2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

உலகக் கிண்ணம்: நியூசிலாந்து

Shanmugan Murugavel   / 2019 மே 13 , மு.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் 12ஆவது உலகக் கிண்ணத் தொடரானது, இங்கிலாந்தில் இம்மாதம் 30ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள நிலையில், கடந்த 2015ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டி வரை முன்னேறிய நியூசிலாந்து பற்றி இப்பத்தி ஆராய்கிறது.

12ஆவது முறையாக உலகக் கிண்ணத் தொடரில் இம்முறை பங்கேற்கவுள்ள நியூசிலாந்தின் குழாமானது சிறப்பானதாகக் காணப்படுகின்றபோதும், கடந்த உலகக் கிண்ணத் தொடரில் நியூசிலாந்து மீது காணப்பட்டளவுக்கு இம்முறை நியூசிலாந்து மீது எதிர்பார்ப்புகள் காணப்பட்டிருக்கவில்லை.

அதற்குரிய முக்கிய காரணமாக, தரமான சுழற்பந்துவீச்சை நியூசிலாந்து எதிர்கொள்ளத் தடுமாறுவது ஆகும். அந்தவகையில், குறித்த பிரச்சினைக்குரிய தீர்வாக றொஸ் டெய்லர், அணித்தலைவர் கேன் வில்லியம்சன், டொம் லேதம் ஆகியோர் காணப்படுகின்றனர்.

ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் கடந்த இரண்டாண்டுகளாக றொஸ் டெய்லர் மிகச்சிறப்பாகச் செயற்பட்டு வருவதுடன், எப்போதும் போல கேன் வில்லியம்சன் நம்பிக்கைக்குரியவராகக் காணப்படுவதுடன், இவர்களுக்கு அடுத்ததாக சுழற்பந்துவீச்சை எதிர்கொள்ளக்கூடியவராக டொம் லேதம் காணப்படுகின்ற நிலையில், இவர்களிலொருவர் இனிங்ஸின் மத்திய பகுதியில் நின்று துடுப்பெடுத்தாடுவது அவசியமாகியது.

ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் தற்கால ஒழுங்காக இனிங்ஸின் மத்தியபகுதிகளில் விக்கெட்டுகளைக் கைப்பற்றுவதற்கு பெரும்பாலான அணிகள் புறச்சுழற்பந்துவீச்சாளர்களையே பயன்படுத்துகின்ற நிலையில், அவ்வாறான சுழற்பந்துவீச்சாளர்களை றொஸ் டெய்லர், கேன் வில்லியம்சன், டொ லேதம் ஆகியோரை எதிர்கொள்வதிலேயே, இந்தியா, பாகிஸ்தான், அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, இங்கிலாந்து போன்ற பெரிய அணிகளை நியூசிலாந்து வெல்வது தங்கியிருக்கின்றது.

ஆக, றொஸ் டெய்லர், கேன் வில்லியம்சன், டொம் லேதம் போன்ற வீரர்களுடன் ட்ரெண்ட் போல்ட், ஜிம்மி நீஷம், இஷ் சோதி, டிம் செளதி, லொக்கி பெர்கியூஸன் என திறமையான வீரர்களைக் கொண்டுள்ள நியூசிலாந்தானது அரையிறுதிப் போட்டி வரை முன்னேறுவது சாத்தியமானதாகக் காணப்படுகின்றபோதும், அதற்கப்பால் முன்னேறுவது ஆரம்பத் துடுப்பாட்டத்திலேயே தங்கியுள்ளது.

இங்கிலாந்து ஆடுகளங்களானது பாரிய ஓட்ட எண்ணிக்கைகள் பெறப்படக்கூடிய துடுப்பாட்டத்துக்குச் சாதகமான ஆடுகளங்களாகவே உலகக் கிண்ணத் தொடரின்போது காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில், இனிங்ஸின் முதலாவது பந்திலிருந்தே அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி வேகமாக ஓட்டங்களைச் சேர்க்க வேண்டிய கடப்பாடு நியூசிலாந்தின் ஆரம்பத் துடுப்பாட்ட இணைக்கும் காணப்படுகின்றது.

கடந்த உலகக் கிண்ணத் தொடரின் ஆடுகளங்களானவை துடுப்பாட்டத்துக்குச் சாதகமானதாகக் காணப்பட்டிருக்காதபோதும், அப்போது நியூசிலாந்தின் ஆரம்பத் துடுப்பாட்ட இணையாக இருந்த முன்னாள் அணித்தலைவர் பிரண்டன் மக்கலம், மார்டின் கப்தில் ஆகியோர் மேற்குறித்த பாணியைப் பின்பற்றியிருந்த நிலையிலேயே அந்த உலகக் கிண்ணத் தொடரின்போது இறுதிப் போட்டி வரை நியூசிலாந்து முன்னேறியிருந்தது.

