந்த பொருள் ஏவுகணையா?, வெடிகுண்டா? அல்லது விண் கற்களா? எனத் தெரியாமல், அவர் தடுமாறி நின்றிருந்துள்ளார். உடனே,  இது குறித்து ஊர் தலைவர் சுக்பீர் சிங்குக்கு அறிவித்துள்ளார். அதையடுத்து, இந்த விவகாரம், காட்டுத்தீ போன்று, கிராமம் முழுவதும் பரவியுள்ளது.

அந்த பாறை போன்ற பொருளை சுற்றி கூட்டம் கூடியது. அது என்னவாக இருக்கும் என, பெரியவர்கள் ஆளுக்காள் கலந்துரையாடி வந்தனர். அது வெள்ளை நிறத்தில் இருப்பதால், நிச்சயம் வேற்றுக்கிரகவாசிகளின் பரிசாகவே இருக்கும் என்று, கிராமத்திலுள்ளவர்கள் நினைத்தனர். இன்னும் சிலர், இது ஒரு அரிய வகை தாது பொருள் என்றும் வானிலிருந்து வந்த பொருளாக இருக்கலாம் என்றும் கூறினர்.

எனினும், மாவட்ட நிர்வாகத்தை அணுகினால் என்னவென்று தெரிந்துவிடும் என்று ஒருவர் கூறவே, கிராம மக்களில் சில பிரதிநிதிகள், மாவட்ட நிர்வாகத்தை அணுகினர். பின்னர் அதிகாரி ஒருவர் தலைமையில், வானிலை மையம், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் ஆகிய அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு செய்தனர். அந்தப் பொருளின் சில துகள்களை தடயவியல் துறைக்கு அனுப்பினர்.

ஆய்வு முடிவுகள், இன்று வெளியானது. அதைக் கேட்டதும், மக்கள் அதிர்ச்சியடைந்து முகத்தை சுளித்துவிட்டனராம்.

வானிலிருந்து விழுந்த பொருளுக்கு பெயர் ப்ளூ ஐஸ் என்று பெயர் என்றும், அப்படியென்றால் உறைந்த நிலையில் வைக்கப்படும் மனிதக் கழிவுகள் என்று கூறுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பாறை வந்து விழுந்தவுடன், அதிலிருந்த சில துண்டுகளை எடுத்து, வயல் சொந்தக்காரரான ராஜ்பீரின் வீட்டு குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்துள்ளனர். மனித கழிவுதான் அது என்று தெரிந்ததும், அதை எடுத்து எறிவதற்கு, ராஜ்பீரின் வீட்டார் பதறியடித்து ஓடியுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .