2024 மார்ச் 28, வியாழக்கிழமை

இந்தியாவின் தலையிடியைத் தீர்த்தாரா ராயுடு?

Shanmugan Murugavel   / 2018 நவம்பர் 01 , மு.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய கிரிக்கெட் அணிக்கு இடியப்பச் சிக்கலாக அமைந்த, ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் தமது நான்காமிலக்க வீரர் யார் என்பதற்கான தீர்வை, மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான நான்காவது ஒருநாள் சர்வதேசப் போட்டியின்போது வழங்கினார் என்று கூறப்படுகிறது.

மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான குறித்த தொடரின் முதல் மூன்று போட்டிகளிலும் சதம் பெற்றிருந்த இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராத் கோலி, தமது இனிங்ஸின் ஆரம்பத்திலேயே ஆட்டமிழந்திருந்த நிலையிலேயே குறித்த போட்டியில் 2விக்கெட் இழப்புக்கு 101 ஓட்டங்களை இந்தியா பெற்ற நிலையில் ராயுடு களமிறங்கியிருந்தார்.

இந்நிலையில், மறுமுனையில் ரோகித் ஷர்மாவை ராயுடு கொண்டிருந்த நிலையில் அவர் வேகமாக துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த நிலையிலும் இந்தியா சிறந்ததொரு ஆரம்பத்தையும் பெற்றிருந்த நிலையில், குறித்த ஆரம்பத்தைத் தொடர வேண்டியிருந்தது.

அந்தவகையில், பெரியளவு ஆபத்துக்களில்லாமல் ஓட்டங்களைப் பெறும் பாணியிலான மைதானத்தின் அனைத்துப் பகுதியையும் நோக்கித் துடுப்பெடுத்தாடும் ராயுடுவின் திறமை காரணமாக குறித்த ஆரம்பத்தை இந்தியா தொடர்ந்திருந்ததுடன், முதல் 10 ஓட்டங்களை 16 பந்துகளிலும் 21 ஓட்டங்களை 29 பந்துகளிலும் 30 ஓட்டங்களை 36 பந்துகளிலும் 40 ஓட்டங்களை 43 பந்துகளிலும் பெற்றதுடன் தனது அரைச்சதத்தை 51 பந்துகளில் பூர்த்தி செய்திருந்தார்.

அந்தவகையில், இந்தியாவின் சிறந்த ஆரம்பம் தொடருவதற்கு வழிவகுத்தது மட்டுமல்லாமல் ஓட்ட எண்ணிக்கை குறையாமலும் பார்த்துக் கொண்ட ராயுடு தன்னை நிலைநிறுத்திக் கொண்ட பின்னர் தனது அடுத்த 50 ஓட்டங்களை 29 பந்துகளில் பெற்று ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் தனது மூன்றாவது சதத்தைப் பெற்றுக் கொண்டிருந்தார்.

இந்நிலையில், ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் ஏறத்தாழ இரண்டாண்டுகளில் இந்தியா சார்பாக முதல் மூன்று வீரர்களைத் தவிர வேறொரு வீரர் சதம் பெற்ற முதலாவது சந்தர்ப்பமாக ராயுடுவின் சதம் அமைந்திருந்தது.

அந்தவகையில், இவ்வாண்டு இந்தியன் பிறீமியர் லீக்கில் சிறப்பாகச் செயற்பட்டு ஆசியக் கிண்ணத்தில் இடம்பெற்று, தற்போது மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான தொடரிலும் இடம்பிடித்த ராயுடு இத்தொடரின் இரண்டாவது போட்டியில் ஆரம்பத்திலேயே இரண்டு விக்கெட்டுகள் இழக்கப்பட கோலியுடன் சேர்ந்து அணியை நிலைநிறுத்திய நிலையில் தற்போது குறித்த இனிங்ஸுடன் சேர்த்து அடுத்தாண்டு இடம்பெறவுள்ள உலகக் கிண்ணத்துக்கான இந்திய அணியில் நான்காமிடத்துக்காக அடிக்கல்லை ராயுடு இட்டிருக்கிறார்.

அந்தவகையில், கடந்த 2015ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்துக்கான இந்தியக் குழாமில் இடம்பெற்றிருந்தபோதும் ஒருபோட்டியிலும் விளையாடியிருக்காத ராயுடு, அந்த உலகக் கிண்ணத்தில் இந்தியாவின் நான்காமிலக்க வீரராகவிருந்த அஜின்கியா ரஹானே இனிங்ஸின் நடுப்பகுதியில் மெதுவான ஆடுகளங்களில் ஓட்டங்களைப் பெறத் தடுமாறியிருந்த நிலையில் அணியிலிருந்து அவர் வெளியேற்றப்பட்ட நிலையில், தற்போது இந்திய அணிக்கு மீட்பராக ராயுடு கைகொடுக்கிறார்.

எவ்வாறாயினும் 33 வயதாகும் ராயுடு நீண்ட எதிர்காலத்துக்கான தெரிவொன்றாக இல்லாத நிலையில், திருவனந்தபுரத்தில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு ஆரம்பாமாகவிருக்கும் மேற்கிந்தியத் தீவுகளிக்கெதிரான ஐந்தாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் வாய்ப்புகள் கிடைக்கும் பட்சத்தில் மேலுமொரு தீர்க்கமான ஓட்ட எண்ணிக்கையைப் பெறுவதன் மூலம் உலகக் கிண்ண நான்காமிலக்க வீரருக்கான தனது அத்திவாரத்தின் மீது கட்டமைப்புகளை இடலாம்.

மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான தொடருக்கு முன்பாகவே, உலகக் கிண்ண நான்காமிலக்க வீரராக ராயுடுவை அடையாளப்படுத்தியிருந்த கோலி, அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்படுமெனத் தெரிவித்த நிலையில், இயற்கையாகவே சுழற்பந்துவீச்சுக்கெதிராக மிகச் சிறப்பாக துடுப்பெடுத்தாடக் கூடிய ராயுடு, இந்தியாவின் அடுத்த ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரான அவுஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் அவுஸ்திரேலிய வேகமான ஆடுகளங்களில் ஓட்டங்களைப் பெறுவதன் மூலம் உலகக் கிண்ண நான்காமிடத்தை தன்னுடையதாக்கிக் கொள்ளலாம்.

இங்கு ராயுடு தொடர்ச்சியாக ஓட்டங்களைப் பெறுவது ஏன் முக்கியமானதாக இருக்கின்றதெனில், அண்மைய காலங்களில் நான்காமிடங்களில் பரீட்சித்துப் பார்க்கப்பட்ட மனீஷ் பாண்டி, லோகேஷ் ராகுல், ஷேரேயாஸ் ஐயர், தினேஷ் கார்த்திக் ஆகியோர் குறிப்பிட்ட இனிங்ஸ்களில் குறிப்பிடத்தக்க ஓட்டங்களைப் பெற்றனர். ஆயினும் அவர்கள் தமது இடத்தை நிலைநிறுத்தக் கூடிய வகையிலான ஓட்டங்களைப் பெறாமை காரணமாகவே அணியில் இடத்தை இழந்திருந்த நிலையில் அவர்கள் இன்னும் அணி நிர்வாகத்தின் பார்வையிலேயே காணப்படுகின்றனர்.

இந்நிலையில், தனது 16ஆவது வயதிலேயே ஆரம்பத் துடுப்பாட்ட வீரராகக் களமிறங்கி ஆட்டமிழக்காமல் 177 ஓட்டங்களைப் பெற்று இந்திய 19 வயதுக்குட்பட்ட அணி 2002ஆம் ஆண்டு இங்கிலாந்தில் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் இங்கிலாந்தை வெள்ளையடிக்கக் காரணமாகவிருந்த ராயுடு, இந்தியாவின் சிறந்த துடுப்பாட்டவீரரொருவராக வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.

குறித்த தொடரைத் தொடர்ந்த இந்தியாவின் மாநில அணிகளுக்கிடையிலான முதற்தர போட்டித் தொடரான ரஞ்சி கிண்ணத் தொடரிலும் சிறப்பாகச் செயற்பட்டிருந்த ராயுடு, 2004ஆம் ஆண்டு பங்களாதேஷில் இடம்பெற்றிருந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணத்தில் இந்தியாவை அரையிறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றிருந்தார்.

இந்நிலையில், 2004-05 பருவகாலத்தில் தனது மாநில அணியின் பயிற்சியாளருடன் பிரச்சினைகளைக் கொண்டிருந்த ராயுடு, துடுப்பாட்டத்தில் மோசமாகச் செயற்பட்டு, அடுதற்கடுத்த பருவகாலத்தில் ஆந்திராவுக்குச் சென்று மீண்டும் ஹைதரபாத்துக்கு வந்து நடுவர்களுடன் பிரச்சினைப்பட்டிருந்தார்.

இதேவேளை, 2007ஆம் ஆண்டு இந்தியன் கிரிக்கெட் லீக்கில் இணைந்து தனது கிரிக்கெட் வாழ்வை முடித்துக் கொள்ளப் பார்த்த ராயுடு, 2009ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் மன்னிப்பை ஏற்றதைத் தொடர்ந்து, அவ்வாண்டிலிருந்து அடுத்த ஆறு ஆண்டுகளாக இந்தியன் பிறீமியர் லீக்கில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்து நட்சத்திர அதிரடி வீரரொருவராக மாறிக் கொண்டார்.

இந்நிலையில், 2013ஆம் ஆண்டு சிம்பாப்வேக்கெதிராக இந்திய அணியில் அறிமுகத்தை மேற்கொண்ட ராயுடு, இதுவரை 44 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் விளையாடி 51.67 என்ற சராசரியில் ஓட்டங்களைப் பெற்றிருந்தாலும், முன்னணி வீரர்களெவருக்கும் ஓய்வு வழங்காமலுள்ள இந்திய அணியில் ராயுடு தற்போது பெற்றுள்ள அவரது மூன்றாவது சதம்தான் இந்திய அணியில் அவரது இடத்தை தற்போதைக்கு நிரந்தரமாக்கியுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X