அந்தவகையில், தற்போது பிரண்டன் மக்கலம் ஓய்வுபெற்றுள்ள நிலையில் மார்டின் கப்திலோடு பெரும்பாலும் ஹென்றி நிக்கொல்ஸே ஆரம்பத் துடுப்பாட்டவீரராகக் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஏனெனில், பிரண்டன் மக்கலத்தை ஆதர்ச நாயகனாகக் கொண்ட, இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளில் அதிரடியான ஆரம்பத் துடுப்பாட்டவீரரான கொலின் மன்றோவை ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் நியூசிலாந்து சோதித்துப் பார்த்திருந்தாலும் அது பெரிதளவில் வெற்றியளிக்கவில்லை.

ஆக, மார்டின் கப்திலும், ஹென்றி நிக்கொல்ஸும் ஆரம்பத் துடுப்பாட்டவீரர்களாக களமிறங்கும் பட்சத்தில், தனது இனிங்ஸின் ஆரம்பத்தில் வேகமாகத் துடுப்பெடுத்தாடக்கூடியவராக ஹென்றி நிக்கொலஸ் இல்லாத நிலையில், வேகமான ஆரம்பத்தை நியூசிலாந்துக்கு வழங்க வேண்டியவராக மார்டின் கப்திலே காணப்படுகின்றார். மார்டின் கப்தில், நியூசிலாந்துக்கு வழங்கும் ஆரம்பங்களிலேயே, நியூசிலாந்தின் உலகக் கிண்ண வாய்ப்புகள் காணப்படுகின்றன.

அந்தவகையில், 10 அணிகளைக் கொண்ட உலகக் கிண்ணத் தொடரில் இம்முறை மற்றைய அணிகளுடன் ஒவ்வோர் அணியும் மோதவுள்ள நிலையில், வேகமான ஆரம்பங்களைப் பெறும் வகையில் ஆரம்பத்தில் ஓரிரு போட்டிகளுக்காவது கொலின் மன்றோவை நியூசிலாந்து சோதித்துப் பார்த்து அது வெற்றியளித்தால் உலகக் கிண்ணத்தை இம்முறை நியூசிலாந்து கைப்பற்றினாலும் ஆச்சரியப்படுவதுக்கில்லை.

இதேவேளை, பந்துவீச்சைப் பொறுத்த வரையில் ட்ரெண்ட் போல்ட், லொக்கி பெர்கியூசன் எனப் பலமானதாகவே காணப்படுகின்றது. முன்னரைப் போல ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் டிம் செளதி தற்போது இல்லா விட்டாலும், மற் ஹென்றியின் வேகத்தை விட டிம் செளதியின் அனுபவத்தைக் கருத்திற் கொண்டு அவரையே மூன்றாவது வேகப்பந்துவீச்சாளராக நியூசிலாந்து களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கடந்த இரண்டாண்டுகளாகவே ட்ரெண்ட் போல்ட், இனிங்ஸின் ஆரம்பப் பகுதிகளில் விக்கெட்டுகளைக் கைப்பற்றுவதுடன், அதே போன்றதொரு பணியை மற் ஹென்றியும் ஆற்றுவதுடன், இனிங்ஸின் இறுதிப் பகுதிகளில் ஓட்டங்களைக் கட்டுப்படுத்தும் பணியை லொக்கி பெர்கியூஸன் சிறப்பாக ஆற்றுகையிலும், நியூசிலாந்தை ஓரளவு ஒத்ததாகக் காணப்படும்

இங்கிலாந்து ஆடுகளங்களிலும் அவர்கள் அதே பெறுபேற்றை பிரதிபலிப்பர் என நியூசிலாந்து எதிர்பார்க்கப்படுகிறது. தவிர, ஏனைய அணிகளின் புறச்சுழற்பந்துவீச்சாளர்கள் ஆற்றும் பணியை தமக்கு இஷ் சோதியும் ஆற்றுவார் என நியூசிலாந்து எதிர்பார்க்கிறது.

கார்டிஃப்பில் இலங்கை நேரப்படி அடுத்த மாதம் முதலாம் திகதி இடம்பெறவுள்ள இலங்கைக்கெதிரான போட்டியுடன் தமது உலகக் கிண்ணத் தொடரை நியூசிலாந்து ஆரம்பிக்கின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .