2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

உலகக் கிண்ணம் 2018: அரையிறுதி 2

Editorial   / 2018 ஜூலை 11 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

- ச. விமல்

உலகக்கிண்ண தொடரில் இம்முறை பங்குபற்றிய 32 அணிகள் என்ற நிலை  04 அணிகளின் அரை இறுதி என்ற நிலைக்கு வந்தாகிவிட்டது. உலகக்கிண்ணம் வெல்வார்கள், பலமான அணி இப்படியெல்லாம் வர்ணித்தவர்கள் அனைவருமே வீடு திரும்பி விட்டார்கள். எதிர்ப்பார்ப்புகள் மிகவும்  குறைவாக காணப்பட்ட நான்கு அணிகள் அரை இறுதிப் போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளன. தற்போது தெரிவு செய்யப்பட்டுள்ள அணிகள் அரை இறுதி வரைதானும் வருவார்கள் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். பிரான்ஸ், இங்கிலாந்து, பெல்ஜியம், குரேஷியா  ஆகிய அணிகள் அரை இறுதிப் போட்டிகளுக்கு தெரிவு செய்யப்பட்ட அணிகளாகும். பிரான்ஸ்  மற்றும் பெல்ஜியம்  அணிகளுக்கான முதலாவது அரை இறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணி 1-0 என வெற்றி பெற்று மூன்றாவது தடவையாக இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளது. இங்கிலாந்து, குரேஷியா அணிகள் இன்னுமொரு அரை இறுதிப் போட்டியிலுல் மோதவுள்ளன. மோதுகின்றன. முன்னாள் உலக சம்பியன்கள் இரண்டும், இறுதிப் போட்டிக்கு தகுதி பெறாத ஒரு அணியுமென மூன்று அணிகள் தற்போது மீதமுள்ளன.

இங்கிலாந்து மற்றும் குரேஷியா அணிகளுக்கிடையிலான அரை இறுதிப் போட்டி இரண்டாவது அரை இறுதிப் போட்டியாக இன்று இரவு 11.30 இற்கு ஆரம்பிக்கவுள்ளது. இந்தப் போட்டியும் முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாக அமையவுள்ளது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றுக்கொள்ளுமணி பிரான்ஸ் அணியுடன் மோதவுளள்து. முன்னாள் சம்பியனான இங்கிலாந்து அணி 1966  இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று சம்பியனாகிய தொடரின் அரை இறுதிப் போட்டியில் மாத்திரமே வெற்றி பெற்றுள்ளார்கள். 1990 ஆம் ஆண்டு அரை இறுதிப் போட்டிக்குத் தெரிவு செய்யப்பட்ட போதும் மேற்கு ஜேர்மனி அணியிடம் பனால்டி உதை மூலம் தோல்வியடைந்தார்கள். பின்னர் மூன்றாமிட போட்டிகளில் இத்தாலி அணியிடம் தோல்வியினை சந்தித்தார்கள்.

உலகின் பிரபலமான கால்பந்தாட்ட போட்டி தொடர்கள் நடைபெறுகின்ற இங்கிலாந்தின் கால்பந்து ஆதிக்கம் உலகக்கிண்ண தொடரில் இந்தளவுதானா எனக் கேட்குமளவுக்கே அவர்களின் நிலையுள்ளது. கடந்த காலங்களில் இங்கிலாந்து அணிக்காக விளையாடிய நட்ச்சத்திர வீரர்கள் சாதிக்காதவற்றை அதிகம் பேசப்படாத இந்த வீரர்கள் செய்து காட்டி வருகிறார்கள். இந்த அணியினை அதிகம் எவரும் பெரிய அணியாக கணக்கெடுக்காமல் விட்டமை இந்த அணியின் முன்னேற்றத்துக்கான காரணமாக அமையலாம். அழுத்தங்களின்றி இலகுவாக முன்னேறி வருகிறார்கள். இவர்கள் சந்தித்த அணிகளும் மிகப்பலமான அணிகள் எனக்கூறக்கூடியளவில் இல்லை எனக்கூறினாலும், உலகக்கிண்ணம் என்று வந்ததும் அதனை நாம் அவ்வாறு கூற முடியாது. பிரபலம் குறைந்த அணிகள் எனக் கூறுவது பொருத்தமாக அமையும்.

எட்டு காலிறுதிப்போட்டிகளில் விளையாடியுள்ள இங்கிலாந்து அணி மூன்று காலிறுதிப் போட்டிகளில் மாத்திரமே வெற்றி பெற்றுள்ளார்கள். ஆக இவர்களுக்கான கண்டம் காலிறுதிப் போட்டிகளில் காணப்படுகிறது. காலிறுதிப் போட்டிகளை தாண்டினால் இறுதிப் போட்டி வரை சென்று விடுவார்களோ எனவும் கேட்க தோன்றுகிறது. ஆனாலும் இம்முறை  இவர்களுக்கான காலிறுதி வெற்றி வாய்ப்பு இலகுவாக  கிடைக்கவில்லை. கொலம்பியா அணியின் பக்கமாக இருந்த வெற்றி இறுதி நிமிடங்களில் இவர்கள் பக்கமாக மாறியது. போட்டியின் 57 ஆவது நிமிடத்தில் ஹரி கேன் அடித்த பனால்டி  கோல் மூலம் முன்னிலை பெற்ற இங்கிலாந்து அணி போட்டியின் நிறைவு நேரத்தை அண்மிக்கும் போது வெற்றி உறுதி என்ற நிலை காணப்பட்டது. கொலம்பியா அணி போட்டி நிறைவடைய ஓரிரு நிமிடங்கள் மீதமிருந்த வேளையில் கோலை அடித்து போட்டியினை சமன் செய்தார்கள்.  மேலதிக நேரத்திலும் கோல்கள் பெறப்படாமல் இருக்க பனால்டி உதைக்கு போட்டி நகர்ந்தது. முதல் இரண்டு கோல்களும் அடிக்கப்பட்டன. மூன்றாவது கோலை இங்கிலாந்து தவறவிட 3-2 என்ற முன்னிலையினை கொலம்பியா அணி பெற்றது. ஆனால் அடுத்த இரண்டு கோல்களையும் கொலம்பியா தவறவிட இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

சுவீடன் அணி நல்ல முறையில் விளையாடிய போதும் பாரிய சவால்களை இங்கிலாந்து அணிக்கு வழங்கவிலை. நொக்அவுட் சுற்றுக்களில் விறு விறுப்பு குறைந்த ஒரு போட்டியாக இந்தப்போட்டியினை கருதலாம். கடந்த இரண்டு உலகக்கிண்ண போட்டிகளிலும் விளையாடத சுவீடன் அணிக்கு இந்தளவு முன்னேற்றம் என்பது முக்கியமானதே. முதல் சுற்றில் ஜேர்மனி அணியினை வெற்றி பெற்றதன் மூலம் இந்தளவு முன்னேற்றத்தை அடைய முடிந்தது.

இந்த உலகக்கிண்ண தொடரின் உச்சக்கட்ட விறு விறுப்பை தந்த ஒரு போட்டியாக குரேஷியா மற்றும் ரஸ்சியா அணிகளுக்கிடையிலான போட்டியினை கருதலாம். அரை இறுதிப் போட்டி என்ற ரஸ்சியா அணியின் கனவினை குரேஷியா அணி தகர்த்து இரண்டாவது தடவையாக அரை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. யூகோஸ்லாவியா நாட்டிலிருந்து பிரிந்து குரேஷியா அணியாக  1998 ஆம் ஆண்டு முதற் தடைவையாக களமிறங்கிய  இவர்கள் முதல் உலகக்கிண்ண தொடரில் மூன்றாமிடத்தை  பெற்றுக்கொண்டார்கள்.ஆனால் அதன் பின்னர் உலகக்கிண்ணம் இவர்களுக்கு சரியாக அமையவில்லை. யூகோஸ்லாவியா அணி முதல் உலகக்கிண்ண தொடரில் அரை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்ற அணி. பின்னர் 1962 ஆம் ஆண்டு நானகாமிடத்தை பெற்றுக்கொண்டார்கள். அவர்களின் வாரிசுகளாக வந்தவர்கள் ஆரம்பத்தில் திறமையினை காட்டிய போதும் பின்னர் சரிவு கண்டார்கள். கடந்த நான்கு உலக கிண்ண தொடர்களில் ஒன்றுக்கு தெரிவாகவில்லை. அடுத்த இரண்டு தொடர்களிலும் முதல் சுற்றுடன் வெளியேறினார்கள். இம்முறை ஆர்ஜன்டீனா அணியினை வெற்றி பெற்றதும் அதிஷ்ட வெற்றி கிடைத்து விட்டது என்றே எல்லோரும் நம்பினார்கள். ஆனால் அவர்கள் விளையாடும் விதம் உலகக்கிண்ணத்தை வெற்றி பெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்ற நிலையினை ஏற்படுத்தியுள்ளது. குரேஷியா அணி வெற்றி பெற்றுள்ள அணிகள் அனைத்துமே சிறந்த அணிகள். பலமான அணிகள். இதுவரை உலகக்கிண்ண தொடரில் விளையாடிய ஐந்து போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளார்கள்.

ரஸ்சியா மற்றும் குரேஷியா அணிகளுக்கிடையிலான காலிறுதிப் போட்டியில் முதல் கோலினை ரஸ்சியா போட்டது. எட்டு நிமிடங்களில் இரண்டாவது கோலை குரேஷியா போட்டது. இரு அணிகளும் 90 நிமிடங்கள் வரை கடுமையாக போராடிய போதும் கோல்களை போட முடியவில்லை. மேலதிக நேரத்தின் முதற் பாதியில் குரேஷியா அணி தங்களுக்கான இரண்டாவது கோலை பெற்றது. தொடர்ந்தும் போராடிய ரஸ்சியா அணி ஐந்து நிமிடங்கள் மீதமிருக்க கோலை பெற்றுக்கொண்டார்கள். பனால்டிக்கு போட்டி சென்றது. குரேஷியா அணி 4-3 என வெற்றி பெற்றது. பனால்டி உதை கூட இறுதிவரை விறு விறுப்பை ஏற்படுத்தியது. ரஸ்சியா அணி முதற் தடவையாக காலிறுதிப்போட்டிகளுக்கு தெரிவானோம் என்ற நிலையில் உலகக்கிண்ண தொடரை விட்டு வெளியேறினார்கள். உலகக்கிண்ண தொடரின் ஐந்தாவது இடம் அவர்கக்ளுக்கு வழங்கப்பட்டது.

குரேஷியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இதுவரை உலகக்கிண்ண தொடரில் சந்தித்ததில்லை. முதல் சந்திப்பில் யார் வெற்றி பெறப்போகிறார்கள் என்பது பதில் சொல்ல முடியாத கேள்வி. இரண்டு அணிகளுமே இறுதிப் போட்டி என்பதனை மிகப் பெரியளவில் குறி வைத்துளார்கள். பந்தயக்காரர்கள் இங்கிலாந்து அணி உலகக்கிண்ணத்தை வெற்றி பெற இரண்டாமிட வாய்ப்புக்களையும், குரேஷியா அணி வெற்றி பெற நான்காமிட வாய்ப்புகளையும் வழங்கியுள்ளார்கள். பெல்ஜியமணி இறுதிப் போட்டி வாய்ப்பினை இழந்துள்ள நிலையில் ஒவ்வொரு இடங்கள் இந்த இரண்டு அணிகளும் முன்னேற்றம் பெற்றுள்ளன.

தரப்படுத்தல் இடங்கள் என பார்க்கும் போது 8 இடங்கள் இரு அணிகளுக்கும் வித்தியாசமாக காணப்படுகிறது. இங்கிலாந்து அணி 12 ஆமிடத்திலும், குரேஷியா அணி 20 ஆமிடத்திலும் காணப்படுகின்றன. இரண்டு ஐரோப்பிய அணிகளுக்கிடையிலான மோதல். இரண்டு அணிகளுமே அதிகம் எதிர்பார்க்கப்படாமல் முன்னேறியுள்ளார்கள். குரேஷியா அணியின் வேகமான விளையாட்டும், இறுதி வரையும் போராடும் தன்மையும் அவர்களுக்கு கொஞ்சம் அதிக வாய்ப்புகளை வழங்கினாலும் இங்கிலாந்து என்ற பிரமாண்டம் அவர்களை தடுமாற வைத்து விடுமா என்ற சந்தேக்கமும் ஏற்படாமல் இலை. இன்னுமொரு உலகக்கிண்ண தொடரின் சமபல போட்டியாக இந்தப் போட்டியினை கருதலாம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .