2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஆஷஸை ஒளிரூட்டிய நட்சத்திரங்கள்

Shanmugan Murugavel   / 2019 செப்டெம்பர் 18 , மு.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலிய, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரான ஆஷஸானது 1972ஆம் ஆண்டுக்குப் பிறகு பின்னர் இவ்வாண்டு சமநிலையில் முடிவடைந்திருந்தது.

அந்தவகையில், அண்மைய காலங்களில் ஒரு அணியால் அதுவும் அவுஸ்திரேலியாவில் 2010-11ஆம் ஆண்டில் இடம்பெற்ற தொடர் தவிர அண்மைய ஏனைய தொடர்கள் அனைத்தும் அவுஸ்திரேலியாவில் இடம்பெறும்போது அவுஸ்திரேலியாவாலும், இங்கிலாந்தில் இடம்பெறும்போது இங்கிலாந்தாலும் வெற்றிகொள்ளப்பட்டநிலையில் இவ்வாண்டுத் தொடரில் சமநிலை முடிவானது தொடரின் போட்டித்தன்மையை வெளிப்படுத்துகின்றது.

இந்நிலையில், இவ்வகையான போட்டித்தன்மையான தொடரை வழங்குவதற்கு அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் ஸ்டீவ் ஸ்மித், உப தலைவர் பற் கமின்ஸ், இங்கிலாந்தின் உப தலைவர் பென் ஸ்டோக்ஸ், இளம் வேகப்பந்துவீச்சாளர் ஜொவ்ரா ஆர்ச்சர், சிரேஷ்ட வேகப்பந்துவீச்சாளர் ஸ்டூவர்ட் ப்ரோட், அவுஸ்திரேலியாவின் வேகப்பந்துவீச்சாளர் ஜொஷ் ஹேசில்வூட்டின் பெறுபேறுகளே பிரதான காரணங்களாய் அமைந்திருந்தன.

அந்தவகையில், தொடரின் முதலாவது போட்டியின் முதலாவது இனிங்ஸிலிருந்தே தனதணி இக்கட்டான நிலையிலிருக்கும்போது ஓட்டத்துக்கு மேல் ஓட்டங்களாக சதங்கள், இரட்டைச்சதம், அரைச்சதங்கள் எனக் குவித்து தான் இத்தொடரில் விளையாடிய நான்கு போட்டிகளின் ஏழு இனிங்ஸ்களில் 110.57 என்ற சராசரியில் 774 ஓட்டங்களைக் குவித்து ஓட்டக்குவிப்பு இயந்திரமாக விளங்கியிருந்த ஸ்மித்தால்தான் ஆஷஸை மீண்டும் அவுஸ்திரேலியாவுக்கு அவ்வணி எடுத்துச் செல்கின்றது என்றால் அது மிகையாகாது.

அதுவும், பந்தைச் சேதப்படுத்திய விவகாரத்தில் ஓராண்டுத் தடைபெற்று மீண்டும் திரும்பிய தருணத்தில் தன்னை நோக்கி வந்த அனைத்துக் கேலிகளுக்கும் தனது துடுப்பாட்டால் பதிலளித்து, ஓராண்டு விளையாடமல் இருந்தபோதும் சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான துடுப்பாட்டவீரர்களின் தரவரிசையில் முதலாமிடத்துக்கு அபாரமாக ஸ்மித் முன்னேறியுள்ளார்.

இந்நிலையில், இத்தொடரின் நாயகன் யாரென்றால் எவராலும் ஸ்மித்தைத் தாண்டி வேறொருவரை முன்மொழிய முடியாத நிலையில் தனது பெறுபேறுகளை ஸ்மித் வெளிக்காட்டியிருந்த நிலையில், இத்தொடரின் ஐந்து போட்டிகளிலும் விளையாடி ஒவ்வொரு போட்டியிலும் முக்கியமான, இணைப்பாட்டம் கட்டியெழுப்பும்போது விக்கெட்டுகளைக் கைப்பற்றிய கமின்ஸ், ஸ்மித் அளவுக்கு அவுஸ்திரேலிய அணியின் பந்துவீச்சில் முக்கியத்துவம் பெற்றிருந்தார்.

தற்கால உலகில் டெஸ்ட் போட்டிகளில் வேகப்பந்துவீச்சாளர்களின் பணிச்சுமை குறித்து பரவலாக ஆராயப்பட்டு ஓய்வுகள் வழங்கப்படுகின்ற நிலையில், ஐந்து போட்டிகளிலும் உடற்றகுதியுடன் இருந்தது மட்டுமல்லாமல் தொடர்ந்தும் வேகமாக பந்துவீசியிருந்த கமின்ஸ் 19.62 என்ற சராசரியில் 29 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார். அதுவும் கமின்ஸின் பந்துவீச்சில் பல பிடியெடுப்புகள் தவறவிடப்பட்டிருந்த நிலையில், அவர் எவ்வாறு அவுஸ்திரேலியாவின் பந்துவீச்சுவரிசையை வழிநடத்திச் சென்றார் என்பது புலனாகின்றது.

அடுத்ததாக, தமது அணித்தலைவர் ஜோ றூட்டையே இங்கிலாந்து இத்தொடரில் வெகுவாக எதிர்பார்த்திருந்த நிலையில், மழையால் பாதிக்கப்பட்டு வெற்றி தோல்வியின்றி முடிவடைந்த இத்தொடரின் இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து வெற்றிபெறும் நிலையை ஏற்படுத்தியிருந்ததோடு, மூன்றாவது போட்டியில் இங்கிலாந்துக்கு எதிர்பாராத வெற்றியை இறுதி விக்கெட்டின் பங்களிப்பில் வழங்கியிருந்த ஸ்டோக்ஸே இங்கிலாந்தின் நாயகனாக இத்தொடரில் கொள்ளப்படவேண்டியவர்.

இத்தொடரின் ஐந்து போட்டிகளின் 10 இனிங்ஸ்களில் 55.12 என்ற சராசரியில் 441 ஓட்டங்களைப் பெற்றிருந்த ஸ்டோக்ஸ், ஏழு இனிங்ஸ்களில் பந்துவீசு எட்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஸ்டோக்ஸையடுத்து இத்தொடரின் இரண்டாவது போட்டியில் தனது டெஸ்ட் அறிமுகத்தை மேற்கொண்டு அப்போட்டியில் இவரது பந்துவீச்சில் ஸ்மித்தையே நிலைகுலையச் செய்து, மூன்றாவது டெஸ்டில் அவர் பங்கேற்காத நிலைக்கு அவரை சென்றடைய வைத்த ஆர்ச்சர் இங்கிலாந்தின் நட்சத்திரமொன்றாக மிளிருகின்றார்.

நான்கு போட்டிகளில் விளையாடி 20.27 என்ற சராசரியில் 22 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்த ஆர்ச்சர், அடுத்து அவுஸ்திரேலியாவின் வேகமான ஆடுகளங்களில் இடம்பெறப்போகும் ஆஷஸில் நிச்சயமாக பிரகாசிப்பார் என இப்போது குறித்து வைக்கக்கூடிய நிலையில் காணப்படுகின்றார்.

அடுத்து, இங்கிலாந்தின் சிரேஷ்ட வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் அன்டர்சனால் இத்தொடரில் நான்கு ஓவர்களை மாத்திரம் வீசக்கூடியதாக இருந்திருந்த நிலையில், இங்கிலாந்தின் வேகப்பந்துவீச்சுக்கு தலைமையேற்று ஆஷஸின் போக்கை குறிப்பிட்ட நேரத்தில் மாற்றக்கூடிய அவுஸ்திரேலியாவின் ஆரம்பத் துடுப்பாட்டவீரர் டேவிட் வோணரை ஒவ்வொரு இனிங்ஸிலும் விரைவாக ஆட்டமிழக்கச் செய்து அவரது தாக்கத்தை இல்லாமற் செய்த ப்ரோட்டும் முக்கியமானவராகக் காணப்படுகின்றார். ஐந்து போட்டிகளில் 23 விக்கெட்டுகளை ப்ரோட் கைப்பற்றியிருந்தார்.

இந்நிலையில், கடந்த காலங்களில் அவுஸ்திரேலிய அணியில் இடம்பெறும் முதலாவது பெயரொன்றாகக் காணப்படுகின்றபோதும், நீண்ட காயம் மற்றும் இங்கிலாந்து ஆடுகளநிலைமை காரணமாக இத்தொடரின் முதலாவது போட்டியில் இடம்பெற்றிருக்காத ஜொஷ் ஹேசில்வூட், கள நிலைமைகளால் இரண்டாவது போட்டிக்கான அணியில் இடம்பெற்று தொடர்ந்து ஓஃப் ஸ்டம்ப் மற்றும் அதற்கு வெளியே பந்துவீசி இனிங்ஸின் ஆரம்பத்தில் விக்கெட்டுகள் கைப்பற்றப்படுவதை உறுதி செய்து அந்த டெஸ்டில் மட்டுமல்ல மிகுதி டெஸ்ட்கள் அனைத்திலும் விளையாடி நான்கு போட்டிகளில் 21.85 என்ற சராசரியில் 20 விக்கெட்டுகளைக் கைப்பற்றி ஆஷஸை அவுஸ்திரேலியா எடுத்துச் செல்வதற்கான பிரதான பங்கொன்றை வகித்திருந்தார்.

அந்தவகையில், இப்பத்தியில் குறிப்பிடப்பட்டாவிட்டாலும் ஐந்து போட்டிகளில் விளையாடி 20 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய அவுஸ்திரேலியாவின் சுழற்பந்துவீச்சாளர் நேதன் லையன், ஸ்மித்தை பிரதியிட்டு இத்தொடரில் ஆரம்பத்தில் விளையாடி, நான்கு போட்டிகளின் ஏழு இனிங்ஸ்களில் 50.42 என்ற சராசரியில் 353 ஓட்டங்களைப் பெற்ற மர்னுஸ் லபுஷைனும் அவுஸ்திரேலியா ஆஷஸை தக்க வைப்பதற்கான பங்களிப்பை வழங்கி ஆஷஸை ஒளிரூட்டியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .